Karnan - Kodiyankulam Violence

கர்ணன் – 1995 கொடியன்குளம் கலவரத்தின் பின்னணி – என்ன நடந்தது?

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த கர்ணன் படம் கொடியன்குளம் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள கொடியன்குளம் கிராமத்தில் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி புகுந்த காவலர்கள், மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை ஏவினர். அத்தோடு வீடுகளையும் அதிலிருந்த பொருட்களையும் சூறையாடினர். போலீஸ் வருகை குறித்த தகவலை முன்னரே அறிந்ததால், பெரும்பாலான ஆண்கள் ஊரைக் காலி செய்ததாகச் சொல்கிறது கே.ஏ.மணிக்குமார் எழுதிய ஆய்வுக் கட்டுரை. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிக அளவில் போலீஸ் தாக்குதல்களை எதிர்க்கொண்டதாகவும் சொல்கிறார் மணிக்குமார்.

என்ன நடந்தது?

இந்தக் கலவரத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது இருவேறு சாதிகளைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான். 1995ம் ஆண்டு ஜூலை 26-ல் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தை தங்கவேலு என்பவர் ஓட்டியிருக்கிறார். வீரசிகாமணிபுரம் என்ற கிராமத்தைக் கடந்து பேருந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நடுவக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர்களை ஒதுங்கிப் போகுமாறு சொல்லியிருக்கிறார். ஆனால், இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மீது ஆதிக்க சாதியினர் சாதிரீதியாகத் தாக்குதல் நடத்தினர். நடத்துநரும் தாக்கப்படவே, இது சாதி ரீதியான மோதலாக உருவெடுத்ததாகவும் சொல்கிறது அந்த ஆய்வுக் கட்டுரை.

கர்ணன்

1995-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஜூலை தொடங்கி சுமார் 3 மாதங்களுக்கு மேலாக திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது இந்தக் கலவரம், தென்மாவட்டங்கள் பலவற்றிலும் எதிரொலித்தது. சிவகிரியில் கலவரத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், 7 பேர் படுகாயமடைந்தனர். பாளையங்கோட்டையில் போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியிலும் சீவலப்பேரியிலும் ஆகஸ்ட் மாதத்தில் கலவரம் வெடித்தது. தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரண்டு பிரிவினர் ஆங்காங்கே மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறின. கலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இருதரப்பையும் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1995ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ல் கலவரத்துக்குக் காரணமானவர்களைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் கிராமத்தில் புகுந்த காவல்துறையினர், அங்கிருந்த மக்கள் மீது தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கியிருக்கிறார்கள். வீடுகளைச் சூறையாடி, பெண்கள், குழந்தைகள் என எதிர்ப்பட்டவர்கள் எல்லாம் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளானதாக அப்போதே அரசியல் கட்சிகளால் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆபரேஷசன் வீனஸ் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரம் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்திருக்கிறது. இந்த சம்பவத்தில் இருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தனர். மேலும் பலர் தாக்குதலில் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், அ.தி.மு.க அரசு ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கொடியன்குளம் கிராமத்தினர், தலித் அமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தன. அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பன்னீர்செல்வம், மாவட்ட எஸ்.பி சுனில்குமார் சிங் ஆகியோர் இந்த சம்பவத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். ஆனால், போலீஸ் தரப்பில் வேறு மாதிரியாகச் சொல்லப்பட்டது. `கொடியன்குளம் கிராமத்துக்குச் சென்ற போலீஸாரை வழிமறித்து, கைது செய்யப்பட்டிருந்த தங்கள் கிராமத்தினர் 24 பேரை விடுவிக்க வேண்டும் என கொடியன்குளம் கிராம மக்கள் கோரியதாகவும், அப்போது அது மோதலில் முடிந்தது’ என்றது போலீஸ். போலீஸாருடன் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகளும் இதையே அறிக்கையாக அரசுக்குக் கொடுத்தனர்.

கர்ணன்

அப்போதைய தமிழக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு சார்பில் கிராமத்தினரைச் சந்திக்க வந்த அமைச்சர்கள் கண்ணப்பன், முத்துசாமி, நாகூர் மீரான் ஆகியோரைச் சந்திக்க மக்கள் மறுத்துவிட்டனர். அதன்பிறகு, அப்போதைய டிஜிபி வைகுந்த் கொடியன்குளம் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து, அரசுக்கு அறிக்கை அளித்தார். அவரது அறிக்கையை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்தது தமிழக அரசு. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோமதி நாயகம் தலைமையில் ஒருநபர் ஆணையமும் 1995ம் ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1996ம் ஆண்டு மார்ச்சில் விசாரணை அறிக்கையை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசிடம் அளித்தது.

அதன்பின்னர், ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு ஆணையத்தின் அறிக்கையை கிடப்பில் போட்டது. ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் 1999ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கொடியன்குளம் உள்பட மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திய அந்த அறிக்கையை இப்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்தன. `1995ம் ஆண்டு ஜூலை 30-ல் சிவகிரியிலும் ஆகஸ்ட் 25-ல் சிங்கத்தாகுறிச்சியிலும் ஆகஸ்ட் 31-ம் தேதி கொடியன்குளத்திலும் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடுகளில் தவறேதும் இல்லை. அதேநேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது’ என்று சொன்னது ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை. அந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன்பின்னர் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் கொடியன்குளம் மக்கள் மனதில் ஆறாத வடுவாக இன்றும் நிலைத்திருக்கிறது.

கர்ணன்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த கர்ணன் படம் கொடியன்குளம் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் படத்தில் சம்பவம் நடந்தது 1997ம் ஆண்டின் பிற்பகுதியில் என்று கூறப்பட்டதற்கு தி.மு.க தொண்டர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினர். சம்பவம் நடந்தது அ.தி.மு.க ஆட்சியில், ஆனால், தி.மு.க ஆட்சியில் நடந்ததைப் போல சித்தரித்தது ஏன்?’என்று கேள்வியெழுப்பினர். தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோரிடம் பேசியதைத் தொடர்ந்து அந்த டைட்டில் கார்டு1990-களின் பிற்பகுதியில்’ என்று மாற்றப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top