பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மணீஷா கொய்ரலா, நெடுமுடி வேணு, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பெரிய ஸ்டார் கேஸ்டிங்கோடு 1996 மே 9-ம் தேதி வெளியான படம் இந்தியன். கமல், ஷங்கர் கரியர்ல மட்டுமில்லீங்க தமிழ் சினிமாவுக்கும் இந்தியன் படம் முக்கியமானதா வரலாற்றுல பதிவாகிடுச்சு… அது ஏன்… அதுக்கான மூன்று காரணங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
இந்தியன் படத்தில் 42 வயது கமல் 70 வயது முதியவரான சேனாதிபதி கேரக்டர்ல நடிச்சிருப்பார். அது பாராட்டுகளைப் பெற்ற அதே சமயத்தில் ஒரு தரப்பினரிடையே விமர்சனமும் கிளம்புச்சு.. வயசானவரையே அந்த கேரக்டர்ல நடிக்க வைச்சிருக்கலாமேனு பேசப்பட்டுச்சு. இந்தக் கேள்வியை கமல்கிட்ட முன்வைச்சப்ப அவர் என்ன பதில் சொன்னாரு தெரியுமா.. வீடியோவை முழுசா பாருங்க.. பதிலை நானே சொல்றேன்.
கமர்ஷியல் ஃபார்முலா
ஊழலை வேரறுக்க வேண்டும் என்பதுதான் படத்தோட ஒன்லைன். இதற்காகப் போராடும் 70 வயது சுதந்திரப் போராட்ட வீரர் சேனாதிபதி. ஒரு கட்டத்தில் தனது மகனே ஊழலுக்குத் துணைபோவதைக் கண்டு, என்ன முடிவெடுக்கிறார் என்கிறரீதியில்தான் படம் போகும். மேலோட்டமாகப் பார்த்தால், இப்படி ஒரு சீரியஸான விஷயத்தை கையில் வைத்துக் கொண்டு ஒரு கமர்ஷியல் சினிமாவைக் கொடுக்க முடியுமா என்ற ஒரு தயக்கம் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் உடைத்து, இந்தியன் படத்தில் கமர்ஷியல் சினிமா ஸ்கிரிப்டுகளுக்கான பாடம் எடுத்திருப்பார் இயக்குநர் ஷங்கர். மணீஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கஸ்தூரி என ஹீரோயின்களுக்கான ஸ்பேஸ் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் கதையோடு இயல்பாகப் பொருந்திப் போகும் கவுண்டமணி – செந்தில் காமெடி சீன்கள். ’ர்’ அ விட்டுட்டையா என போக்குவரத்து அலுவலக ஊழியர் பன்னீர்செல்வமாக செந்தில் அலப்பறை கொடுக்கும் சீனெல்லாம் வேற லெவல்ல இருக்கும். ஒரு கமர்ஷியல் படத்துக்குள் என்னவெல்லாம் எந்தெந்த அளவுல இருக்கணுமோ அது எல்லாமே அந்தந்தந்த அளவுல இருக்க மாதிரி ஸ்கிரீன்பிளேவுல ட்ரீட்மெண்ட் பண்ணிருப்பார் ஷங்கர். அதேமாதிரி, படத்தோட இன்னொரு பிளஸ் சுஜாதாவோட வசனங்கள். ஷங்கரும் சுஜாதாவும் முதல்முறையா இணைஞ்ச படம் இந்தப் படம்தான். அதற்குப் பிற்கு சுஜாதா உயிருடன் இருந்தவரை ஜீன்ஸ் தவிர ஷங்கரின் மற்ற எல்லாப் படங்களின் வசனங்களையும் சுஜாதாதான் எழுதியிருப்பார்.
டெக்னிக்கல் அம்சங்கள்
படத்தோட ஹைலைட்டே சேனாதிபதி கேரக்டர்தான். அவரோட எழுத்து, மேனரிசம் தொடங்கி, அவரோட டிரெஸ்ஸிங், வர்மக் கலைனு அந்த ஒரு கேரக்டருக்குப் படக்குழு ரொம்பவே உழைப்பைப் போட்டிருப்பாங்க. கமல்ஹாசன் இந்தப் படத்துல நடிக்க ஒப்புதல் கொடுத்ததும், இயக்குநர் ஷங்கரோட அமெரிக்கா போய் சேனாதிபதி கேரக்டருக்கான மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முதல்முறையாக புராஸ்தட்டிக் மேக்கப்பை அறிமுகப்படுத்தியது இந்தியன் படம்தான். ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட் மோர் இந்தப் படத்தில் பணியாற்றினார். படத்தில் சேனாதிபதியைப் பார்த்தவர்கள் நிஜ கமலை மறந்தே போனார்கள் என்றுத்தான் சொல்ல வேண்டும். அதேபோல், சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள். அந்த போர்ஷனுக்காக கலை இயக்குநர் தோட்டா தரணி குழுவினர் போட்ட உழைப்பு ரொம்பவே பெருசுன்னே சொல்லலாம். அதேபோல், கப்பலேறிப் போயாச்சு பாடலும் நமக்கு அன்றைய இந்தியாவைக் காட்டி மெய்சிலிர்க்க வைத்தது. இந்தப் படத்துக்காக கமலுக்கு சிறந்த நடிகர், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. அதேபோல், சிறந்த படம், நடிகர் போன்ற தமிழக அரசின் விருதுகளையும் இந்தியன் படம் குவித்தது. நடிகர் கமலோடு ஏ.ஆர்.ரஹ்மான் முதல்முதலாகப் பணியாற்றிய படமும் இதுதான். நடிகைகள் மணீஷா கொய்ராலாவுக்கு ரோஹினியும், ஊர்மிளாவுக்கு பானுப்ரியாவும் பின்னணிக் குரல் கொடுத்திருப்பார்கள்.
வசூல் சாதனை
நடிகர் ரஜினியின் பாட்ஷா 1995ல் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. அடுத்த வருடமான 1996-ல் வெளியான இந்தியன், அதற்கு முந்தைய எல்லா படங்களின் வசூலையும் முறியடித்து புதிய சாதனை படைத்தது. சென்னையில் முதல்முறையாக ஒரு கோடி ரூபாய் என்கிற மைல்கல் வசூலைப் படைத்தது இந்தியன்தான் என்று பத்திரிகைகளில் அப்போது எழுதினார்கள். அதேபோல், சென்னை மட்டுமல்லாது கோவை, ஈரோடு, மதுரை, நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் வெற்றிவிழாக் கொண்டாடியது இந்தப் படம். தமிழில் வெளியான அதேநாளில் தெலுங்கில் பாரதீயடு என்றும் இந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரிலும் வெளியாகி அங்கும் வசூலில் சக்கைபோடு போட்டது. அந்த வகையில் பான் இந்தியா மூவிஸ்களுக்கு 1996லேயே முன்கதை எழுதிய படம் இந்தியன். `எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது!’ என்கிற வாசகத்துடன் இந்தப் படத்தின் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியானது. அப்படி வசூல்ரீதியாகவும் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இந்தியன் நிலைத்து நிற்கிறது.
இந்தியன் படத்தில் வரும் சேனாதிபதி கேரக்டர் பற்றிய கேள்விக்குக் கமல் சொன்ன பதில், “ஒரு மெஜிஷியன் வெறுங்கையில ஒரு முட்டையை வர வைப்பார். நாம அதை ஆச்சரியமா பார்ப்போம். இங்க ஆச்சரியம் முட்டையில்லை. அது நமக்கு நல்லா தெரிஞ்ச பொருள்தான். அதை அவர் வெறும் கையில எடுக்கிறார் இல்லையா, அதுதான் ஆச்சரியம், அதுதான் மேஜிக். அதே மாதிரி வயசான ஆள், வயசான ஆளா நடிக்கிறதுல்ல எந்த ஆச்சரியமும் இல்லை. அப்படியில்லாத நான், வயசானவரா நடிச்சேன் இல்லையா, அதுதான் ஆச்சரியம்’ என்று பதில் சொன்னார் கமல்ஹாசன்.
இந்தியன் முதல் பாகம் வெளியாகி 26 வருஷங்களுக்குப் பிறகு இந்தியன் – 2 ஷூட்டிங் ஆரம்பிச்சிருக்காங்க… இந்தியன் முதல் பாகத்துல எந்த அம்சம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுனு நினைக்கிறீங்க.. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
Very superb information can be found on blog.Blog monetyze