நாம் கூல்டிரிங்ஸ் அருந்தப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உங்கள் பற்களுக்கும், உடலின் ஹார்மோன் சமநிலையையுமே பாதிக்கும் என்பது தெரியுமா.. அப்படி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களின் 4 தீமைகளைப் பற்றிதான் நாம பார்க்கப் போகிறோம்.
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி நாம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அதற்கு எதிரான நடவடிக்கைகளை முழுவீச்சில் நாம் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். மிக நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் நுரையீரலில் இருப்பதை இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏன் இவை கடலின் ஆழத்திலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. World Wildlife Organization அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி 90% கடல் ஆமைகள், கடல் பறவைகள் உடலில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மனிதர்களுக்கு எத்தனையோ தீங்குகளை விளைவிக்கின்றன. அப்படியான 4 தீங்குகளைப் பற்றிதான் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.
பற்சிதைவு
பற்சிதைவு மற்றும் பற்களில் துவாரங்கள் ஏற்படுவது உள்ளிட்ட பல உடல் பிரச்னைகள் ஜங்க் ஃபுட்களாலும் கார்பனேற்றம் செய்யப்பட்ட திரவ உணவுகளாலும் நமக்கு ஏற்படுகின்றன. இப்படியான கூல்டிரிங்ஸ்களை பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தி நாம் அருந்தும்போது, அவை பற்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கின்றன என்பதே உண்மை. பற்களின் எனாமல் எனப்படும் பாதுகாப்புக் கவசத்தைக் கபளீகரம் செய்யும் இவை, பற்சிதைவு மற்றும் பற்களில் துவாரங்கள் ஏற்படுவதையும் அதிகரிக்கச் செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடல் எடை அதிகரிப்பு
ஸ்ட்ராக்கள் உங்கள் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ்களை நீங்கள் ஸ்ட்ராக்கள் மூலம் அருந்துகையில், அது அதிகப்படியான கூல்டிரிங்ஸை அருந்த துணைபுரியும் என்கிறது ஒரு அமெரிக்க ஆய்வு. அதேபோல், அப்படியான கூல்ட்ரிங்ஸ்களின் வாசனையை இவை மட்டுப்படுத்துவதால், வழக்கமாக நீங்கள் அருந்தும் அளவை விட அதிகமாக அருந்தத் தூண்டப்படுவீர்கள். இப்படியாக, உங்கள் எடை அதிகரிக்க இவை உதவி புரிகின்றன.
ஹார்மோன் குறைபாடு
ஸ்ட்ராக்கள் பாலிபுரோப்பலீன் எனும் வேதிப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுபவை. இந்த ஸ்ட்ராக்கள் அதிகப்படியான வெப்பத்துக்கு ஆட்படும்போது, அதிலிருக்கும் வேதிப்பொருட்கள் வாய் வழியாக மனித உடலுக்குள் நுழைகின்றன. இவை, மனித உடலில் ஹார்மோன் அளவு சமநிலையையும் கடுமையாகப் பாதிக்குமாம்.
சுருக்கம்
ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தி கூல்டிரிங்ஸ்களை அருந்தும்போது, அடிக்கடி உங்கள் வாயைக் குவிக்க வேண்டி வரும். இப்படியான தொடர் நிகழ்வு உங்கள் சருமத்தில் நிரந்தர சுருக்கத்தை ஏற்பட வழி வகுக்கும். இதனால், வழக்கத்துக்கு மாறாக உங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கம் வயதான தோற்றத்தை அளிக்கும்.
Also Read – Sleep Apnea: தூக்கத்தில் மூச்சுத் திணறல்… 5 பழக்க,வழக்கங்கள் மூலம் தவிர்க்கலாம்!