ஐஸ்கிரீம்

உலகத்தோட முதல் ஐஸ் க்ரீம் ரெசிப்பி தெரியுமா?

இப்போ நான் சொல்லப்போறது கொஞ்சம் ரேசிஸ்டா இருந்தாலும் மன்னிச்சுக்கோங்க… கோவிட் மட்டுமில்ல, முதல்முதல்ல சீனா இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துன விஷயங்கள் நிறைய இருக்கு. பட்டம், பட்டாசு, ஐஸ்க்ரீம்னு வரிசையா சொல்லலாம். கத்திரி வெயில்ல மண்டை காயுது, இப்போ பட்டாசு, பட்டம் விடலாம்னு சொன்னா காண்டாயிருவீங்க… கொஞ்சம் குளு குளுனு ஐஸ் க்ரீம் பத்திப் பார்ப்போமா…

ஊர் உலகத்தையே சுத்திட்டு கடைசியா நம்ம ஊர் ஐஸ்கட்டி வரலாறு ஒண்ணும் சொல்லப்போறேன், மறக்காம அதையும் கடைசி வரைக்கும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

உலகத்துல முதல்முதல்ல அதிகாரப்பூர்வமா ஐஸ்க்ரீம் சாப்பிட்ட வரலாறு சீனர்கள் கிட்டதான் இருக்கு. கிறிஸ்து பிறக்குறதுக்கு 200 வருஷங்கள் முன்னாடியே, அதாவது தோராயமா 2222 வருஷங்களுக்கு முன்னாடி சீனாவில் பால், அரிசி மாவு கலவையை சரியான விகிதத்துல கலந்து, அதை ஐஸ்கட்டிகளுக்கு நடுவில் உறைய வச்சு சும்மா குளு குளுனு சாப்பிட்டிருக்காங்க… இதுதான் வரலாற்றில் பதிவான முதல் ஐஸ்க்ரீம் ரெசிப்பினு சொல்லலாம்… சீனால இருந்து ஐரோப்பாவுக்கு இந்த ஐஸ் க்ரீம்களைக் கொண்டு போனது ‘மார்க்கபோலோ’வா இருக்கலாம்னு ஒரு தகவல் இருக்கு.

சீனால வரலாறு இப்படி இருக்க, ரோமப் பேரரசர்கள் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட வரலாறு கொஞ்சம் கொடூரமாத்தான் இருக்கு. ரோமானியர்களோட வரலாறுல எவ்வளவு பெருமிதங்கள் இருந்தாலும் அவர்களுடைய அழிக்க முடியாத கறை, அடிமை கலாச்சாரத்தை பெருமிதமா கொண்டாடினதைச் சொல்லலாம். ரோமப் பேரரசர்கள் ஐஸ் க்ரீம் சாப்பிடணும்னா, அடிமைகளை மலை உச்சிகளுக்குப் போயிட்டு பிரெஷ்ஷான ஐஸ் கட்டிகளை வேக வேகமா உருகுறதுக்கு முன்னாடி கொண்டு வரணும்னுலாம் கொடுமைபடுத்தி இருக்காங்க. அப்படி கொண்டு வரப்பட்ட ஐஸ் கட்டிகளோட அதுக்கப்புறம் பழரசங்களைக் கலந்து சுவையூட்டி கொண்டாட்டமா இருந்திருக்காங்க.

நம்ம ஊருக்கு எந்த மலையில் இருந்து ஐஸ்கட்டிகளைக் கொண்டு வந்திருப்பாங்கனு யோசிக்குறீங்களா…? கடைசியில அந்த தகவலையும் சொல்றேன்… வெயிட் பண்ணுங்க..

இங்கிலாந்து அரசர் ‘சார்லஸ் I’ அவருடைய பிரத்தியேக சமையல்காரருக்கு வழக்கமான ஊதியத்தை விட ஒரு பெரிய தொகையை கொடுத்திருக்காரு ஏன் தெரியுமா? அரசர் சாப்பிடுற பிரத்தியேகமான ஐஸ்க்ரீமை நாட்டுல வேற யாரும் சாப்பிடக்கூடாதுன்னு அந்த ஐஸ் க்ரீம் ரெசிப்பியோட ரகசியத்தை வெளிய சொல்லாம இருக்கத்தான் அந்த எக்ஸ்ட்ரா தொகை.

சென்னை பறக்கும் ரயிலில் நீங்க போனா, திருவல்லிக்கேணிக்கு அடுத்து “Ice House”னு ஒரு ரயில் நிலையம் வரும். பேர் மட்டும் இருக்கே, அப்படி ஒரு இல்லத்தைக் காணோமேன்னு எப்பவும் தேடி இருக்கீங்களா? அப்படி ஒரு கட்டிடம் அந்த பகுதியில் 180 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சென்னையில் வசித்த ஆங்கிலேயர்களின் ஐஸ்க்ரீம் தேவைகளுக்காக, அமெரிக்காவின் Tudor நிறுவனம் சென்னையில் ஒரு இடத்தில் ஐஸ்கட்டிகளை சேமித்து வைக்க ஒரு கட்டிடத்தை Frederic Tudor கட்டினார். அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் ஐஸ்கட்டிகளைக் கொண்டு வந்து அந்தக் கட்டிடத்தில் சேமித்து வைத்து பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் உள்ளூரிலேயே ஐஸ்கட்டி உற்பத்தி தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ் ஹவுஸுக்கான தேவை குறைந்து தொழில் நட்டமடைந்து அந்த கட்டிடம் வேறு வேறு நபர்களின் கைகளுக்கு மாறியது. தற்போது அந்தக் கட்டிடம் விவேகானந்தர் இல்லமாக இருக்கிறது.

இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டதிலேயே இதான் பெஸ்ட் ஐஸ்க்ரீம்னு நினைக்குறதைக் கமெண்ட் பண்ணுங்க பாப்போம்…

Also Read: ’நோ சொல்றதும் நல்லதுதான்’ – உடல் எடைக் குறைப்புக்குத் தடையாக இருக்கும் 5 உணவுகள்!

1 thought on “உலகத்தோட முதல் ஐஸ் க்ரீம் ரெசிப்பி தெரியுமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top