Appavu

49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி டு சபாநாயகர் – அப்பாவு கடந்துவந்த பாதை!

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சட்டப்போராட்டம் நடத்திய தி.மு.க-வின் அப்பாவு, தமிழக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

யார் இந்த அப்பாவு?

விவசாயிகள் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அப்பாவு, நெல்லை ராதாபுரம் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1996ம் ஆண்டு எம்.எல்.ஏவாகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அதே தொகுதியில் 2001 தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார். அதன்பின்னர் தி.மு.க-வில் இணைந்த அப்பாவு, 2006 தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவானார். 2011 தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ராதாபுரம் தொகுதி ஒதுக்கப்படவே, அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

Appavu

தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கத் தடை கோரி நீதிமன்றம் சென்றது, வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஏன் முக்கியம் என நீதிமன்றத்தில் இவர் வைத்த வாதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

2016 தேர்தல்

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அப்பாவு, அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளைத் திட்டமிட்டு புறக்கணித்ததாக அப்போதே போராட்டம் நடத்தினார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று ஐந்தாண்டுகள் இதற்காக சட்டப்போராட்டம் நடத்தினார். 203 வாக்குகள் எண்ணப்படவில்லை என உச்ச நீதிமன்றம் வரை சென்ற அப்பாவு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான இன்பதுரையை 3,374 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அப்பாவு

சபாநாயகர் பொறுப்பு

பொதுவாக தி.மு.க – அ.தி.மு.க என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுரைக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்காவது அமைச்சர் பதவியை வழங்கிவிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை ஸ்டாலினின் அமைச்சரவையில் பொறுப்பேற்றிருக்கும் 33 பேரில் ஒருவர் கூட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை. இது அம்மாவட்ட உடன்பிறப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் குறையைப் போக்கும் வண்ணமாகவும், சட்டப்பேரவையில் நீண்ட அனுபவம் கொண்டவரான அப்பாவு பெயரை சபாநாயகராக டிக் அடித்தார் ஸ்டாலின் என்கிறார்கள். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவராக ஸ்டாலின் தன்னையே முன்னிறுத்திக் கொண்டதும், அங்கு ஒருவருக்குக் கூட அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதாலேயே என்றும் சொல்லப்படுகிறது. தி.மு.க சார்பில் கடந்தமுறை சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சீனியர் கு.பிச்சாண்டிக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், அவர் துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதிக்கு ஒப்பானதாகக் கருதப்படும் சபாநாயகர் பொறுப்பு, எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்குவது, அவையைக் கண்ணியமாக நடத்துவது போன்ற முக்கியமான பொறுப்புகளை உள்ளடக்கியது. சட்டப்பேரவையில் சீனியரான அப்பாவு, அந்தப் பொறுப்புகளைத் திறம்பட மேற்கொள்வார் என தி.மு.க தலைமை எண்ணுகிறது.

1 thought on “49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி டு சபாநாயகர் – அப்பாவு கடந்துவந்த பாதை!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top