சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் `பழம்’ என்று நடிகர் தனுஷை அழைப்பார்கள். அந்த கேரக்டரைப் போல பழம் கேரக்டர்களை நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கிற மனிதர்களில் பார்க்க முடியும். சில தருணங்களில் நம்மையே கூட மற்றவர்கள் பழமாக விளித்த அனுபவங்கள் நம்மில் சிலருக்கு இருக்கலாம். திருச்சிற்றம்பலம் தனுஷ் போல தமிழ் சினிமாவில் பழம் கேரக்டர்களாக வலம் வந்த கூட்டத்தில் ஒருத்தன் அரவிந்த், நண்பன் ஸ்ரீவட்சன், இதற்குதானே ஆசைப்பட்டாய் அகிலேஷ், பீஸ்ட் ராமச்சந்திரன் ஆகியோரைப் பற்றிதான் இதுல நாம பார்க்கப்போறோம்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ பழம் கேரக்டர்கள் இருந்தாலும், அதில் கூட்டத்தில் ஒருவன் அரவிந்துக்குத் தனி இடம் எப்போதும் இருக்கும். வித்தியாசமான நடிப்பின் மூலம் பழம் கேரக்டராகவே அசோக்செல்வன் வாழ்ந்திருப்பார்.
நம்மில் நிறைய பேர் இப்போ வரைக்கும் மிடில் பெஞ்சாதான் இருப்போம். அப்படி முதல் பெஞ்சும் இல்லாமல் கடைசி பெஞ்சும் இல்லாமல் ஒரு மிடில் பெஞ்ச் ஸ்டூடெண்டான பழம் கேரக்டர் தான் நம்ம அரவிந்த். அரவிந்த் படிப்பில் இருந்து தொடங்கி எல்லா விஷயங்களிலும் ஆவரேஜ்தான். இன்னும் சொல்லபோனால் காதலில் கூட ஆவரேஜ்தான். எல்லாவற்றுக்கும் பயம் என தெனாலி கமலின் பயமயத்தோடு இருந்துகொண்டு அந்த வேலையை மற்றொருவர் செய்வார் என எண்ணக்கூடிய கேரக்டர் தான் அரவிந்த். வகுப்பறையில் ஆசிரியருக்கு கூட தன் பெயர் தெரியாத அளவிற்கு இருக்கிற இடமே தெரியாமல் இருந்துட்டு போய்விடவேண்டும் என்ற வகையில்தான் அரவிந்தோட லைஃப்ஸ்டைல் இருக்கும்னா பார்த்துக்கோங்களேன்.
அடுத்ததாக நண்பன் படத்தின் படிப்பாளி ஸ்ரீவத்ஸன் என்கிற பழம் கேரக்டரை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிடவே முடியாது. ஏனெனில் அந்த கேரக்டர் செய்த வேலைகள் அவ்வளவு பலமாக இருக்கும். வகுப்பின் முதல் மாணவனாக வந்து கல்லூரி முதல்வரிடம் இருந்து அந்த பேனாவை பரிசாக பெற்றுவிட வேண்டும் என்பதனையே நேக்கமாக கொண்டு படம் முழுவதும் வலம் வருவார் ஸ்ரீவத்சன். எந்த பாராட்டுகள் கிடைத்தாலும் அது நமக்கானதாக இருக்க வேண்டும் என நினைக்கும் முதல் பெஞ்ச் ஸ்டூடெண்ட் தான் ஸ்ரீவத்சன். ஸ்கூல் ஸ்டூடண்டைப் போல என்ன நடந்தாலும், இவன் அவனோட பென்சிலைத் திருடிட்டான் மிஸ்; அவன் இவனை அடிச்சிட்டான் சார்னு மத்தவங்க செய்ற தவறுகளையெல்லாம் ஆசிரியரிடம் சுட்டிக்காட்டுவதையே வழக்கமாக கொண்டு ஆசிரியருக்கு விருப்பமான மாணவனாக வேண்டும் என்ற ஆசையும் ஸ்ரீவத்சனுக்கு உண்டு. கிளாஸ் மேட்டுகளிடம் சவால் விட்டு, அமெரிக்காவில் நீச்சல் குளத்துடன் வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டதாகப் பந்தா காட்டுவார். அதேநேரம், தனக்குப் பின்னடைவு என்று தெரிந்ததும், தயங்காமல் அதை ஒப்புக்கொண்டு ஜகா வாங்கவும் தயங்கவே மாட்டார் நம்ம ஸ்ரீவத்சன்.
இந்த ஸ்ரீவத்சனைப் போன்ற பழம் கேரக்டரை இராமானுஜமா ரவுத்திரம் படத்தில் பார்க்க முடியும். பில்டிங் ஸ்ராங்கு பேஸ்மண்ட் வீக்கு என்கிற மாதிரி பெண்கள் முன் மட்டும் பந்தா செய்யும் பழமாக நடித்து இருப்பார் இராமானுஜம்.
”குமுதா ஹேப்பி அண்ணாச்சி” என்ற டயலாக்குகளுடன் ஆரம்பிக்கிற இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் பழம் கேரக்டர் அகிலேஷ் தன்னோட டயலாக் மூலமா வைரலானவர். ”நீ கூட நான் காலேஜ்ல பெரிய ரவுடின்றத மறந்துடல கும்ஸ்” அப்படினு சொல்லிவிட்டு இவர் சொல்ற, “18 வயசுக்கு கீழ உள்ளவங்க,, இதயம் பலவீனமானவங்க,, ப்ரக்னன்ட் லேடீஸ் இந்த ஃபைட்ட பாக்காதீங்க”னு தனக்கே உரிய பாணியில் அகிலேஷ் சொல்லும் டயலாக் இன்னிக்கு வரைக்கும் பயங்கர ஃபேமஸ். அந்த டயலாக்கை சொல்லி முடிப்பதற்குள் ஹீரோவிடம் அடிவாங்கி கொண்டு குழந்தையைபோல் அழுதுகொண்டு செல்கிற அகிலேஷை யாராலும் மறக்கவே முடியாது. அந்த மாதிரி தனக்கு வராததையும் வரும் என நினைத்து பந்தா பண்ணும் பழம் கேரக்டர்தான் நம்ப அகிலேஷ்.
பீஸ்ட் படத்தில் கதாநாயகியின் ஃபியான்சேவாக பழம் கேரக்டரில் ராமச்சந்திரனாக சதீஷ் மாஸ்டர் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஹீரோயினை தொல்லை செய்துக் கொண்டு விடிவி கணேசுடன் காம்போவாகவும் கலக்கியிருப்பார். “சுயநலமா யோசிக்கிற அவன பிடிக்குது,, இங்க இருக்குற தீவிரவாதியெல்லாம் அடிச்சிட்டு எல்லாரையும் காப்பத்தும்னு நினைக்கிற என்னை பிடிக்கலயா??” என்று ராமு சொல்லி முடிக்கும்பொழுது விடிவி கணேஷ் ”அங்க யாரோ வராங்க பாரு” என்று சொல்லும் பொழுது ராமு பயந்துபோய் கணேஷின் கையைப் பிடித்துக்கொள்வார். இப்படி ராமச்சந்திரன் என்கிற பழம் கேரக்டரா பீஸ்ட் படத்தில் வலம் வந்தார் சதீஷ்.
இந்த லிஸ்ட்ல விட்டுப்போன இல்லாட்டி உங்க ஃபேவரைட் பழம் கேரக்டர் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க நண்பர்களே!