முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பதவியில் இருக்கும்போது இரண்டு ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்தி வந்தார். @EPSTamilNadu என்ற கணக்கில் கட்சிரீதியான மற்றும் பெர்சனலாக பதிவுகளும் @cmotamilnadu என்ற கணக்கில் தமிழக முதலமைச்சர் என்கிற முறையில் தமிழக அரசு, அரசின் அறிவிப்புகள் தொடர்பான பதிவுகளை இட்டு வந்தார். இந்தநிலையில், 2021 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெறாத நிலையில், @cmotamilnadu என்ற கணக்கு @OfficeOf_EPS என்ற கணக்காக மாற்றப்பட்டிருக்கிறது.
என்ன பிரச்னை?
ட்விட்டரில் எடப்பாடி பழனிசாமி பெயரில் இருந்த இரண்டு கணக்குகளுமே அதிகாரபூர்வ கணக்குகளாக வெரிஃபைடு என நீல நிற டிக் பெற்றிருந்தன. ஆனால், தற்போது @cmotamilnadu என்ற கணக்கு @OfficeOf_EPS-ஆக மாற்றப்பட்டிருப்பதால், இந்தக் கணக்குக்கான வெரிஃபைடு புளூ டிக்கை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் பெர்சனல் கணக்கான @EPSTamilNadu அக்கவுண்டை சுமார் 2.6 லட்சம் (259.7 ஆயிரம்) பேர் பின்தொடர்கிறார்கள். அதேநேரம், மற்றொரு கணக்கைப் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் பேர். வித்தியாசம் கிட்டத்தட்ட ஆறு மடங்கு. இந்தசூழலில், ஃபாலேயர்ஸ் அதிகம் இருக்கும் அக்கவுண்டைக் கைவிட மனதில்லாமல், இந்த மாற்றம் நடந்திருப்பதாகவும், இது சட்டவிரோதம் எனவும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ட்விட்டரின் வழக்கமான நடைமுறை!
தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் @CMOkarnataka கணக்கை அம்மாநில முதல்வர் எடியூரப்பா பயன்படுத்தி வருகிறார். கர்நாடக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டாகப் பயன்படுத்தப்படும் ஐந்த ஐடி, ஆகஸ்ட் 2014 முதலே பயன்பாட்டில் இருக்கிறது. எடியூரப்பா கர்நாடக முதல்வராக 2019ம் ஆண்டு ஜூன் 29-ல்தான் பதவியேற்றார். அதேபோல், பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ கணக்கான @PMOIndia, 2012 ஜனவரி முதலே பயன்பாட்டில் இருக்கிறது. பிரதமர் மோடி, 2014 மே மாதத்தில்தான் பிரதமராகப் பதவியேற்றார். மேற்கூறிய இந்த இரண்டு கணக்குகளும் முந்தைய முதல்வர், பிரதமர் அலுவலகங்களால் நிர்வகிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் அலுவலக அதிகாரபூர்வ கணக்கை நிர்வகித்தது யார் என்ற கேள்வி இதன்மூலம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதுபோன்ற கணக்குகளை மாற்றுவது தொடர்பாக ட்விட்டரில் தனியாக விதிமுறை எதுவுமில்லை. ஆனால், தார்மீகரீதியில் அரசுகளின் அதிகாரப்பூர்வ கணக்குகள், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும் அதேபெயரில் தொடர்ந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.
அமெரிக்க நடைமுறை
அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கும் அனைவருமே @POTUS என்ற ட்விட்டர் அக்கவுண்டைத்தான் பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு முறை புதிய அதிபர் பதவியேற்றபின்னரும், @POTUS அக்கவுண்ட் மூலமாக அவர் பதிவு செய்த ட்வீட்டுகள் அனைத்தும் மற்றொரு கணக்கில் அர்க்கைவாக மாற்றப்படும். இதேபோல், அமெரிக்காவின் முதல் குடிமகள் என்ற அந்தஸ்து பெற்றிருக்கும் அதிபரின் மனைவி @flotus என்ற கணக்கைப் பயன்படுத்துவார்கள். அதிபர் பதவியில் மாற்றம் ஏற்படும்போது அதிபர்களின் ட்விட்டர் அக்கவுண்ட் போலவே, இந்த அக்கவுண்டுக்கும் மாற்றப்படும்.