ஸ்ட்ரீமிங் தளமான Netflix, 3 மாதத்தில் 2 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்?
Netflix
உலக அளவில் பிரபலமான Netflix ஸ்ட்ரீமிங் தளம், 2022 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையை கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் மூன்று மாதத்தில் மட்டும் 2 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்களை இழந்திருக்கிறது. இந்தத் தகவல் வெளியான உடனே நெட்ஃபிளிக்ஸின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. நெட்ஃபிளிக்ஸின் பங்குச் சந்தை மதிப்பு மொத்தமாக 25% அளவுக்குச் சரிவடைந்திருக்கிறது. இந்த கால இடைவெளியில் 2.5 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கூடுதலாகப் பெறுவோம் என்று அந்த நிறுவனம் கணித்திருந்ததற்கு மாறாக நடந்திருக்கும் இந்த சம்பவத்துக்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லலாம்.
என்ன காரணம்?
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போருக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், ரஷ்யாவில் தங்களின் சேவைகளை நிறுத்திக் கொள்வதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்தது. இதனால், 7 லட்சம் சப்ஸ்கிரைபர்களை அந்த நிறுவனம் இழந்தது. அதேபோல், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கொரோனா சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் சப்ஸ்கிரைபர்களை இழந்திருப்பதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா பெருந்தொற்றின் முதல் இரண்டு ஆண்டுகளில் பாஸ்வேர்டுகளை ஷேர் செய்ததும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை அதிகரிக்காததற்குக் காரணம் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
இதுகுறித்து அந்த நிறுவனம், தனது பங்குதாரர்களுக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், “தற்போதைய சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையான 222 மில்லியன் என்கிற எண்ணிக்கையோடு, 100 மில்லியன் அளவுக்கு பாஸ்வேர்டுகளை ஷேர் செய்யப்பட்டிருக்கும் என்று கணிக்கிறோம். அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே இந்த எண்ணிக்கை 30 மில்லியன் என்கிற அளவுக்கு இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறது. அதேபோல், போட்டியாளர்கள் மட்டுமல்லாது டிவி சேனல்களும் கடுமையான போட்டியை அளித்து வரும் நிலையில், இதுவும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதில் முக்கியப் பங்காற்றியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
`டிவி சேனல்கள் மட்டுமல்லாது யூடியூப், அமேசான் பிரைம், ஹூலு போன்ற போட்டியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு போட்டியை அதிகரித்திருக்கிறார்கள். அதேபோல், ஸ்ட்ரீமிங்தான் எதிர்காலம் என்பதை அறிந்துகொண்டு கடந்த மூன்றாண்டுகளில் புதுப்புது ஸ்ட்ரீமிங் தளங்கள் முளைத்திருக்கின்றன. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனம் வளர்ச்சியடைந்திருந்தாலும், 2021-ல் அந்த வளர்ச்சி கொரோனா தாக்கம் அதிகரிப்பால் மந்தமானது’ என்றும் நெட்ஃபிளிக்ஸ் கூறியிருக்கிறது.
அடுத்து என்ன?
தனது சப்ஸ்கிரைபர்களுக்கு விளம்பரங்கள் இல்லாத சேவையைத் தொடரவே நினைப்பதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. அதேநேரம், போட்டியாளர்களான டிஸ்னி பிளஸ் மற்றும் ஹெச்பிஓ போலவே விளம்பரங்களைக் கொண்ட, விலை குறைவான சேவையை வழங்கும் திட்டமும் இருக்கிறது என அதன் தலைமை செயல் அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் குறிப்பால் உணர்த்திருக்கிறார். மேலும், பாஸ்வேர்டு ஷேரிங்கைப் பொறுத்தவரை பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறது.
Also Read –