வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டித் தொகை பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். அவற்றில் முக்கியமான ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ ரேட் விகிதம்… ரெப்போ ரேட் என்றால் என்ன… அது எப்படி கடனுக்கான வட்டி விகிதத்தைப் பாதிக்கிறது என்பதைப் பற்றிதான் தெரிஞ்சுக்கப்போறோம்.

ரெப்போ ரேட்
ரெப்போ வட்டி அல்லது ரெப்போ ரேட் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி, அந்நாட்டின் மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதம். இதேபோல், வணிக வங்கிகள் தங்கள் கடனை திரும்ப செலுத்துவதற்கு ரிவர்ஸ் ரெப்போ வட்டி என்ற பெயரும் உண்டு.

ரொப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், பணவீக்கம் குறைந்து விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும்போது பணவீக்கம் அதிகரித்து, விலைவாசியும் உயரும் நிலை ஏற்படும். ரிசர்வ் வங்கி, கடந்த ஆறு மாத காலங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை 4 முறை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வுக்கான காரணம் குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறுகையில், பணவீக்கத்தை குறைத்து விலைவாசியை கட்டுபடுத்தவே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்தார். .
ரெப்போ ரேட் விகிதத்தை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?
ஒரு நாட்டின் மத்திய வங்கியானது அந்நாட்டின் மற்ற வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தால், பணவீக்கம் குறையும் என்பதே இதன் அடிப்படை. அதாவது, ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் மத்திய வங்கியிடம் இருந்து கடன் வாங்கும் மற்ற வணிக வங்கிகள், தாங்கள் வாங்கும் கடன் தொகையை இயன்ற அளவுக்குக் குறைத்துக் கொள்ளும். இவ்வாறு வங்கிகள் கடன் வாங்கும் தொகை குறைந்தால் வங்கிகளின் இருப்பு தொகையும் குறையும். மக்களின் பணபுழக்கத்துக்கு மூலதனமாக இருக்கும் வங்கிகளின் இருப்பு தொகை குறைந்தால், தானாகவே மக்கள் செலவு செய்யும் பணமும் குறைந்து விடும்.
இத்தகைய சூழலால் மக்கள் அதிகமாக செலவு செய்ய முற்படமாட்டார்கள். இதன் மூலம் தானகவே பணவீக்கம் கட்டுக்குள் வரும். விலைவாசியையும் கட்டுபடுத்தப்படும் என்பதே அடிப்படை.
ஒருபக்கம் பணவீக்கத்தை குறைத்து விலைவாசியை கட்டுபடுத்தும் என்றாலும், மறுபக்கம், அபாயத்தை ஏற்படுத்த வல்லது. ஏனென்றால், வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளிடன் வாங்கிய கடன் தொகைக்கு வட்டி விகிதம் அதிகமாகும் பட்சத்தில் அதனை செலுத்துவதற்கு வணிக வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கிய, வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு 2022-2023 நிதியாண்டில் கடந்த ஆறு மாதங்களில் நான்கு முறை ரெப்போ வட்டியை உயர்த்தியுள்ளது. 4% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம், 2022-ல் மே மாதத்தில் 4.40% ஆகவும், ஜூன் மாதத்தில் 4.90% ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 5.40% ஆகவும் மற்றும் கடைசியாக செப்டம்பர் மாதத்தில் 5.90% ஆகவும் உயர்த்தப்பட்டது. இதேகாலத்தில், பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79% ஆக இருந்து மே மாதத்தில் 7.04% ஆகவும், ஜூன், ஜூலை மாதங்களில் 7.01% ஆகவும், குறைந்திருந்து, அதனை தொடர்ந்து பின்னர், ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் 7% ஆக உயர்ந்து நிற்கிறது.