சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்தியது சர்ச்சையாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
அயோத்யா மண்டபம்

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஸ்ரீராம் சமாஜ் என்கிற அமைப்பு 1954-ம் ஆண்டு அயோத்யா மண்டபத்தைக் கட்டி நிர்வகித்து வருகிறது. இந்த மண்டபத்தில் ராமர், சீதை மற்றும் ஹனுமன் படங்கள் வைக்கப்பட்டு, அவற்றுக்குப் பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிர்வாகத்தின் கீழ் பள்ளி ஒன்றும் திருமண மண்டபம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றன. இதில், முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி, அயோத்யா மண்டபத்தைக் கையகப்படுத்துவதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜின் தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வி.எம்.வேலுமணி, கடந்த மார்ச் 31-ம் தேதி தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தலாம் என்று உத்தரவிட்டு, ஸ்ரீராம் சமாஜ் தொடந்த வழக்கை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த அமைப்பு சார்பில், அது கோயில் இல்லை என்றும், மண்டபம்தான் என்றும் வாதிடப்பட்டது. அறநிலையத் துறைக்கு வந்த புகாரில் இருப்பதுபோல் ஒரு குடும்பத்தினரால் அது நடத்தப்படவில்லை என்றும், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் 15 நபர்களைக் கொண்டே நிர்வகிக்கப்படுகிறது.திருமண மண்டபம் புக்கிங் செய்யப்பட்டிருப்பதால், அங்கு வருபவர்களைத் தடுக்கக் கூடாது என்று அந்த அமைப்பு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதங்களை முன்வைத்தார். இதற்கு தமிழக அரசு சார்பில், பள்ளி செயல்படவோ, திருமண மண்டபங்களுக்கு வருபவர்களோ தடுக்கப்பட மாட்டார்கள் என்று பதில் வாதம் வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர், இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி விசாரணையை ஒத்திவைத்திருக்கின்றனர்.
போராட்டமும் அரசின் விளக்கமும்…
அயோத்யா மண்டபத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர். அதை எதிர்த்து பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்து அமைப்பினரும் மண்டபம் இருந்த பகுதியில் திரண்டனர். மண்டபத்தைப் பூட்டி வைத்துப் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க பொதுசெயலாளர் கரு.நாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் உமா உள்ளிட்ட பா.ஜ.கவினர் 75 பேர் மீது அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிந்திருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேரவையில் எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, அயோத்யா மண்டபத்தைக் கையகப்படுத்தியது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் என்று விளக்கம் கொடுத்தார். அந்த மண்டபத்தை நிர்வகிப்பவர்கள், பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்ததையும் உயர் நீதிமன்றம், தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், `மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தி, தங்கள் கட்சியைப் பலப்படுத்த பா.ஜ.க நினைத்தால், அது நடக்கவே நடக்காது’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
Also Read – சென்னை வீடு/இடம் வாங்குவதற்கு முன்னர் செக் பண்ண வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?