சுப்ரமணியபுரம் வெளியாகி 14 வருடங்கள் ஆகப்போகுது. எப்போ ரீவிசிட் பண்ணாலும் ராவா அதே எனர்ஜியோட இருக்கு. தமிழ் சினிமால ஒரு கல்ட் கிளாசிக்கா இந்தப் படத்தை மக்கள் ஏத்துக்கிட்டதுக்கான நான்கு காரணங்களையும், சுப்ரமணியபுரம் படத்தோட க்ளைமேக்ஸ் பத்தின ஒரு வதந்தியும்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
கதைக்களம்
ஒரு நல்ல ஹீரோ இருப்பார். அவருக்கு ஒரு பிரச்னை வரும். அந்தப் பிரச்னையிலிருந்து ஹீரோ போராடி வெளிவர சுபம் போட்டு முடிப்பார்கள் என்ற வழக்கமான தமிழ் சினிமா டெம்ளேட்டில் இருந்து முற்றிலும் விலகி இருந்தது சுப்ரமணியபுரம். படத்தில் நல்லவர், கெட்டவர் என்று தனித்தனியாக கிடையாது. ஹீரோ, ஹீரோயின் தொடங்கி காமெடியன் வரை எல்லாரும் சூழ்நிலைக் கைதிகள். ஒரு கொலையில் ஆரம்பித்து அப்படியே 80 களுக்கு நம்மை அழைத்துச் சென்று நட்பு, துரோகம், வன்மம், காதல் என ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்த்து ராவாக கதை சொன்ன விதத்தில்தான் அதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் இருந்து தனித்து தெரிந்தது.
செட்
1980களின் மதுரையை அப்படியே கண்முன் கொண்டுவந்த படத்தின் செட் ஒர்க் நிச்சயம் இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரிய தூண் என்று சொல்லலாம். அந்தக் காலத்து புகைப்படங்களை நிறைய சேகரிப்பதில் தொடங்கி அப்போதைய பஸ், ஆட்டோக்களை விலைக்கு வாங்கி பயன்படுத்தியது வரை தயாரிப்பாளராக பெரிய அளவில் மெனக்கெட்டிருக்கிறார் சசிகுமார். அப்போதைய திருவிழாக்கள், கல்யாணங்கள் எப்படி நடந்தது என்று பார்க்க பழைய வி.ஹெச்.எஸ் டேப்களை விலைக்கு வாங்கி பார்த்திருக்கிறார்கள். கதைக்களம் மதுரை சுப்ரமணியபுரம் என்றாலும் படத்தின் ஷூட்டிங் நடந்தது திண்டுக்கல் பாரதிபுரத்தில். பீரியட் படம் என்பதால் கேபிள் வயர்கள் கேமராவில் தெரியக்கூடாது என்று மாலை ஆறு மணி வரை கேபிளைக் கட் செய்துகொள்ள அந்த ஊர் மக்கள் சம்மதித்தாக நெகிழ்கிறார் சசிகுமார். பெரும்பாலும் சசிகுமார் நினைத்ததுபோல் அமைந்துவிட நடக்காத ஆசை ஒன்று உண்டு. முரட்டுக்காளை ரிலீஸ் காட்சியை ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டரான தங்கம் தியேட்டரில் எடுக்க நினைத்தார் சசிகுமார். வழக்குகள் காரணமாக மூடிக்கிடந்த அந்த தியேட்டரில் எடுக்க முடியாமல் போக செண்ட்ரல் தியேட்டரை செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தில் வரும் கட் அவுட்டில் அப்போதைய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பெயர்களையே வைத்திருந்தார்.
நடிப்பு
அழகர், பரமன், காசி, டும்கான் என படத்தில் நடித்தவர்களின் இயல்பான முகங்கள் படத்தின் வெற்றிக்குக் கை கொடுத்தது. ஒவ்வொரு கேரக்டருக்கும் ஆட்களைத் தேர்வு செய்வதில் ரொம்பவே மெனக்கெட்டிருப்பார் சசிகுமார். குறிப்பாக கஞ்சா கருப்பு. க்ளைமேக்ஸில் அப்படி ஒரு துரோகத்தை இந்த கதாபாத்திரம் செய்யும் என்று யாருக்கும் துளியும் சந்தேகம் வராதவாறு இருந்ததன் காரணம் அந்தக் கேரக்டரை கஞ்சா கருப்பு செய்ததனால்தான். இந்த கேரக்டர்களின் நடிப்பு நம்பும்படியாக இருந்ததற்கு இன்னொரு காரணம் சசிகுமார் பயன்படுத்திய டெக்னிக். படத்தின் கதையை யாருக்கும் சொல்லவில்லை சசிகுமார். குறிப்பாக க்ளைமேக்ஸ். இதுதான் க்ளைமேக்ஸ் என்று தெரிந்தபிறகு சுவாதி ‘ஏன் முதல்லயே சொல்லல’ என்று கேட்டு சசிகுமாரிடம் அழுதிருக்கிறார். ‘முதல்லயே தெரிஞ்சிருந்தா கண்கள் இரண்டால் ரொமான்டிக்கா வந்திருக்காது’ என்று சமாதானம் சொன்னார் சசிகுமார்.
இசை
இந்தப் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் இரண்டு விதங்களில் உதவியது. ஒன்று இந்தக் கதை 80s இல் நடப்பதைக் காட்சிப் படுத்த அந்தக் காலத்தில் ஹிட் அடித்த பாடல்களை ஆங்காங்கே வைத்திருப்பார்கள். அது காட்சியுடன் ஒன்ற வைத்தது.
முதலில் இப்படி பழைய பாடல்களை மட்டும் வைத்து எடுக்கலாம் என்று நினைத்தார் சசிகுமார். ஜேம்ஸ் வசந்தன் சசிக்குமாருக்கு மியூசிக் டீச்சர். அவர் ஏற்கனவே போட்டிருந்த கண்கள் இரண்டால் மெட்டு சசிகுமாருக்கு பிடிக்க அதை படத்தில் சேர்த்தார். பிறகு மதுரை குலுங்க குலுங்க.. அப்படியே ஒவ்வொரு பாடலாக சேர்ந்து ஆல்பம் உருவானது. இந்த ஆல்பமும் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவுக்கு ஜேம்ஸ் வசந்தன் என்ற இசையமைப்பாளரையும் கொடுத்தது.
ஒரு வதந்தி
அழுதுகொண்டிருக்கும் துளசிக்கு அருகில் கையில் கத்தியுடன் பரமன் உட்கார்ந்திருப்பார். டிரெய்லரில் வந்த இந்தக் காட்சியை வைத்துக்கொண்டு க்ளைமேக்ஸில் துளசியை பரமன் வெட்டிக்கொல்வார் இதில் சென்சாரில் கட் ஆகிவிட்டது என்று ஒரு செய்தி இன்றும் சுற்றிக்கொண்டிருக்கிறது. படத்தில் இடம்பெறாத இந்தக் காட்சிக்குப் பின்னால் ஒரு குட்டி ப்ளாஷ்பேக் இருக்கிறது. சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் முதல் சில நாட்களுக்கு காலையில் கண்கள் இரண்டால் பாடலும் மாலையில் காதல் சிலுவையில் பாடல்களுக்குமான காட்சிகளை எடுத்தார் சசிகுமார். வெறுத்துப்போன சுவாதி, ‘என்ன சார் எப்ப பாரு நடக்குறது, பார்க்குறது இப்படியே போயிட்டு இருக்கு’ என்று சசிகுமாரைக் கலாய்த்திருக்கிறார். மறுநாள் சசிகுமார் ஸ்கிரிப்டிலேயே இல்லாத ஒரு காட்சியை எடுக்க நினைத்தார். அதுதான் பரமன் துளசியை துரத்தும் காட்சி. ‘அது நன்றாக வந்ததால் படத்தின் டிரெய்லரில் மட்டும் வைத்திருந்தேன். மற்றபடி அது சும்மா எடுத்தது’ என்று சொன்னார் சசிகுமார்.