தனது டைமிங் சென்ஸால் எஸ்.ஆர்.ஹெச்சின் மிடில் ஓவர் ஆயுதமான உம்ரான் மாலிக் பந்துவீச்சை எளிதாகக் கையாண்டு சி.எஸ்.கே ரன்குவிப்புக்கு அதன் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய பங்காற்றினார்.
Ruturaj Gaikwad
சி.எஸ்.கேவின் ஸ்டார் ஓபனிங் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் எஸ்.ஆர்.ஹெச்சுக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு முன்பாக ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். சரியான ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த அவர், நேற்றைய போட்டியில் தனது வழக்கமான ஸ்ட்ரோக் பிளேவில் அசத்தினார். 57 பந்துகளை எதிர்க்கொண்ட அவர், 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களோடு 99 ரன்கள் எடுத்தார்.
ஸ்லோ ஸ்டார்ட்
வழக்கம்போல மெதுவாக இன்னிங்ஸைத் தொடங்கிய கெய்க்வாட், அதிகம் ரன் குவித்தது மிடில் ஓவர்களில்தான். ஸ்லோவான புனே பிட்சைக் கணித்து, அதற்கேற்ப டைமிங்கில் அசத்திய அவர், எஸ்.ஆர்.ஹெச்சின் கேம் பிளானைத் தகர்த்தெறிந்தார் என்றே சொல்லலாம். புவனேஷ்வர் குமார், நடராஜன், ஜென்சன், உம்ரான் மாலிக் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள்தான் அந்த அணியின் பலமே. குறிப்பாக, மிடில் ஓவர்களில் உம்ரான் மாலிக், டெத் ஓவர்களில் நடராஜன் என அந்த அணியின் கேம் பிளான் ரொம்பவே சிம்பிள். இதில், 7-14 என்ற மிடில் ஓவர்களில் இதுவரை 12 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் உம்ரான் மாலிக், இந்த ஐபிஎல் சீசனில் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் வேகப்பந்துவீச்சாளராவார்.
நேற்றைய போட்டியில் இந்த கேம் பிளானை உடைத்து எஸ்.ஆர்.ஹெச்சுக்கு பலத்த அடி கொடுத்தார் கெய்க்வாட். இன்னிங்ஸின் எட்டாவது ஓவரை உம்ரான் மாலிக் வீச வந்த போது, கெய்க்வாட் 23 பந்துகளில் 28 ரன்கள் என்கிற ஸ்டேட்டஸில் இருந்தார். முந்தைய போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியிருந்த மாலிக்கின் முதல் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி எடுத்தார். மணிக்கு 154 கி.மீ வேகத்தில் பந்துவீசி, இந்த ஐபிஎல் சீசனில் Fastest Bowler என்கிற பெருமை பெற்றிருந்த மாலிக், முதல் ஓவரை வீச வந்த போது கெய்க்வாட்டுக்கு எஸ்.ஆர்.ஹெச் ஃபீல்ட் செட் செய்திருந்தது எல்லாமே கீப்பருக்குப் பின்னால்தான். அதாவது, வேகமாக வீசுவார் என்பதால் அதிகம் எட்ஜ் ஆகவே வாய்ப்பிருக்கிறது என தப்புக் கணக்குப் போட்டு ஃபீல்ட் செட் செய்திருந்தார் கேன் வில்லியம்சன்.
ஆனால், நடந்ததோ வேறு. உம்ரான் மாலிக் 145 கி.மீ வேகத்துக்கு மேல் வீசிய பந்துகளை அநாசயமாக தன்னுடைய கிளீன் ஸ்ட்ரைக்காலும் ப்யூர் டைமிங்காலும் பவுண்டரி லைனை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தார் ருதுராஜ் கெய்க்வாட். உம்ரான், வீசிய 10-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், 12-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ரன் ரேட் வேகத்தை அதிகப்படுத்தினார். உம்ரான் வீசிய முதல் 3 ஓவர்களில் மட்டுமே 40 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். கெய்ல், ரஸல், பொல்லார்ட் போன்று பவர் ஹிட்டிங் இல்லாவிட்டாலும் டைமிங்கில் ரைமிங்காக சம்பவம் செய்ய முடியும் என்று எஸ்.ஆர்.ஹெச்சுக்கு பாடம் எடுத்திருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட். இந்தப் போட்டியில் 202 ரன்கள் குவித்த சி.எஸ்.கே, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.