இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்குப் பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்க இருக்கிறார். என்ன காரணம்?
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து பயணப்பட இருக்கிறது. ஆகஸ் பௌல் மைதானத்தில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜூன் 14-18 தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருக்கிறது. மும்பையில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படும் வீரர்கள், மூன்று முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த டெஸ்டுகளை பாஸ் செய்தாலே இங்கிலாந்து புறப்பட முடியும். அதேநேரம், கொரோனா பாசிட்டிவ் வந்தால், இங்கிலாந்து தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள் என கண்டிப்புக் காட்டியிருக்கிறது பிசிசிஐ. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.
அதேநேரம், இந்திய அணியின் இன்னொரு ஸ்குவாட் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது. ஐசிசியின் வருடாந்திர சுற்றுப்பயணத் திட்டமான எஃப்.டி.பி-யில் திட்டமிட்டபடி தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி முன்னெப்போதும் இல்லாதவகையில் ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களில் பங்கேற்கத் திட்டமிட்டிருக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து செல்கிறார்.
இதனால், இலங்கை செல்லும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்று தெரிகிறது. ஜூனியர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநரான பின்னர் அந்த அணியோடு வெளிநாடுகளுக்குப் பயணிப்பதை நிறுத்தியிருந்தார். இந்தநிலையில், ரவி சாஸ்திரியின் ஆப்சென்ஸில் இந்திய அணியோடு இலங்கைக்குப் பயணமாக இருக்கிறார் டிராவிட். அதேபோல், ஜூனியர் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரேவும் இலங்கை செல்கிறார் என்கின்றன பிசிசிஐ வட்டாரங்கள்.
வொயிட் பால் ஸ்பெஷலிஸ்ட் அணியாக இலங்கை செல்லும் இந்தியாவின் மற்றொரு அணிக்கு ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் என மூவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.