சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி ஐபிஎஸ், வடசென்னை பகுதிகளில் நள்ளிரவில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ரம்யா பாரதி ஐபிஎஸ்
பெருநகர சென்னை காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக இருப்பவர் ரம்யா பாரதி ஐபிஎஸ். 2008 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், வட சென்னை பகுதியில் இரவு நேர ரோந்துப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து, நேற்று இரவு 2.45 மணியளவில் தொடங்கி அதிகாலை 4.15 மணி வரையில் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு அதிகாரியுடன் (PSO) கிட்டத்தட்ட 9 கி.மீ பயணம் மேற்கொண்டிருக்கிறார். போலீஸ் உடையைத் தவிர்த்து சாதாரண உடையில் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அவர், சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.
சைக்கிள் பயணம்
வாலஜா சாலையில் தொடங்கி முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், எஸ்பிளனேடு சாலை, குறளகம், என்.எஸ்.சி போஸ் சாலை, கோவிந்தப்பன் நாயக்கன் தெரு, ஆவுடையப்பன் தெரு, எண்ணூர் சாலை, ஆர்.கே.நகர் வழியாக திருவொற்றியூர் சாலை வரை பயணித்தார். அந்த சாலைகளில் இரவு நேர ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரிடம் நேரில் ஆய்வு செய்து, அவர்களின் லெட்ஜர் நோட்டிலும் ஆய்வு குறித்து பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து பேசிய ரம்யா பாரதி ஐபிஎஸ், `இந்த அனுபவம் புதுமையானது. வட சென்னையின் அதிகாலை நேர செயல்பாடுகள், மக்களின் நடவடிக்கைகள் குறித்து நிறையவே தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
Also Read – 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது ஏன்… அடுத்தது என்ன?