இயக்குர்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றில் பல வலிகளுக்கும் இடம் இருக்கும். வலிகள் தீண்டாத கலைஞன் இல்லை; கலைஞன் பார்க்காத வலிகளும் இல்லை. பேசப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர், நடிகர், எழுத்தாளர், கவிஞர், பாடகர் இப்படி இன்னும் திரைத்துறையில் என்னவெல்லாம் அறிவுசார் விஷயங்கள் இருக்கிறதோ… அத்தனை பாக்ஸ்களையும் டிக் செய்தவர் தம்பி ராமையா. இயக்குநர்கள் மணிவாசகம், பி.வாசு உள்ளிட்டவர்களிடம் பணியாற்றி, படங்களை இயக்கி, இன்று குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், நடிகர் தம்பி ராமையா. ஆனாலும், இவரது சினிமா பயணம் அவ்வளவு எளிதாகத் தொடங்கிவிடவில்லை. பல சோதனைகளைக் கடந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
11 வயதில் நாடக என்ட்ரி!
தம்பி ராமையா சின்ன வயசுல இருந்தே நாடகப் பிரியர். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, ஊரில் நடைபெற்ற கதம்ப நாடகத்தில் பஃபூன் வேடமிட்டு நடித்தார். புதுக்கோட்டை மாவட்டம், சங்கரதாஸ் நாடக மன்றத்தில் 5 ரூபாய் பணத்தைக் கட்டிவிட்டு மெம்பராகிவிட்டார். முதல்முதலாக பஃபூன் வேடம், வயதோ 11, ஆனால் ஜோடியாக நடித்த பெண்ணுக்கு வயது 20. அந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் பாடலை எடுத்து வரிகளை மட்டும் மாற்றிப்பாட மக்கள் கரவொலியால் நடிப்பு எனும் தீ அவருக்குள் பற்றியிருக்கிறது.
ரிஷப்சனிஸ்ட் டு ஹோட்டல் மேனேஜர்!
இயக்கம், நடிப்பு என ஆசையோடு சென்னை வந்தவரை சினிமா உலகம் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. சிறிது மாத இடைவெளிக்குப் பின்னர், அப்பாவின் நண்பர் மூலமாக வால்டாக்ஸ் சாலையில் இருந்த நட்சத்திர ஹோட்டலில் ரிஷப்சனிஸ்ட்டாக வேலைக்குச் சேர்ந்தார். ரிஷப்சனிஸ்ட், கிச்சன், கேஷியர், டெலிபோன் ஆபரேட்டர் என பல வேலைகள் பார்த்தவர், இறுதியில் இண்டர்நேஷனல் ஹோட்டலுக்கு மேனேஜரானார். அங்கிருந்து கொண்டே சினிமா வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார், தம்பி ராமையா.
வசனத்தோடு… இயக்கம்!
இயக்குநர் பி.வாசுவின் உதவி இயக்குநர் சந்திரநாத் இயக்கத்தில் வீரபாண்டி கோட்டையிலே படத்தில் பாடல் எழுத கமிட்டானார், தம்பி ராமையா. பாடல் எழுதி முடிக்க, அது அனைவருக்கும் பிடிக்க, இசையமைப்பாளருக்கு கவிஞர் வாலி பாடல் எழுதினால்தான் பிடிக்கும் என அடம்பிடித்தார். அதனால், பாடல் எழுத கமிட்டானவர், வசனம் எழுதினார். சூட்டிங் ஸ்பாட்டில் விறுவிறுவென வசனம் சொல்லிக் கொடுத்த பாணியைக் கவனித்த ராதாரவி தனக்கு தெரிந்தவர் மூலமாக சீரியல் வசனங்களை எழுதும் வாய்ப்பை வாங்கிக் கொடுக்கிறார். அதிலிருந்து 11 சீரியல்களுக்கு கதை வசனம் எழுதினார், தம்பி ராமையா. அதன் பின்னர் இயக்குநர் பி.வாசுவிடம் மலபார் போலீஸ் படத்தில் பணியாற்றினார்.
ஒரு முறை மாப்பிள்ளைக் கவுண்டர் படப்பிடிப்பின்போது, தம்பி ராமையா படப்பிடிப்பில் துறுதுறுவென வேலை செய்வதைக் கண்ட பிரபு கூப்பிட்டு ‘நீங்க வேலை செய்றதை கொஞ்ச நாளா பார்க்குறேன். உங்களை மாதிரித்தான் ஆர்.வி உதயகுமாரும் வேலை பார்த்தார். அவர் இன்னைக்கு இயக்குநரா இருக்கார். நீங்க நிச்சயம் ஒரு நல்ல இயக்குநரா வருவீங்க’ என்று சொல்லியிருக்கிறார். 2001-ம் வருடம் வெளியான மனுநீதி சினிமா மூலம் தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கினார். படம் காமெடிக்கு முக்கியத்துவமும், பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும் வசனங்களால் நிறைத்திருப்பார், தம்பி ராமையா. அதேபோல வடிவேலுவை வைத்து இயக்கிய இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தில் ,’நாம் இருவரும் பள்ளி கொள்வோமா?’ என்று வடிவேல் கேட்பதற்கு ‘பல்லியை எல்லாம் கொல்லக்கூடாது’ என நாயகி காமெடியாக பதில் சொல்லும்படி ஒரு காட்சி இருக்கும். இரட்டை அர்த்த வசனம் வரும் அந்த காட்சியை தனது இலக்கிய வசனங்களால் அத்தனை லாவகமாகக் கையாண்டிருப்பார், தம்பி ராமையா.
தேசிய விருதுக்கான நடிப்பு!
மலபார் போலீஸ் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி நடிகர் வடிவேலுவுடன் சிறு சிறு வேடங்களில் நடித்து நடித்துவந்தார், தம்பி ராமையா. சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்தாலும் ஒரு பிரேக் கிடைக்காமல் தவித்து வந்தவருக்கு மைனா சரியான அடையாளம் கொடுத்தது. அத்தனை காலம் நடிப்பை தனக்குள் அடக்கி வைத்திருந்தவருக்கு காமெடி, சென்டிமென்ட், வன்மம் என பல பரிமாணங்கள் அடங்கிய ஒரே கேரக்டர். தனது நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார், தம்பி ராமையா. குறிப்பாக ‘ஒரு லட்டுக்கு ஆசைப்பட்டு, ஒரு அக்யூஸ்ட்டை தப்பிக்க வச்சிட்டியேடா ராமையா, விவரம் லீக் ஆச்சுன்னா வெரலைப் பிதுக்கி வெஞ்சனம் வச்சுப்புடுவாங்க’ என மைண்ட் வாய்ஸ் கேட்கும் இடத்தில் முகபாவனைகளால் அக்காட்சியைக் கலகலக்க வைத்திருப்பார். கைதியைத் தேடி இன்ஸ்பெக்டருடன் காட்டுக்குள் போகும் காட்சி முழுவதும் தனது நடிப்பால் சிரித்து வெடிக்க வைத்திருப்பார், தம்பி ராமையா. அதேபோல தனக்கு குழந்தை இல்லை என கண்ணில் கண்ணீர் கொப்பளிக்க கிளைமேக்ஸில் முகத்தில் சிரிப்போடு பேசும் தம்பி ராமையா அழுகவும் வைத்திருப்பார். சார் உங்களை விடவும், எனக்கு இவன் மேல காண்டு அதிகமா இருக்குனு சொல்ற சீனுல முகத்துல அவ்ளோ வன்மம் தெரித்திருக்கும். இப்படி குணச்சித்திரமா நடிப்புல விளையாடிய அவருக்கு தேசிய விருது அங்கீகாரமும் கிடைத்தது.
அதேபோல ஜில்லாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார் தம்பி ராமையா. தன் தங்கை திருமணத்தில விஜய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சீன் அது. நீயெல்லாம் போர்டைப் பார்த்து கல்யாணத்துக்கு வந்தவன் தானே.. போய் அங்கிட்டு சாப்டு’ என ஒருவரை துரத்தி காமெடி செய்திருப்பார் தம்பி ராமையா. அடுத்த நொடி விஜய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கண்ணீர் ததும்ப குரல் உடைந்து, ‘மாப்ள, நீ ஏன்யா இங்க உட்கார்ந்து சாப்பிடுற இது நம்ம வீட்டுக் கல்யாணம்யா..’ என அழைக்கும் அந்த சீனிலும் தனது நடிப்புத் திறமையை நிரூபித்திருப்பார். அதேபோல கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திலும் தோற்றுப்போன உதவி இயக்குநராக நடிப்பின் வேறொரு பரிமாணத்தை தொட்டிருப்பார். காமெடி செய்து கொண்டிருக்கும்போதே உடனே சீரியஸாக நடிப்பது கொஞ்சம் சவாலான விஷயம். அதை சாமர்த்தியமாக கையாண்டிருப்பார், தம்பி ராமையா.
உடல்மொழி காமெடியன் டு பாடகர்!
வாகை சூடவா, ஒஸ்தி, வேட்டை, அம்புலி, கழுகு, கும்கி, அப்பா, தொடரி, விஸ்வாசம் என காமெடியிலும் கலந்து கட்டி அடித்திருப்பார், தம்பி ராமையா. தம்பி ராமையாவின் காமெடிக்கு முக்கியமான காரணம், வசனத்துக்கு ஏற்ற உடல்மொழியை திரையில் கொடுப்பதுதான். சிறுவயதில் மேடை நாடகங்களில் நடித்தபோதே தானாக பாடல்கள் இயற்றி அதற்கேற்ற தாளங்களை தானே அமைத்துப் பாடுவார். அதேபோல சினிமாவில் பேய்கள் ஜாக்கிரதை படத்தில் ஒபாமா பாடலை பாடியிருக்கிறார், தம்பி ராமையா.
வில்லாதி வில்லன்!
காமெடி மட்டுமே இவருக்கு வரும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, சாட்டை மூலம் வில்லத்தனமும் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரிதான் என்று ஜஸ்ட் லைக் தட்டுனு லெஃப்ட் ஹேண்ட்ல டீல் செய்து கலக்கியிருப்பார் தம்பி ராமையா. அரசு பள்ளியின் மூத்த ஆசிரியர், உள்ளூர்க்காரன் என்ற கர்வம், அவமானப்படும்போதெல்லாம் கோபத்தை வெளிப்படுத்துவது என உச்சக்கட்ட வில்லத்தனத்தை காட்டியிருப்பார். கிளைமேக்ஸில் கத்தி எடுத்து இடுப்பில் சொருகி வைத்திருக்கும் அளவுக்கு வில்லனாக ஜெயித்திருப்பார், தம்பி ராமையா.
Also Read: ரிலாக்ஸ் செய்ய சுந்தர் பிச்சை யூஸ் செய்யும் NSDR மெத்தட்… அப்படின்னா என்னனு தெரியுமா?