’என் இதயத்தில் ரத்தம் வடிந்தது. நான் கடும் சோகத்தில் இருந்தேன். எனது மோகினியாட்டத்தைப் பாதியில் நிறுத்தச் சொன்னது என்னை அவமதித்தது மட்டுமல்ல, கேரள கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு கலையை அவமதித்தது போலாகும்’ – கேரளாவில் புகழ்பெற்ற மோகினியாட்டக் கலைஞர் நீனா பிரசாத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் இவை… என்ன நடந்தது.. பின்னணி என்ன?
மோகினியாட்டக் கலைஞர் நீனா பிரசாத்
கேரளாவின் புகழ்பெற்ற கலைவடிவமான மோகினியாட்டக் கலைஞர் நீனா பிரசாத். மோகினியாட்டம் மட்டுமல்லாது பரத நாட்டியம், குச்சிப்புடி மற்றும் கதகளி ஆடுவதிலும் வல்லவர். திருவனந்தபுரத்தில் ‘Bharthanjali Academy of Indian Dances’ என்ற அகாடமியை நடத்தி வரும் இவர், சென்னையில் மோகினியாட்டத்துக்கென பிரத்யேகமாக ‘சௌகந்திகா’ என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பாலக்காடு அரசு மோயன் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின் ஒருபகுதியாக நீனா பிரசாத்தின் மோகினியாட்டத்துக்கு கடந்த 19-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது, போலீஸார் நடனத்தைப் பாதியில் நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். விழா ஏற்பாட்டாளர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மோகினியாட்டம் நிகழ்ச்சியைத் தொடர போலீசார் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அந்தப் பள்ளியின் பின்புறம் குடியிருந்து வரும் மாவட்ட நீதிபதி கலாம் பாட்ஷா கொடுத்த புகாரின் பேரிலேயே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நிகழ்ச்சியின்போது இசை அதிக ஒலி எழுப்பியதாகவும் இதனால், தனக்குத் தொந்தரவு ஏற்பட்டதாகவும் நீதிபதி போலீஸாரிடம் சொன்னதாகத் தெரிகிறது. ஆனால், அந்த ஒலி அதிக சத்தம் எழுப்பவில்லை; குறைவாக வைக்கப்பட்டிருந்தது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேடைக்கு அருகே பார்வையாளர்களை அமரவைத்து, இசையின் அளவைக் குறைவாக வைத்துக் கொண்டால், நிகழ்ச்சியைத் தொடர அனுமதிக்கலாம் என்றும் நீதிபதி சொன்னதாகச் சொல்கிறார்கள். இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் நீனா பிரசாத், ‘ஒரு கலைஞராகவும் பெண்ணாகவும் அன்று நான் அவமானப்படுத்தப்பட்டேன். இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு நிலையை நான் எந்த இடத்திலும் அனுபவித்ததில்லை. இது கலையை அவமதிக்கும் செயல். எனது எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். கேரள எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜ.க மாநிலத் தலைவர் முரளீதரனும் இந்த சம்பவத்துக்குக் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
நீதிபதி கலாம் பாஷா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. கடந்த 2021-ல் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகிய பாஷாவின் மனைவி, அவர் முத்தலாக் சொல்லி தன்னை விவாகரத்து செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று முறையிட்டிருந்தார். ஆனால், அதை விசாரித்த நீதிமன்றம், முன்னரே உரிய அனுமதியோடு முத்தலாக் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது.
Also Read – இரவில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வியர்க்கிறதா… இந்த 5 காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்!