மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் வெளியாகிவிட்டது. ஆதித்த கரிகாலனாக மிரட்டியிருக்கிறார் விக்ரம். இடைவேளைக்கு முன் அவருடைய பெர்ஃபாமன்ஸூம் சோழா சோழா பாடலும் கேமரா மூவ்மெண்டும் சேர்ந்து மெய்சிலிர்க்க வைக்கிறது. கதையின் நாயகன் பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவி அசால்ட்டாக யானை மீது ஏறி, எரியும் கப்பலில் வாள் சுழற்றி கெத்து காட்டியிருக்கிறார். தனது குறும்பான வசனங்களால் கன்னிப் பெண்களிடம் வழிந்து குழைந்து பேசி வந்தியத்தேவனாக செம்ம அப்லாஸ் அள்ளுகிறார் கார்த்தி. மதிநுட்பமும் பேரழகும் வாய்ந்த இரண்டு பூரண சந்திரன்களான குந்தவை, நந்தினியாக த்ரிஷாவும், ஐஸ்வர்யா ராயும் உள்ளம் கவர்கிறார்கள்.
நாவல் படித்தால்தான் கதை புரியுமா?
நிச்சயமாக புரியும். படத்தில் ஆரம்பத்திலேயே கமலின் குரலில் ஒரு குட்டி அறிமுகம் வருகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் நீங்கள் நாவல் படிக்கவில்லையென்றாலும் நன்றாகப் புரியும். சில கதாபாத்திரங்கள் பற்றிய விவரணைகள் நாவலில் அதிகமாகவே இருக்கும். உதாரணமாக பிரபு நடித்திருக்கும் பெரிய வேளார் கதாபாத்திரம். ஆனால் படத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களும் காட்சிகளும் குறைவாகவே இருக்கும். அதே சமயம் இது படம் பார்க்கும் உங்களை அனுபவத்தை எந்த வகையிலும் குறைக்காது.
நாவலில் இருக்கும் அதே காட்சிகள்தான் படத்தில் இருக்கிறது?
பெரும்பாலும் அப்படியேதான் இருக்கிறது. அதேநேரம் கதை சொல்லலில் இருக்கும் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை மாற்றியிருக்கிறார்கள். படம் ராஷ்டிரப்போரில் இருந்து தொடங்குகிறது ஆனால் நாவல் வந்தியத்தேவனின் பயணத்தில் தொடங்கும். டிரெய்லரில் நாம் பார்த்த திரிஷாவும் விக்ரமும் சந்தித்துக்கொள்ளும் காட்சி புத்தகத்தில் எங்குமே இருக்காது. இப்படியான சில மாற்றங்கள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் நாவல்தான் படமாகியிருக்கிறது.
பொன்னியின் செல்வனுக்கு இவ்வளவு ஹைப் இருக்கிறதே.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?
நிச்சயம் பொன்னியின் செல்வன் ஒரு சூப்பரான விசுவல் ட்ரீட்டாக வந்திருக்கிறது. வரலாற்றுக் கதையாக இருந்தாலும் போரடிக்காத திரைக்கதை அமைத்ததில் மணிரத்னம் & டீம் அசத்தியிருக்கிறார்கள். பரபரப்பான தொடக்கம், இடைவேளைக்கு முந்தைய காட்சியாகட்டும், க்ளைமேக்ஸ் காட்சியாகட்டும் மாஸ் படங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத மிரட்டல். குறிப்பாக இவ்வளவு பிரமாண்டமான படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இன்னும் வலுசேர்த்திருக்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக்குகின்றன.
என்ன இன்னும் சிறப்பா இருந்திருக்கலாம்?
பாகுபலியுடன் ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும் கலை இயக்கத்திலும் இன்னமும் மெனக்கெட்டிருக்கலாம். அதே நேரம் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி தமிழ் சினிமாவின் பல ஆண்டுகால கனவை நிஜமாக்கிக் காட்டியிருக்கும் பொன்னியின் செல்வன் நிச்சயம் பாராட்டுக்குரிய படமாகவே வந்திருக்கிறது.
எந்த சந்தேகமும் இன்றி பொன்னியின் செல்வனை குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம்.
Also Read – பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் – `ஆழ்வார்க்கடியான் நம்பி’