சென்னையின் மூன்றாவது பெண் மேயர். முதல் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரியா ராஜன். இதற்கு முன்பு சென்னை மாநகராட்சிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தாரா செரியன், தி.மு.க சார்பில் காமாட்சி ஜெயராமன் ஆகியோர் பெண் மேயர்களாக இருந்துள்ளனர். ஆனால், 1971-72 காலகட்டத்திற்குப் பிறகு சென்னை மாநாகராட்சி மேயர் பொறுப்பை பெண்கள் ஏற்கும் நிலை வரவே இல்லை. இந்த நிலையில், 28 வயதான பிரியா ராஜன் அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் உறவினர். பிரியாவின் தந்தை ராஜனும் தி.மு.க நிர்வாகியாக உள்ளார். பெரம்பூர் பகுதியின் தி.மு.க துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் பிரியாவின் தந்தை.

18 வயதில் தி.மு.க உறுப்பினர்
தற்போது மேயர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியா ராஜன், 18 வயதில் இருந்து தி.மு.க-வில் உறுப்பினராக உள்ளார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். தி.மு.க தலைவர் கலைஞரின் வெறிபிடித்த பக்தர் செங்கை சிவம். அவருடைய உறவினர் என்பதும், அமைச்சர் சேகர்பாபுவின் பரிந்துரையும் பிரியாவிற்கு கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. மங்களபுரம் வார்டில் போட்டியிட்ட பிரியா ராஜன் வெற்றி பெற்றார். ஆனால், மேயர் பொறுப்பிற்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் கடும் போட்டி நிலவியது. கட்சியின் சீனியர்கள் ஒருபக்கம் என்றால், சென்னை தி.மு.க மாவட்டச் செயலாளர்களான அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் ஒரு பக்கமும் முட்டிக் கொண்டனர்.
இவர்களில், மேயர் போட்டியில் முன்னணியில் இருந்தது, 100-வது வார்டில் வெற்றி பெற்ற வசந்தி பரமசிவம், 159-வது வார்டில் போட்டியிட்ட மு.ஆ.ந ந்தினி மற்றும் 74-வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன் ஆகியோர் தான். இவருக்கு அமைச்சர் சேகர்பாபுவின் பரிந்துரையைவிட செங்கை சிவத்தின் உறவுக்கார பெண் என்பதும், பெரம்பூர் தி.மு.க நிர்வாகி ராஜனின் மகள் என்பதும் கூடுதலாக கை கொடுத்த து. அதையடுத்தே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரியா ராஜன் பெயரை டிக் செய்துள்ளார்.

இவருக்குத் திருமணமாகிவிட்டது. இவரது கணவர் பெயர் ராஜா. அவர் தனியார் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள பிரியா ராஜன், வடசென்னைப் பகுதியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுவேன் என்று தன் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை கட்சியிலும், சென்னை மக்களுக்கும் யாரென்றே அடையாளம் தெரியாத பிரியா ராஜன் மீது இப்போது லைம் லைட் வெளிச்சமும், கூடுதல் பொறுப்புகளும் விழுந்துள்ளது. இரண்டையும் எப்படி சமாளித்து அவர் வெற்றிகரமான மேயராகத் திகழப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
Also Read – வடசென்னையிலிருந்து மாநகராட்சியின் முதல் மேயர்… யார் இந்த பிரியா ராஜன்?
very nice publish, i definitely love this web site, keep on it