வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 19 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெளிநாட்டு மண்ணிலும் தன்னால் ஃபினிஷராக ஜொலிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் முதல் டி20 போட்டி முதல் பயணித்து வரும் தினேஷ் கார்த்திக், 2022 ஐபிஎல் தொடரில் மிரட்டல் கம்-பேக் கொடுத்திருந்தார். ஆர்சிபியின் ஃபினிஷராக அவர் மிரட்டிய நிலையில், இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஹோம் சீரிஸில் இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு, அதற்கடுத்து நடந்த இங்கிலாந்து சீரிஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐபிஎல் போன்ற உள்ளூர் மண்ணில் நடக்கும் போட்டிகளைப் போல, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் ஃபினிஷர் ரோலை அவரால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்ற விமர்சனம் எழுந்தது.
வரும் அக்டோபரில் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் நிலையில், வெளிநாட்டு மண்ணிலும் தன்னால் ஃபினிஷராக மேட்சை சிறப்பாக முடித்து வைக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டியில் அடித்துக் காட்டியிருக்கிறார் டி.கே. 15-வது ஓவரில் கேப்டன் ரோஹித் ஷர்மா விக்கெட்டை இழந்த பின்னர், களமிறங்கினார் தினேஷ் கார்த்திக். அடுத்த ஓவரில் ஜடேஜாவின் விக்கெட்டையும் இழக்கவே, 138-6 என்கிற நிலையில் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தது. 170 பிளஸ் ஸ்கோரை எடுக்க முடியுமா என்கிற நிலையில், தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்தால், 190-6 என்று பெரிய இலக்கை எட்டியது இந்திய அணி. முதல் 12 பந்துகளில் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அவர், தான் சந்தித்த கடைசி 7 பந்துகளில் 24 ரன்களைக் குவித்தார். இதில், 4 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அவரோட பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 215.78.
ஐபிஎல் தொடருக்குப் பின்னர், டி20 போட்டிகளின் டெத் ஓவர்களில் நம்ம தினேஷ் கார்த்திக்கின் ஸ்டிரைக் ரேட் 210.91. சர்வதேச அளவில் அவருக்கு முன்னால் டிம் டேவிட் (226.72), ஜேம்ஸ் நீஷம் (220.45) என இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள். 37 வயதில் தன்னால் கம்பேக் மட்டுமல்ல; புது அவதாரமே எடுக்க முடியும் என்று வரலாற்றைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார். இதனால், ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராகத் தன்னால் கேம்களை முடித்து வைக்க முடியும் என்கிற நம்பிக்கையை வலுவாக விதைத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கடைசி ஓவரில் அவரின் பேட்டிங்கைப் பார்த்து எதிர்முனையில் இருந்த மற்றொரு தமிழக வீரரான அஸ்வின், நல்லாருக்கு டிகே’ என தமிழிலேயே வியந்து பாராட்டினார். மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டுக்குப் பிறகு பேசிய தினேஷ் கார்த்திக்,
இந்த ரோலை (ஃபினிஷர்) நான் மிகவும் ரசித்து செய்கிறேன்’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
டி20 உலகக் கோப்பையிலும் கலக்க வாழ்த்துகள் DK!