தமிழகத்தின் தினசரி ஆக்ஸிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருக்கிறது.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் சூழலில், நாட்டின் பல மாநிலங்கள் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, குஜராத் என இந்த மாநிலங்கள் பட்டியல் ரொம்பவே நீளம். ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்த வழக்கொன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், `யாசகம் செய்யுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள்… என்ன செய்தாவது நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுங்கள்’ என மத்திய அரசிடம் அதிருப்தி தெரிவித்தது.
டெல்லி, காஸியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் தகன மேடைகளில் இடம் கிடைக்காமல் வரிசையில் காத்திருக்கும் அவலநிலையும் இருக்கிறது. பல மாநிலங்களும் பிராணவாயு பற்றாக்குறையைப் போக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலேயே கேரளா, ஒரு மாநிலம்தான் உற்பத்தியில் உபரியைக் கொண்டிருக்கக் கூடியது. அது, கோவா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பி உதவி வருகிறது.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
வடமாநிலங்கள் பலவும் நோயாளிகளுக்குத் தேவையான மெடிக்கல் ஆக்ஸிஜனைக் கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அப்படியான பெரிய சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றே சொல்லலாம். தமிழகத்தில் தினசரி 400 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம். அதேநேரம் தினசரி தேவை 240 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. அதேபோல், 1,200 மெட்ரிக் டன் அளவுக்கு சேமித்து வைக்கும் வசதி தமிழகத்தில் இருக்கிறது. தினசரி உற்பத்தியை அதிகரிக்கும் வேலைகளைத் தமிழக அரசு முடுக்கி விட்டிருக்கிறது. மருத்துவ வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னை அண்ணாநகரில் உள்ள புறநகர் அரசு மருத்துவமனையில் 2 கிலோ லிட்டர் அளவிலான திரவ ஆக்ஸிஜன் உற்பத்திக் கலன் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இந்த உற்பத்திக் கலன் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்போது, நிமிடத்துக்கு 150 லிட்டர் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
தற்போதைய சூழலில் ஐநாக்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் உற்பத்தி மையத்தில் தினசரி 140 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதேபோல், ஐநாக்ஸ் நிறுவனத்தின் சேலம் உற்பத்தி மையம், பிரக்ஸார், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களையே ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தமிழ்நாடு சார்ந்திருக்கிறது. ஐநாக்ஸ் ஸ்ரீபெரும்புதூர் உற்பத்தி மையம் 140 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்தாலும், சென்னை மணலியில் உள்ள அதன் கொள்கலன் நிரப்பும் மையம் மூலம் தினசரி 11.5 மெட்ரிக் டன்னையே கொள்கலன்களில் நிரப்ப முடியும். அதேபோல், தமிழக எல்லையை ஒட்டிய கேரளப் பகுதியான கஞ்சிகோடு பகுதியில் இருக்கும் ஐநாக்ஸ் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தில் இருந்து தினசரி 55 முதல் 60 மெட்ரிக் டன் மெடிக்கல் ஆக்ஸிஜன் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் தினசரி ஆக்ஸிஜன் அளவான 220 மெட்ரிக் டன் என்பதைத் தாண்டி நுகர்வு 310 மெட்ரிக் டன்னாக உயர்ந்திருப்பதாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி சமீபத்தில் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தினசரி உற்பத்தித் திறன் 400 மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும்போது, தேவை 450 டன்னாக விரைவில் அதிகரிக்கும் நிலை இருப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு பலமாக இருப்பதால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற நிலை வராது என்கிறார்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள். இதுதவிர, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஜூலை 31-ம் தேதி வரை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூலம் தினசரி 1,000 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்கிறது வேதாந்தா நிறுவனம்.