பட்டாபியாய் பட்டி தொட்டிகளில் பட்டையைக் கிளப்பிய எம்.எஸ்.பாஸ்கர் ஆரம்பகாலத்தில் நடித்ததெல்லாம் ஊர், பெயர் தெரியாத கதாபாத்திரங்கள். இன்றைக்கு அவர் ரெக்கார்டில் 150+ படங்கள்.
எங்கள் அண்ணாவில் குடிகாரன், மாசிலாமணியில் கோமா ராமசாமி என கிடைத்த குட்டி குட்டி கேரக்டர்களில் சுமார் 25 ஆண்டுகள் சிரிக்க வைத்தவருக்கு, தமிழ் சினிமா அளித்த போனஸ்தான், ‘8 தோட்டாக்கள்’. ‘டாணாக்காரன்’.
‘The Shawshank Redemption’ மார்கன் ஃப்ரீமனுக்கு இவர் பேசிய டப்பிங்கை மார்கன் கேட்டிருந்தால் பாஸ்கரை கட்டியணைத்து கண்ணீர் விட்டிருப்பார். அவ்வளவு தரம்.
நடிப்பாலும் குரலாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு நகரவிடாமல் நிறுத்தியிருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமை கொள்கிறது, Tamilnadu Now Golden Carpet Awards. எம்.எஸ்.பாஸ்கருக்கு Tamilnadu Now சார்பாக Lifetime Achievement விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
எம்.எஸ்.பாஸ்கருக்கான விருதை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர். எம்.எஸ்.பாஸ்கருடன் பல படங்களில் பணியாற்றி
எம்.எஸ்.பாஸ்கர் தனது திரை அனுபவம் குறித்து பேசுகையில், `இது மிக நீண்ட பயணம். 1982-ல் திரைத்துறைக்கு வந்தேன். ஆரம்பத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக ஒரு வார்த்தை, அரை வார்த்தை கிடைத்துவிடாதா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. பிட் வாய்ஸ்னு நாங்க தமாஷா சொல்வோம். ஒருவன், மற்றொருவன், பிறிதொருவன், வேறொருவன்னு நாங்க பேசிட்டு இருப்போம். அந்த மாதிரி நாங்க டப்பிங் பேசிட்டு இருந்தோம். எனக்கு மூன்று அப்பாக்கள். எங்க அப்பா முத்துப்பேட்டை ஆர்.எம்.எஸ் அவர்கள் எனக்கு அடித்து தமிழ் சொல்லிக் கொடுத்தார். கலைஞர் அப்பா படித்து தமிழ் சொல்லிக் கொடுத்தார். நடிகர் திலகம் சிவாஜி அப்பா நடித்து தமிழ் சொல்லிக் கொடுத்தார்.
சின்னப் பாப்பா பெரிய பாப்பா சீரியல்ல எனக்கு நாலு வாரம் வர்ற ரோல்தான். அந்த சீரியலைப் பார்த்துட்டு கலைஞர், ராதிகா மேம்க்கு போன் பண்ணி, அந்தப் பையன் ரொம்ப நல்லா பண்றான். அவனைத் தொடர்ந்து பயன்படுத்திக்கோ என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான் தொடர் முழுவதும் வர்ற மாதிரியான ரோல் கிடைச்சது. எனக்கு மூன்று தலைமுறைகளோடு பழக்கம். கலைஞர் அப்பா எழுதிய வசனத்தை பேசி நடித்திருக்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்திருந்த குறிஞ்சி மலர்கள் சீரியலில் நானும் நடித்திருக்கிறேன். இப்போ தம்பி உதயநிதிகூட ஒரு சில படங்களில் பணியாற்றியிருக்கிறேன்’ என்று கூறினார்.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் ஆத்ரி கேஷா கேரக்டர் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினார் இயக்குநர் சிம்பு தேவன். அந்தப் படத்துக்காக குதிரையை சேணம் இல்லாமலேயே ஓட்ட தனியாகப் பயிற்சி எடுத்துக் கொண்டாராம் எம்.எஸ்.பாஸ்கர். அதேபோல் அந்த கேரக்டர் பேசும் ஜிப்ரிஷ் மொழி உருவான விதம் பற்றி பேசுகையில்,` முதலில் வார்த்தைகளை உல்டா பண்ணிப் பேசலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், ஒரு கட்டத்தில் அது தெரிந்துவிடும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் வாயில் வந்த வார்த்தைகளைப் பேசலாம் என்று முடிவு செய்தேன். அப்படித்தான் அந்த மொழியைப் பேசினேன்’ என்று கூறினார். அதேபோல், எம்.எஸ்.பாஸ்கரோடு நடித்த அனுபவம் பற்றி ஜி.வி.பிரகாஷ் பேசியது, ஒரு கேரக்டரை எம்.எஸ்.பாஸ்கர் எப்படி தேர்வு செய்வார் என்ற கேள்விக்கு அவரே சொன்ன இண்ட்ரஸ்டிங்கான பதில் என சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிஞ்சுக்க Tamilnadu Now யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் Golden Carpet Award ஷோவை மிஸ் பண்ணாமப் பாருங்க!