சூப்பர் குட் ஃபிலிம்ஸ் | மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சினிமா தயாரிப்பில் தனித்துவ முத்திரை பதித்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ்… சூப்பர் என்கிற பெயரில் ஆர்.பி.சௌத்ரி தொடங்கிய இந்த நிறுவனத்தின் பெயர் சூப்பர் குட் என்று மாறியதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கு… தமிழ் சினிமாவில் கோலோச்சிய, கோலோச்சிக் கொண்டிருக்கும் முன்னணி இயக்குநர்கள் பலருக்கும் தாய்வீடு இந்த சூப்பர் குட் பிலிம்ஸ்.. அந்த தயாரிப்பு நிறுவனம் பத்திதான் நாம இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஆர்.பி.சௌத்ரி, ஆரம்பத்தில் ஸ்டீல், தங்க நகை வியாபாரம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்படுகிறது. இதையடுத்து, 1980-களில் சூப்பர் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மலையாளத்தில் படம் தயாரிக்கிறார். மூன்று மலையாளப் படங்களை எடுத்த பிறகு தமிழிலும் படங்கள் தயாரிக்கலாமே என்று முடிவெடுக்கிறார். அதன்பிறகு, ஆர். மோகன் என்பவரோடு கைகோர்த்து தமிழ் படங்களைத் தயாரிக்கத் தொடங்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் தமிழில் முதன்முதலில் வெளியான படம் புது வசந்தம். தங்கள் நிறுவனத்தின் முதல் படத்திலேயே இயக்குநராக விக்ரமனை அறிமுகப்படுத்திய பெருமை கொண்டது சூப்பர் குட் பிலிம்ஸ். பெரிய ஹீரோக்கள் இல்லாமல், புது டைரக்டரோடு களமிறங்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 25 வாரங்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் படைத்த புது வசந்தம், 1990-ம் ஆண்டின் அதிக வசூல் படைத்த படமானதோடு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் என தமிழக அரசின் இரண்டு விருதுகளையும் வென்றது. இப்படி கிராண்டான வெற்றியோடு சூப்பர் குட் பிலிம்ஸின் கோலிவுட் பயணம் தொடங்கியது.
சூப்பர் என்ற பெயரில் மலையாளத்தில் படங்கள் தயாரித்த ஆர்.பி.சௌத்ரி தமிழில் தனது நிறுவனத்தின் பெயரை சூப்பர் குட் என மாற்ற என்ன காரணம் தெரியுமா… அதுக்கான பதில் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க… பதிலைத் தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, இளம் திறமையாளர்களைக் கண்டுகொள்வதில் கைதேர்ந்தவர் என்றே சொல்லலாம். அதுக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். இது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு மேடையிலேயே சொன்னது. அவருக்காக எடுக்கப்பட்ட பாராட்டு விழா ஒன்றில் பேசுகையில், `எனக்குக் கோயில் சூப்பர் குட் பிலிம்ஸ். வாழும் தெய்வம் ஆர்.பி.சௌத்ரி சார். இதை ஏன் சொல்றேன்னா… என்ன முதன்முதலில் இயக்குநராக்கி அழகுபார்த்தவர். கிட்டத்தட்ட 10 வருடங்களாக உதவி இயக்குநராக இருந்தேன். என்னிக்காவது நாம டைரக்டராகிட மாட்டோமா என்கிற ஏக்கம் எனக்குள் இருந்தது. புது வசந்தம் படத்துல ஒர்க் பண்ணிட்டு இருந்த சமயம். அந்தப் படம் அப்போ ரிலீஸ் கூட ஆகலை. ஆர்.பி.சௌத்ரி சார் கூப்பிட்டு ஒரு கன்னடப் படத்தைக் காட்டினார். இந்தப் படத்துல கன்டன்ட் நல்லா இருக்கு. ஆனால், சாங்ஸ், ஃபைட்ஸ்னு கமர்ஷியல் எதுவும் இல்லை. அதையெல்லாம் சேர்த்து ஒரு ஸ்கிரிப்ட் பண்ணிக் கொடுப்பானு சொன்னார். நானும் பண்ணிக் கொடுத்தேன். நல்லா இருக்குனு சொல்லிட்டு, நாளைக்கு எஸ்.ஏ.ராஜ்குமாரை வரச் சொல்லிடுறேன். ட்யூன்ஸ் வாங்கிடுனு சொன்னார். அதுக்கு நான், `சார் அதையெல்லாம் டைரக்டர்தான் வாங்கணும். ரைட்டர் வாங்க மாட்டாங்கன்’னு சொன்னேன். அவர் உடனே, `யோவ் நீதான்யா டைரக்டர்’னு சொல்லிட்டு டக்குனு எழுந்து போயிட்டார். அப்படித்தான் நான் டைரக்டர் ஆனேன்’ என்றுகூறி நெகிழ்ந்திருப்பார். அந்தப் படம் புரியாத புதிர். அந்த அளவுக்கு இளம் திறமையாளர்களைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு வாய்ப்பு வழங்கியவர் ஆர்.பி.சௌத்ரி. அந்தவகையில் பார்த்தால், தமிழ் சினிமாவில் இதுவரை இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் தவிர சொல்லாமலே படம் மூலம் சசி, துள்ளாத மனமும் துள்ளும் மூலம் எழில், ஆனந்தம் படம் மூலம் லிங்குசாமி என பல முன்னணி இயக்குநர்கள் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்தான்.
Also Read – தமிழ் to இந்தி ரீமேக்… பாலிவுட் ‘பதம்’ பார்த்த ஃபர்னிச்சர்கள்!
சூப்பர் குட் பிலிம்ஸின் பெரும்பாலான படங்களை இயக்கியிருப்பது அறிமுக இயக்குநர்களே… அதேபோல், சூப்பர் குட் பிலிம்ஸ் என்றாலே குடும்பப் படங்கள்தான் என்கிற பிராண்டும் அவர்களது பலம். தங்கள் நிறுவனத்தின் 50-வது படமான ரவிமரியா இயக்கிய ஆசை ஆசையாய் படம் மூலம் ஆர்.பி.சௌத்ரி, தனது மகன் ஜீவாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதேபோல், ஜித்தன் படம் மூலமாக மற்றொரு மகனான ரமேஷையும் ஹீரோவாக்கினார். விஜய், அஜித் என இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் இருவரை வைத்துமே சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ரெக்கார்டு கொண்டது சூப்பர் ஹிட் பிலிம்ஸ். குறிப்பாக விஜய், இந்த நிறுவனத்தோடு கிட்டத்தட்ட 6 படங்களில் பணிபுரிந்திருக்கிறார். பூவே உனக்காக மூலம் விஜய் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது இந்த நிறுவனம்தான். துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி என தொடர்ச்சியாக விஜய் நடித்திருக்கிறார். 2014-ல் வெளிவந்த ஜில்லா படம் சூப்பர் குட் பிலிம்ஸின் 85-வது படம். அந்த நிறுவனத்தின் நூறாவது படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தை எடுத்துக் கொண்டால், நீ வருவாய் என, உன்னைக் கொடு என்னைத் தருவேன் என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் 6 படங்களை இந்த பேனரில் இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹிட் படங்களுள் முக்கியமானதாகக் கருதப்படும் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற படங்கள் இவர்களது படைப்புதான்.
சூப்பர் என்கிற பெயர் சூப்பர் குட் பிலிம்ஸ் என்று மாறியதற்குப் பின்னால் இருக்கும் காரணம்… தமிழ் படங்கள் தயாரிக்க இவர் எண்ணியபோது கைகோர்த்த மோகன், குட்நைட் கொசுவர்த்திகள் தயாரிப்பை மேற்கொண்டு வந்தவர். ஒரு கட்டத்தில் பிரிந்துவிடலாம் என்று இருவரும் முடிவெடுத்திருக்கிறார். அப்போது குட்நைட்டில் இருக்கும் `குட்’ என்பதை சேர்த்து தனது நிறுவனத்தின் பெயர் சூப்பர் குட் பிலிம்ஸ் என்று மாற்றிக்கொண்டார். அந்தப் பெயரிலேயே தமிழில் படங்கள் தயாரித்தாலும், தெலுங்கில் மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் என்கிற பெயர் பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படங்கள்ல உங்களோட ஃபேவரைட்டான படங்கள் எதெல்லாம்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
hhhu32