பொன்னியின் செல்வன் நாவல்ல பல Women கேரக்டர்கள் வலுவாகப் படைக்கப்பட்டிருக்கும். அதில், முக்கியமானது குந்தவை கேரக்டர். ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மரின் சகோதரியான குந்தவை, சோழ நாட்டு குடிகளின் ஆதர்ஸமான இளையபிராட்டியாகக் கொண்டாடப்படுபவர். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியவர் அதேபோல் அன்பினாலும் அனைவரையும் அரவணைத்தவர்.
யார் இந்த குந்தவை… அவரின் கேரக்டர் பொன்னியின் செல்வன் நாவலுக்கு எந்த அளவுக்கு முக்கியம்… குந்தவை கேரக்டரைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
டிஸ்கிளைமர் – நண்பர்களே இது கல்கியோட பொன்னியின் செல்வன் நாவலை விமர்சிக்குற அல்லது எடைபோடுற முயற்சி கிடையாது. அந்த நாவலைப் படிக்கிறப்போ நான் உணர்ந்த அல்லது என்னால் புரிந்துகொண்ட அளவில் அதிலிருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களைப் பத்தியான ஒரு சின்ன உரையாடல்தான். அதேமாதிரி, மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் இந்த நாவலை அடிப்படையாக வைச்சுதான் உருவாக்கப்பட்டிருக்கு. அதனால, இந்த ஸ்டோரில அந்தப் படத்தோட சில ஸ்பாய்லர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கு. சோ, படத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்றவங்க Skip பண்ணிடுங்க.

`இளைய பிராட்டி’ குந்தவை
சோழ இளவரசி குந்தவை பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியமான கேரக்டர்னே சொல்லலாம். சோழ அரசுக்கு எதிரான உள்நாட்டுப் பகையை முறியடிக்க தன்னாலான எல்லா முயற்சிகளை சிரமேற்கொண்டு செய்பவர். தம்பி அருள்மொழிவர்மனுக்கு ஆபத்து என்று தெரிந்ததும், அவனை பழையாறைக்கு வர ஓலை அனுப்பும் குந்தவை, கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று முன்கூட்டியே கணித்து அவரது பயணத்தைத் தடுக்க முயற்சித்திருப்பார். அதேபோல், சோழ குலத்துக்கு எதிராக நந்தினி செய்யும் சதித் திட்டங்களையும் முறியடிக்க பல முயற்சிகளை எடுப்பார்.
ஆரம்பத்தில் நந்தினியை வெறுக்கும் குந்தவை, ஒரு கட்டத்தில் அவர் எதிர்க்கொண்ட துயரங்களைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு அதற்காக வருத்தப்படுவார். சோழ மக்கள் கொண்டாடும் ஒரு கேரக்டர். எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாக முடிவெடுக்கும் குந்தவை, தனது சகோதரன் ஆதித்த கரிகாலனின் நண்பனும் சாகச விரும்பியுமான வந்தியத்தேவன் மீது காதல் கொள்கிறார். சோழ குலத்துக்கு தன்னால் எந்தவிதமான அபகீர்த்தியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் குந்தவை, சோழ தேசத்தை உயிராக நேசிப்பவள். இதற்காகவே வெளிநாடுகளைச் சேர்ந்த எந்தவொரு அரசனையும் மணந்து விடக் கூடாது என்று முடிவெடுத்திருப்பார். சகோதரன் ஆதித்த கரிகாலன் கொலைப்பழி காதலன் வந்தியத்தேவன் மீது சுமத்தப்பட்டு, பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும் தீர்க்கமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று யோசிப்பவள். செம்பியன் மாதேவி கோயில்களுக்குத் திருப்பணி செய்ததைப் போலவே, சோழ தேசமெங்கும் மருத்துவ சாலைகள் அமைக்கப் பல்வேறு உதவிகளைச் செய்தவள். தந்தை சுந்தர சோழர் உடல்நலமில்லாமல் இருந்ததைப் போல் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுகூட அவரது எண்ணமாக இருந்திருக்கலாம்.
பழுவேட்டரையர்கள் பாதுகாப்பில் இருப்பதை விரும்பாத குந்தவை, தஞ்சை அரண்மனையைத் தவிர்த்து பழையாறையில் செம்பியன் மாதேவியுடன் வசிக்கிறார். சுதந்திரமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்கிற அவரது கேரக்டரைசேஷனையே இது காட்டுகிறது. அதேபோல், தமது மகள் மீது அளப்பரிய மரியாதை வைத்திருக்கும் சுந்தர சோழர் மகளின் கருத்துகளுக்கும் உரிய மதிப்பும் கொடுப்பார் என்று கல்கி எழுதியிருப்பார். சோழ குல வரலாற்றில் இளவரசி குந்தவை அளவுக்குப் புகழ்பெற்றவர்கள் அதற்கு முன்பும், அவருக்குப் பின்பும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ராஜ்யரீதியிலான முடிவுகளிலும் குந்தவை முக்கியமான பங்காற்றுவார். பல இடையூறுகளைக் கடந்து இறுதியில் வந்தியத்தேவனையே குந்தவை மணமுடிப்பார்.

குந்தவை பற்றி ஒரு இடத்தில் கல்கி இப்படி குறிப்பிட்டிருப்பார்..“செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவள் இளைய பிராட்டி குந்தவை தேவி. அழகில் ரதியையும், அறிவில் கலைமகளையும் அதிர்ஷ்டத்தில் திருமகளையும் ஒத்தவள். சுந்தர சோழ சக்கரவர்த்தி முதல் சோழ நாட்டின் சாதாரண குடிமக்கள் வரையில் அவளைப் போற்றினார்கள். அரண்மனையில் அவள் காலால் இட்டதைத் தலையினால் செய்ய எத்தனையோ பேர் காத்திருந்தார்கள். சிற்றரசர்கள் தங்கள் குலத்தில் வந்த அரசிளங் குமரிகளுக்குக் குந்தவை தேவியின் பணிப்பெண்ணாக இருக்கும் பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பாரத நாட்டில் அந்நாளில் பேரரசர்களாக விளங்கிய பலரின் பட்டத்துக்குரிய அரச குமாரர்கள் இளைய பிராட்டி குந்தவையின் கைப்பிடிக்கும் பாக்கியத்துக்குத் தவம் கிடந்தார்கள்’’ என்று புகழுரைத்திருப்பார். இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம் பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவையின் முக்கியத்துவத்தை. நந்தினியும் குந்தவையும் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் இருவர் பற்றியும் ஒருவருக்கொருவர் அழகிலும் அறிவிலும் சளைத்தவர்கள் இல்லை என்கிறரீதியில் கல்கி வர்ணித்திருப்பார். அந்தவகையில், பொன்னியின் செல்வனின் பவர்ஃபுல்லான இரண்டு வுமன் கேரக்டர்கள் அவர்கள் இரண்டுபேரும். ஒரே ஒரு வித்தியாசம் குந்தவையின் கேரக்டர் நேர்மறையானது…
குந்தவை கேரக்டர் பொன்னியின் செல்வன் நாவல்ல எந்த அளவுக்கு பவர்ஃபுல்லானதுனு நீங்க நினைக்கிறீங்க.. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!