கவிதா ராமு | இப்போலாம் யாரு சாதி பார்க்குறா? – இப்படி சிலர் கேப்பாங்க. அவங்களுக்கு பதில் சொல்ற மாதிரியும் சாமியே வந்து சாதி பார்த்து மக்களை கோயிலுக்குள்ள போகக்கூடாதுனு சொன்னாலும், நாங்க கைப்புடிச்சு கூட்டிட்டுப் போவோம்னு சாதி பார்க்குறவங்க முகத்துல அடிக்கிற மாதிரியும் புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தரமான சம்பவம் ஒண்ணை பண்ணியிருக்காங்க. இன்னைக்கு மலம் கலந்தவங்க, நாளைக்கு விஷயம் கலக்க மாட்டாங்களா? என்ன சம்பவம் நடந்துச்சு? கவிதா ராமு பண்ண் வேற சம்பவங்கள் என்ன?
புதுக்கோட்டைல வேங்கைவயல்ன்ற கிராமம் இருக்கு. இந்த கிராமத்துல பட்டியலின மக்கள் அதிகளவில் வசிச்சு வறாங்க. அதே கிராமத்துல மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும் இந்த மக்களுக்கும் இடையே அடிக்கடி சாதிய ரீதியிலான சண்டைகள் நடந்து வந்துருக்கு. சாதியின் அடிப்படைல பொது இடங்கள்ல நீங்கலாம் வரக்கூடாது, கோயிலுக்குள்ள நுழையக்கூடாதுனு ஏகப்பட்ட கட்டுப்பாடு சொல்லி அவங்களை பயங்கரமா ஒடுக்கிட்டும் இருந்துருக்காங்க. இப்படியே போய்கிட்ருக்க சமயத்துல கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த கிராமத்து பழங்குடி மக்கள் சிலர் திடீர்னு மயங்கியும், வாந்தி எடுத்தும் உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்ருக்காங்க. மருத்துவமனையில் இவங்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், நீங்க குடிச்ச தண்ணில எதையோ கலந்துருக்காங்கன்ற மாதிரி சொல்லியிருக்காங்க. உடனே, அதிர்ச்சியடைந்த மக்கள், அந்த ஊர் காவல் நிலையத்துல போய் புகார் கொடுத்துருக்காங்க. விசாரிச்சதுல, அவங்க குடிக்கிற தண்ணில மனிதர்களோட மலம் கலந்ததா தெரிய வந்துருக்கு. இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சம்பவ இடத்துக்குப் போய் விசாரணை பண்ணியிருக்காங்க. அதுல அந்த கிராம மக்கள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்காங்க. கோயில்குள்ளகூட விடமாட்றாங்கணும் தெரிவிச்சிருக்காங்க. கவிதா ராமு உடனே, அந்த மக்களை கூட்டிட்டு கோயிலுக்கு போய்ருக்காங்க. அப்போ, அந்த பழங்குடி மக்கள் நுழையும்போது சாமியாடிய பெண், அவங்க கோயில்குள்ள நுழையக்கூடாதுனு சொல்லி அவதூறாவும் பேசியிருக்காங்க. அவங்க மேல வன்கொடுமை தடுப்பு சட்டத்துல வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க. செம மாஸான ஆட்சியர் கவிதா ராமுவின் இந்த செயலை பலரும் பாராட்டிட்டு இருக்காங்க.
வேங்கைவயல் கிராமத்துலயே டீக்கடைல இரட்டைக்குவளை முறையையும் பின்பற்றியிருக்காங்க. இந்தக் காலத்துல யார்ரா சாதிலாம் பார்க்குறானு கேக்குறவங்களுக்கு இந்த சம்பவம்லாம் சின்ன எக்ஸாம்பிள். அந்த டீக்கடைகாரங்க மேலயும் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க. இதுதொடர்பா கவிதா ராமு வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டையில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோயில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் மேற்கண்ட குற்றங்கள் எந்த வடிவிலிருந்தாலும் பின்வரும் கைபேசி எண்ணிற்கு 9443314417 வாட்ஸ் அப் மூலமாக உரிய தகவல் தெரிவிக்கலாம்.”னு சொல்லியிருக்காங்க. அந்த ஊர்ல இருக்க குடிநீர் தொட்டியவே அந்த பட்டியலின மக்கள் போராடிதான் வாங்கியிருக்காங்க. இந்த விஷயம் தொடர்பா முதல்வருக்கும் அந்த பகுதி எம்.எல்.ஏ, இன்னைக்கு மலம் கலந்தவங்க, நாளைக்கு விஷம் கலக்க மாட்டாங்களானு கேட்டு கடிதம் எழுதியிருக்காரு. இதுவரை இந்த மாதிரியான சம்பவங்களை வடமாநிலங்கள்ல அதிகளவில் பார்க்க முடிஞ்சுது. ஆனால், இப்போ நம்ம ஊர்களிலும் நடக்க ஆரம்பிச்சுடுச்சுன்றது ரொம்பவே வருத்தமான விஷயமாதான் இருக்கு. இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்போதுதான் கவிதா மாதிரியான தைரியமான முடிவெடுக்கும் கலெக்டர் நமக்கு தேவைப்படுறாங்க. கவிதை ராமு இதுக்கு முன்னாடியும் சிறப்பான பல சம்பவங்களை செய்து, விமர்சிக்கப் பட்ருக்காங்க. கொடுமை என்னனா, அவங்களையே சாதிய அடையாளங்களோட வைச்சுதான் சோஷியல் மீடியாக்கள்ல விமர்சனம் பண்ணாங்க.
கவிதா ராமுவை சாதிய ரீதியா விமர்சனம் பண்ணவங்க, டேக் பண்ணவங்களுக்கு, “சமூக மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு பெயர்போன மாநிலத்தைச் சேர்ந்தவள், நான். சமூக நீதின்ற விஷயம் என்னோட கருத்துல ஆழமா பதிந்துள்ளது. பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தங்களை கேட்டு, படிச்சு வளர்ந்தவள் நான். பெரியாரோட கொள்கைகளை என்னோட வாழ்க்கைலயும் பின்பற்றுறேன். அதுல முக்கியமான விஷயம் சாதி எதிர்ப்பு. அதனால், அந்த மாதிரியான அடையாளங்கள்ல இருந்து விடுபட்டு இருக்குற என்னை நீங்க அப்படியே பார்க்கணும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் உழைப்பேன்”னு சொல்லியிருந்தாங்க. பேச்சுல மட்டும் நிக்காமல், அதை இன்னைக்கு நடைமுறை படுத்தியிருக்குறதுதான் மாஸான விஷயம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “எளியவர்களை அடக்கி ஒடுக்கி அமைதியை நிலைநாட்டி சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது தான் வழக்கமான நடைமுறை. அது ப்யூரோக்ரஸி. ஆணவத்தையும் ஆதிக்கத்தையும் அடக்கி ஒடுக்கி நீதியை நிலைநாட்டி சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பது நேர்மையான நடைமுறை. இது டெமாக்ரஸி. கவிதா ராமு ஒரு சனநாயக சக்தி”னு தனது பாராட்டை ட்விட்டர்ல பகிர்ந்து தெரிவிச்சிருந்தாரு. இதுக்கு முன்னாடி திராவிட சிந்தனைகளை நிறைய இடங்கள்ல வெளிப்படுத்தி இருக்காங்க. செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைல நடந்தப்போ, ஒவ்வொரு மாவட்டமும் வித்தியாசமான பல விளம்பரங்களை பண்ணாங்க. அதுல கவிதா ராமு உருவாக்கிய வீடியோ வைரலானது. பாராட்டையும் பெற்றது. செஸ் போர்டில் நடன வடிவில் அந்த வீடியோ இருக்கும். “கறுப்பு ராணியின் வெற்றியை மையமாக வைத்து இந்த வீடியோவை பதிவு செய்தோம்”னு அவங்களே சொல்லுவாங்க. கவிதா ராமு சிறப்பா பரத நாட்டியம் ஆடுவாங்கன்றதால அவங்களே இதை கோரியோகிராஃப் பண்ணாங்க. இவங்க ஆட்சியரா இருந்துட்டு நடனம்லா ஆடுறாங்கனு விமர்சனம் வந்துச்சு. அதுக்கும், “நான் என்னோட பணிகளை முடிச்சிட்டு இரவு நேரத்துல நடனம் ஆடுவேன். புத்தகங்கள் படிப்பேன்”ன்னு சொல்லி தக்க பதிலடி கொடுத்து எல்லாரையும் ஆஃப் பண்ணாங்க.
சோஷியல் மீடியால கவிதா ராமு ரொம்பவே ஆக்டிவா இருப்பாங்க. அதுக்கு அவங்களை விமர்சனம் பண்ணாங்க. அதுக்கும் என்னோட பெர்சனல் விஷயங்கள் அது. அதுக்கும் என்னோட பணிக்கும் சம்பந்தமில்லை. என்னோட பெர்சனல் டைம்ல அதைப் பண்றேன். எனக்குனு தனிப்பட்ட கருத்துகள்லாம் இருக்கக்கூடாதுனு சொல்றது எப்படி நியாயம்னு சிம்பிளா சொல்லிட்டு கடந்து போய்ட்டாங்க. சோஷியல் மீடியால அவங்க எந்த அளவுக்கு ஆக்டிவா, ரீசண்டா ஒரு கலெக்டர்கிட்ட ஸ்கூல் பசங்க லீவ் கேட்டு மெசேஜ் பண்ணாங்கள்ல. அது இவங்கதான். “நாளைக்கு லீவ் விடுங்க கலெக்டர் மேடம். நீங்க எடுக்கப்போற முடிவுலதான் பலபேரின் சந்தோஷம் இருக்கு, நீங்க லீவ் மட்டும் விடுங்க, என் மனசுல உங்களுக்கு கோயில் கட்றேன், படிச்சுப் படிச்சு பயித்தியம் புடிக்கிற மாதிரி எப்படியாவது லீவ் விடுங்க” இப்படி அவங்களுக்கு இன்ஸ்டாகிராம்ல நிறைய மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. அதை ஸ்கிரீன்ஷாட்டா ஷேர் பண்ணிருந்தாங்க. வேறலெவல்ல வைரல் ஆச்சு. இப்படி ஃபன்னியான சம்பவங்களையும் கவிதா ராமு செய்திருக்காங்க. அதேமாதிரி, குறைதீர்க்கும் நாள் நடக்கும்ல, அதுக்கு மாற்றுத்திறனாளிகள் வந்துருக்காங்க. அவங்களோட இருக்கைக்கே போய் கோரிக்கைகளை கவிதா ராமு வாங்குனாங்க. அந்த செய்தியும் சோஷியல் மீடியால அதிக அளவில் பகிரப்பட்டுச்சு. இப்படி குட்டி குட்டியா நிறைய விஷயங்களை கவிதா ராமு தொடர்ந்து பண்ணிட்டு இருக்காங்க. பெரிய விஷயம் நடக்கணும்னா, சின்னதாதான ஆரம்பிக்கணும். அதுக்கு கவிதா ராமு பண்ற செயல்கள் எல்லாமே பெஸ்ட் எக்ஸாம்பிள்னு சொல்லலாம்.
Also Read – நம்ம பாலிவுட்-டுக்கு என்னதான் ஆச்சு?
படங்க லீவ்ல தொடங்கி சாதியை ஆதரித்து சாமியே ஆடுனாலும் அவங்க மேல வழக்குதான்னு முடிவு பண்ணது வரைக்கும் கவிதா ராமுவின் பல செயல்கள் பாராட்டுக்குரியதுதான். அவங்களோட செயல்களை நீங்க எப்படி பார்க்குறீங்கன்றதை கமெண்ட்ல சொல்லுங்க.