ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு கடந்துவந்த பாதையைப் பார்க்கலாம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 மே 21-ம் தேதி தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், 1991ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி 19 வயதான பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சீனிவாசனுக்கு இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- 21 மே, 1991 – இரவு 10.20 மணி
ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். பெல்ட் வெடிகுண்டை வெடிக்கச் செய்த தணு உள்ளிட்ட 16 பேர் அதில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- 22 மே, 1991
வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடியின் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
- 24 மே, 1991
குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், மாநில அரசின் வேண்டுகோளுங்கிணங்க சிபிஐ-யின் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
- 11 ஜூன், 1991
19 வயதான பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அவர் மீது தடா சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டது.
- 20 மே, 1992
சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு 41 பேர் மீது சென்னை சிறப்பு தடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், 12 பேர் உயிரிழந்தவர்கள், 3 பேர் தலைமறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- 28 ஜனவரி, 1998
ஆறு ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து சென்னை சிறப்பு தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 11 மே, 1999
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மேலும், 19 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது.
- ஏப்ரல், 2000
தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து நளினிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை மாநில ஆளுநர் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி பொதுவெளியில் கோரிக்கையும் விடுத்திருந்தார்.
- 2001
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர்.
- ஆகஸ்ட் 11, 2011
கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு பத்தாண்டுகள் கழித்து, அப்போதைய குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீல், மூன்று பேரின் மனுக்களை நிராகரித்தார்.
- ஆகஸ்ட் 2011
கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர், மூன்று பேரையும் செப்டம்பர் 9, 2011-ல் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதேபோல், மரண தண்டனையை நிறுத்திவைக்கும் கோரிக்கையுடனான தீர்மானமும் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
- 24 பிப்ரவரி, 2013
23 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைத் தூக்கிலிடுவது அரசியல் சாசனப்படி தவறு என வழக்கை 1999-ல் விசாரித்து வந்த அமர்வின் தலைமை நீதிபதி கே.டி.தாமஸ் கருத்துத் தெரிவித்தார். அவர்கள் இன்றோ, நாளையோ தூக்கிலிடப்பட்டால், ஒரு குற்றத்துக்காக இரண்டு முறை அவர்கள் தண்டிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
- நவம்பர் 2013
தடா வழக்கு விசாரணையின்போது பேரறிவாளனிடம் வாக்குமூலம் பெற்ற சிபிஐ முன்னாள் எஸ்.பி வி.தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றியதாகக் கூறிய விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தான் வாங்கிக் கொடுத்த பேட்டரிகள் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என்பது தனக்குத் தெரியாது என பேரறிவாளன் சொன்னதாக அவர் கூறினார்.
- 21 ஜனவரி, 2014
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர் உள்பட 12 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
- 2015
அரசியல் சாசனப் பிரிவு 162-ன் கீழ் தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் கருணை மனு அளித்தார். அதன்பின்னர், ஆளுநர் தரப்பில் இருந்து பதில் எதுவும் வராத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
- ஆகஸ்ட் 2017
1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக பேரறிவாளன் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- 6 செப்டம்பர் 2018
பேரறிவாளனின் மனு மீது முடிவெடுக்க தமிழக ஆளுநர் தாமதித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
- 9 செப்டம்பர், 2018
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த ஏழு பேரை விடுவிக்க ஆளுநருக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.
- ஜனவரி, 2021
தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காத நிலையில், தாங்களே அவர்களை விடுவிக்க உத்தரவிட நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
- மே, 2021
புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு பேரறிவாளனை பரோலில் விடுவித்ததோடு, தொடர்ந்து பரோல் விடுப்பையும் நீட்டித்தது.
- 11 மே, 2022
பேரறிவாளன் வழக்கில் விசாரணையை நிறைவு செய்து, தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.
- 18 மே, 2022
பேரறிவாளனை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read – “எளியவர்களுக்கு எல்லாமும்…” ஒரு கனவு… ஒரு வெற்றி… சாஷே புரட்சியின் கதை!