நடராஜ் பென்சிலுக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. 90ஸ் கிட்ஸைப் பொறுத்தவரை சாதாரணமானவர்கள் பயன்படுத்தும் பென்சில் ‘நடராஜ்’. வசதியானவர்கள் பயன்படுத்தும் பென்சில் ‘அப்சரா’ ஆனால் இரண்டையும் தயாரிப்பது ஒரே கம்பெனிதான் என்பது தெரியுமா? நடராஜ் பென்சில் தயாரிக்க மரங்கள் எங்கிருந்து வருகிறது? புல்வாமா என்றாலே நமக்கு தீவிரவாத தாக்குதல்தான் நினைவுக்கு வரும். நடராஜின் கதை தெரிந்தால் உங்களுக்கு இனி புல்வாமா என்றாலே பென்சில் ஞாபகம்தான் வரும்.
சுதந்திரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே இந்தியா பென்சில் உற்பத்தி செய்துவருகிறது. ஆனால் எல்லாமே குடிசைத் தொழில்போல அங்காங்கே சிறிய அளவில் நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலான மக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பென்சிலைத்தான் பயன்படுத்தினார்கள். அந்த காலத்தில் பெரும்பாலும் ஜெர்மனி, UK, ஜப்பான் நாடுகளில் இருந்துதான் இந்தியா பென்சிலை இறக்குமதி செய்துகொண்டிருந்தது. 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் சூடுபிடித்தது. இந்தியாவுக்கு பென்சில் தரும் நாடுகள் போரில் தீவிரமாக இருந்ததால் இறக்குமதியின் அளவும் குறைந்தது. ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்துகொண்டிருந்த இறக்குமதி 1944 ஆம் ஆண்டு 2 லட்சமாகக் குறைந்தது. இது இந்திய பென்சில் உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக அமையவே, உள்நாட்டில் தயாரிக்கும் பென்சில்களின் பயன்பாடு அதிகமாகிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகும் இந்தியா பென்சில் இறக்குமதியைக் குறைத்துக்கொண்டது. இந்த சமயத்தில்தான் முதன்முதலாக ஒரு பெரிய நிறுவனம் இந்தியாவில் தலையெடுத்தது.
1958ஆம் ஆண்டு பி.ஜே. சங்க்வி, ராம்நாத் மெஹ்ரா, மன்சூக்கனி என்ற மூன்று நண்பர்கள் ஏற்கனவே ஜெர்மனியில் வர்த்தகம் கற்றிருந்தவர்கள் என்பதால் இந்தியாவில் பென்சில்களின் தேவையைப் புரிந்துகொண்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அதுதான் ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனம். பென்சில்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, கார்பெண்டரில் இருந்து கலெக்டர் வரை எல்லாருக்குமே தேவை என்பதை உணர்ந்திருந்தது இந்த நிறுவனம். அதனால், எளியவர்கள் பயன்படுத்த மிகக்குறைந்த விலையில் சிவப்பு நிறத்தில் நடராஜ் பென்சிலையும் ப்ரொஃபஷனல்ஸ் பயன்படுத்த தரமான அப்சரா பென்சிலையும் அறிமுகப்படுத்தியது. இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகும் இந்த பென்சில் இன்று உலகம் முழுவதும் 50 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
ஒரு நாளைக்கு 80 லட்சம் பென்சில்களைத் தயாரிக்கிறது ஹிந்துஸ்தான் பென்சில். இதைத்தயாரிக்க 4,000-5,000 மரங்கள் தேவை. இவ்வளவு மரங்கள் எங்கிருந்து கிடைக்கிறது? இரண்டு விதங்களில் மரங்களைப் பெறுகிறது. ஒன்று தனியாக காடுகளை உருவாக்கி மரங்களை வளர்த்து வருகிறது ஹிந்துஸ்தான் நிறுவனம். இன்னொன்று இதற்கென்று இருக்கும் சில விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது. இப்படி இவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்யும் ஒரு ஊர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இருக்கும் ஒக்கூ. இந்த ஊருக்கு இன்னொரு பெயர் ‘பென்சில் வில்லேஜ்’. காரணம் இந்தியாவில் தயாராகும் 90 சதவீதம் பென்சில்களுக்கு மரம் இங்கிருந்துதான் கிடைக்கிறது. இங்கு வளரும் மரங்கள் 150 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. குறைந்தது 7 ஆண்டுகள் வளர்ந்தால் மட்டுமே அதைப் பென்சில் தயாரிக்க பயன்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்கள் வெட்டப்படுகிறதோ, அதைவிட கூடுதலான மரங்கள் நடவேண்டும் என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறது ஹிந்துஸ்தான் பென்சில்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஆன நடராஜ் பென்சிலின் வரலாறுக்குப் பின்னால் இரண்டாம் உலகப்போர் வரை பின்னணி இருப்பது ஆச்சர்யம்தான்.
Also Read – பூமர் பபுள்கமின் வரலாறு என்ன… எப்படி இத்தனை வருடம் விலை ஏறாமல் இருக்கிறது?
I like this web site it’s a master piece! Glad I detected this ohttps://69v.topn google.Blog monetyze