IPL 2022 Play Off போட்டிகள் வானிலையால் பாதிக்கப்படும் பட்சத்தில் சூப்பர் ஓவர் மூலம் முடிவு செய்யப்படும் என்கிற புதிய வழிகாட்டுதல்களை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. மற்ற வழிகாட்டுதல்கள் என்னென்ன தெரியுமா?
IPL 2022 Play Off
நடப்பு IPL 2022 Play Off-ன் முதல் குவாலிஃபையரில் குஜராத டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்க்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மே 24-ம் தேதி இந்தப் போட்டி நடக்கிறது. அதேபோல், 25-ம் தேதி நடக்கும் முதல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டிகள் அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கின்றன.

வழிகாட்டுதல்கள்
கொல்கத்தாவில் மோசமான வானிலை இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையங்கள் கணித்திருக்கும் நிலையில், பிளே ஆஃப் போட்டிகள் முழுமையாக நடக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தநிலையில், பிளே ஆஃப் போட்டிகளுக்கான புதிய வழிகாட்டுதல் விதிகளை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதன்படி பிளே ஆஃப் போட்டிகள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டால், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பிளே ஆஃப் போட்டிகளுக்கும் வழக்கமாக ஒதுக்கப்படும் 200 நிமிடங்கள் என்கிற கால அளவோடு கூடுதலாக இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதனால், முதல் இரண்டு பிளே ஆஃப் போட்டிகளையும் இரவு 9.40 மணிக்குக் கூட தொடங்க முடியும். அதேநேரம், அகமதாபாத்தில் நடக்கும் இரண்டாவது எலிமினேட்டரைத் தொடங்க இரவு 10.10 மணி வரை நேரம் இருக்கிறது. இந்த நேரங்களில் தொடங்கப்பட்டால், வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் 20 ஓவர்கள் வாய்ப்பு வழங்கப்படும். அதேநேரம், வானிலை பாதிப்பு கடுமையாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் தலா 5 ஓவர்கள் விளையாடும் வகையிலும் ஓவர்களைக் குறைக்க முடியும். மூன்று பிளே ஆஃப் போட்டிகளுக்கும் ரிசர்வ் டே ஒதுக்கப்படவில்லை என்பதால், ஐந்து ஓவர்கள் கொண்ட மேட்ச் கூட விளையாட முடியாத நிலையில் சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளரை முடிவு செய்யலாம். சூப்பர் ஓவரைத் தொடங்க நள்ளிரவு 12.50 மணி கடைசி நேரமாகும். ஒருவேளை அதுவும் வாய்ப்பில்லை என்றால், புள்ளிப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.
இறுதிப் போட்டி
வழக்கமாகப் போட்டி தொடங்கும் 7.30 மணிக்குப் பதிலாக இரவு 8 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும். மே 30-ம் தேதி ரிசர்வ் டேயாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதல் நாள் போட்டியில் ஒரு பால் போட்டு தொடங்கப்பட்ட பின்னர், மழையால் விளையாட முடியாமல் போனால், அடுத்த நாள் மீதமிருக்கும் போட்டி நடத்தப்படும். ஒருவேளை டாஸ் மட்டுமே போடப்பட்டு, போட்டி தொடங்கவே இல்லை என்கிற பட்சத்தில், அடுத்த நாள் புதிதாக டாஸ் போட்டே போட்டி தொடங்கும். அதேபோல், மழையால் பாதிக்கப்பட்டால் சூப்பர் ஓவர் நடைமுறைப்படுத்தப்படும். பொதுவாக, டி20 போட்டிகளைப் பொறுத்தவரை 5 ஓவர் மேட்சுக்கு வாய்ப்பில்லை என்றால், அந்தப் போட்டி கைவிடப்பட்டதாகவே அறிவிக்கப்படும்.