அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 6-4, 2-6, 7-6(1), 6-3 என்ற சுற்றுகளில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியிருக்கிறார் 19 வயதே ஆன ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ்… இதன்மூலம் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மிக இளம் வயதில் முதலிடம் பிடித்த வீரர் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார். யார் இந்த Carlos Alcaraz.
Carlos Alcaraz
கார்லோஸ் அல்கராஸ் காஃபியா, ஸ்பெனியின் உள்ள முர்ஸியா மாகாணத்தின் எல் பார்மர் பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர் கார்லோஸ் – விர்ஜீனியா. இவரது தந்தை கார்லோஸ் இயக்குநராக இருந்த Real Sociedad Club de Campo de Murcia டென்னிஸ் அகாடமியில் டென்னிஸ் விளையாடத் தொடங்கிய அல்கராஸ், 2018-ம் ஆண்டு ஜூனியர் லெவல் போட்டிகளில் Ferrero Sport Academy-க்காக விளையாடத் தொடங்கினார்.
2020-ல், தனது 16 வயதிலேயே முதல்முறையாக ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் மூலமாக முதல் ஏடிபி தொடரில் விளையாடினார். முதல் சுற்றில் ஆல்பர்ட் ராமோஸை வீழ்த்திய இவர், இரண்டாவது சுற்றில் பெரிடிகோ கோரியாவிடம் தோற்று வெளியேறினார். தனது 17-வது வயதில் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடத் தகுதிபெற்ற இவர், முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அறிமுகமானார். தனது கிராண்ட்ஸ்லாம் அறிமுகப் போட்டியிலேயே Botic van de Zandschulp-வை வீழ்த்தினார். அந்தத் தொடரின் இரண்டாவது சுற்று வரை சென்ற கார்லோஸ், பிரெஞ்சு ஓபனில் விளையாடத் தகுதிபெற்றார். தனது 18-வது பிறந்த தினத்தன்று முன்னணி வீரரான ரஃபேல் நடாலை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும், இவரது திறமையை நடால் வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
அமெரிக்க ஓபன் இவரது கரியரில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தத் தொடரில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்டெஃபானோஸ் டிஸிபாஸை வீழ்த்தி டென்னிஸ் உலகை அதிரவைத்தார். அந்தத் தொடரின் நான்காவது சுற்று வரை முன்னேறிய அவர், Erste Bank Open தொடரில் ஏழாம் நிலை வீரர் Matteo Berrettini-யை வீழ்த்தினார். அடுத்து நடந்த Next Gen ATP Finals தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன்
2022 அமெரிக்க ஓபனில் உலகின் மூன்றாம் நிலை வீரராகக் களம்கண்ட கார்லோஸ், Sebastian Baez, Federico Coria மற்றும் Jenson Brooksby ஆகியோரை முதல் மூன்று சுற்றுகளில் தோற்கடித்து நான்காவது சுற்றுக்குத் தேர்வானார். இந்த மூன்று போட்டிகளிலும் ஒரு செட்டைக் கூடத் தோற்காமல் நேர் செட்களில் வெற்றியைப் பதிவு செய்தார் கார்லோஸ். காலிறுதியில் Jannik Sinner-ஐ வீழ்த்திய போட்டி அமெரிக்க ஓபனில் நீண்ட நேரம் நடந்த போட்டிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் 15 நிமிடங்கள் நீண்டது அந்தப் போட்டி. அரையிறுதியில் அமெரிக்க வீரர் Frances Tiafoe-வை வீழ்த்திய அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கிறார் இந்த 2கே கிட். இதன்மூலம், டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.