வைணவத்தின் மிகப்பெரிய மத குருக்கள் ஜீயர் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்… அவர்களது பணி என்ன?
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் 51-வது ஜீயர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை மே 6-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இது ஆன்மிக நல அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. இந்தநிலையில், அந்த அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து கடந்த 13-ம் தேதி அறிவித்தார்.
ஜீயர் என்பவர் யார்?
வைணவ சமயத்தின் மிகப்பெரிய மதகுரு ஜீயர் என்றழைக்கப்படுகிறார். கோயில்களில் பூஜைகள் செய்பவர்களையும் பொதுமக்களையும் இணைக்கும் பாலமாக இருப்பவர் ஜீயர். கோயில் சொத்துகள் மற்றும் பூஜைகளையும் சேர்த்தே ஆரம்பகாலத்தில் ஜீயர்கள் நிர்வகித்து வந்தனர். ஸ்ரீரங்கம் கோயிலைப் பொறுத்தவரை நிர்வாகப் பணிகளைச் சீரமத்தவராக ஸ்ரீராமானுஜர் கருதப்படுகிறார். அவர் தொடங்கி 50 ஜீயர்கள் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வகித்திருக்கிறார்கள்.
யார் ஜீயராக முடியும்?
தென்கலை வைணவராக இருக்க வேண்டும். நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்றுணர்ந்திருக்க வேண்டும். தனது குடும்ப உறவுகளைத் துண்டித்தவராகவும் அல்லது துண்டிக்க உறுதி தருபவராகவும் இருத்தல் அவசியம். அதேபோல், வைணவ வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், பூஜை முறைகள் அறிந்தவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இருப்பவர் யாராயினும் ஜீயராக முடியும்.
ஜீயரின் பணிகள் என்ன?
ஜீயர்கள் கோயில்களில் செய்யப்படும் பூஜைகள் உள்ளிட்ட கைங்கர்யங்களைக் கவனிப்பவர். ஜீயரான பின்னர், அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வீடு தரப்படும். அவர் அங்கேயே தங்கிக்கொள்ள வேண்டும். அங்கு பிரபந்தப் பாடம் சொல்லித்தரும் அவருக்கு மாதந்தோறும் சிறிது ரொக்கமும், ஆராதனையில் பங்கும் கோயில் தரப்பில் கொடுக்கப்படும். கோயில் கருவூலத்தின் சாவிகளில் ஜீயரிடமும் ஒரு கொத்து இருக்கும். கருவூலம் திறக்கும்போதும் மூடும்போதும் ஜீயர் இருப்பார். ஜீயருக்கெனெ தனி முத்திரையும் இருக்கும். கருவூலத்தைப் பூட்டிய பிறகு அவர், தனது சாவியை எடுத்துச் செல்வார். கருவூலத்தின் மற்ற செட் சாவிகள், அறங்காவலர்களிடமும் மற்ற அலுவலர்களிடமும் இருக்கும்.
கருவறையில் வீற்றிருக்கும் பெருமாளைத் திரையிட்டு அலங்காரம் செய்கையில் புணுகு சாற்றுதல் வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும். அப்போது ஜீயர் திரைக்குள் சென்று பெருமாளின் சாற்றுப்படியைக் கவனிப்பார். இதுதான் ஜீயரின் முக்கியமான பணி. ஜீயர் பணிக்கு வரவில்லை என்றாலும் இது வழக்கமாக நடக்கும். தமிழே பெருமாளுடன் பேசும் மொழி என்று சொல்லும் ஜீயர்கள், தமிழ் பாசுரங்களையும் மடத்தில் ஒலிக்கச் செய்வர் என்கிறார்கள்.
ஜீயரைத் தேர்வு செய்யும் நடைமுறை
ஜீயர் பதவிக்கு ஓய்வு வயதில்லை. ஜீயரான பின்னர் குடும்ப உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்பதால், அவர் இறந்தால் உடலைக் குடும்பத்தினரிடம் அளிக்க மாட்டார்கள். நிர்வாகம் சார்பில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலேயே அடக்கம் செய்வார்கள். ஸ்ரீரங்கம் கோயில் நிலத்திலேயே இதுவரை பணியில் 50 ஜீயர்களும் அடக்கம் செய்யப்பட்டனர்.
ஒரு சில வைணவ மடங்களில் ஆதினங்கள் இருப்பார்கள். அவர்களுக்குத் துணையாகத் தம்பிரான்கள், இளைய ஆதினங்கள், சீடர்கள் இருப்பார்கள். அதேபோல், சில ஆதினங்களில் மூத்த ஆண் வாரிசுகள் இருப்பார்கள். ஆதினங்களுக்குப் பிறகு அவர்கள் ஆதினங்களாகத் தேர்வு செய்யப்படுவர். ஆனால், ஜீயர் விவகாரத்தில் இதுபோன்ற ஏற்பாடுகள் இல்லை. ஸ்ரீரங்கத்தைப் பொறுத்தவரை கடந்த 100 ஆண்டுகளாக தென்னாச்சார்ய சம்ப்ரதாய சம்ப்ரக்ஷண சபா, தங்களது பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்து ஜீயரைப் பரிந்துரை செய்வார்கள். இவர்களின் பரிந்துரையை கோயில் அறங்காவலர்கள் குழு தீர்மானமாக அங்கீகரிக்கும். அதன்பிறகு, இந்தத் தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி அரசின் பிரதிநிதி ஒப்புதல் பெறுவார். இது, அந்த சபா தொடங்கப்பட்ட 1914ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கிறது.
தென்னாச்சார்ய சம்ப்ரதாய சம்ப்ரக்ஷண சபா
இந்த சபாவில் தமிழைப் பெருமாள் பேசிய அருளிப்பாடாகக் கருதும் வைணவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட இந்த சபையில், ரெட்டியார், செட்டியார், யாதவர், கள்ளர், அம்பலக்காரர், நாயக்கர், நாயுடு ஐயங்கார், சாத்தாத வைணவர் என பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. பாகவதர்களை உள்ளடக்கிய இந்த சபா கொடுக்கும் பரிந்துரையை ஏற்றே ஜீயர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு முன்பாக 1945, 1980கள் மற்றும் 1990-களிலும் ஜீயர் பதவிக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்கிறார்கள் தமிழ்நாடு அர்ச்சகர்கள் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத்தினர். 1959-ம் ஆண்டு சட்டப்படி பட்டியலினத்தவரும் அறங்காவலர்கள் குழுவில் இடம்பெற வேண்டும்.
ஸ்ரீரங்கம் ஜீயர் பதவி கடந்த மூன்று ஆண்டுகளாகக் காலியாக இருக்கும் நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு சர்ச்சையாகியிருக்கிறது.
தகவல் – அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
Also Read – பெங்களூர் சாம்பார் இனிப்பா இருக்க என்ன காரணம்… ஏன் அப்படி இருக்கு?