தொடர் தோல்விகளால் இன்னைக்கு சினிமா கரியர்ல பின்னால இருக்கிறார் நடிகர் பிரசாந்த். அதனால இன்னைக்கு இருக்கிற 2கே கிட்ஸ்களால் சமூக ஊடகங்களில் கேலிக்குரிய நபரா பார்க்கப்படுகிறார், பிரசாந்த். ஆனா, உண்மையாவே பிரசாந்த் யாருனு அவங்களுக்கு தெரியாது. அதுக்காகவே விரிவான ஒரு வீடியோ பண்ணனும்னு தோணிச்சு. அதுக்காகத்தான் இந்த வீடியோ. 1990-களில் துறுதுறு இளைஞனா அறிமுகமாகி வெற்றி அடைஞ்சவர்கள்ல இன்னைக்கு உச்சத்துல இருக்கிற அஜித்தும், விஜய்க்கும் ஒருபடி மேல தான் அன்னைக்கு காலகட்டத்தில் பிரசாந்த் வலம் வந்தார். அப்படி ஒரு நிலையான இடம் அவருக்கு அப்போது இருந்தது. முதன் முதலாக என பல ரெக்கார்ட் பிரேக் சம்பவங்களைச் செய்தவர், நடிகர் பிரசாந்த்.
பிரசாந்த் – அறிமுகமே இன்ஸ்டன்ட் ஹிட்!
தமிழ் சினிமாவில், கடந்த 40 வருஷ காலமா இருக்கிற வாரிசுகள்ல, சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாலயே எல்லா கலைகளையும் முறைப்படி கத்துக்கிட்டு வந்தவர் நடிகர் பிரசாந்த் மட்டும்தான்.1990 முதல் படமான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமானார், பிரசாந்த். அப்போ பிரசாந்தோட வயசு 17. சினிமாவுக்கு கொண்டு வர்றதுக்காகவே கராத்தே, நடனம், குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக்னு எல்லா வித்தைகளையும் முறைப்படி கத்துக்கொடுத்திருந்தார் அவர் தந்தை தியாகராஜன். பிரசாந்த் அறிமுகமாகும்போதே தந்தை 100 நாட்கள் ஓடக்கூடிய படங்களைக் கொடுத்த ஹீரோக்கள் லிஸ்டில் இருந்தார். மகனுக்காக பின்னாட்களில் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.
வைகாசி பொறந்தாச்சி ஒரு இன்ஸ்டன்ட் ஹிட் சினிமா. படத்தின் கதை ரொம்ப ஈஸி. ஏழை நாயகன், பணக்கார நாயகி. மோதலில் ஆரம்பித்து காதலில் விழுந்து தந்தை எதிர்ப்பை மீறி சேர்வதுதான் கதை. அந்தப் படத்தின் ‘தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குதுங்குற பாடல் இன்னைக்கும் பிரபலமான பாட்டு. இசையமைப்பாளரா தேவாவுக்கு அது மூணாவது படம். வெளியிட்ட எல்லா இடங்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வெள்ளிவிழா கண்டது. இவரைக் கண்ட மலையாள உலகம் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது. இரண்டாவதாக மலையாளத்தில் நடித்த பெருந்தச்சன் சினிமா தேசிய விருது வாங்க, கவனிக்கப்படும் நடிகரானார், பிரசாந்த். அடுத்ததாக பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், பிரம்மாண்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி என தொண்ணூறுகளோட ஆரம்பத்துல பிரசாந்த் வளர்ச்சி ஜெட் வேகத்தில் இருந்தது. செம்பருத்தி, ரோஜா அறிமுகமான முதல் படம். பிரசாந்த், ரோஜா கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் ரிப்பீட்மோட்ல படம் பார்க்க வந்தாங்க.
1992-ல ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘செம்பருத்தி’ பிரசாந்துக்கு நட்சத்திர அந்தஸ்தை வாங்கிக் கொடுத்தது. அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட அந்தப் படம் ஆல் சென்டர் ஹிட். ’ரோஜா’ சினிமா மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்திருந்த மணிரத்னம் தன் அடுத்த படமான ’திருடா திருடா’வில் பிரசாந்தை நடிக்க வைத்தார். மணிரத்னம் படங்கள் எல்லா நடிகர்களுக்குமே ஒரு புதிய வண்ணத்தைக் கொடுக்கும், பிரசாந்துக்கும் அது நடந்தது. இந்தப்படத்தில் ஆக்ஷன், காமடி, காதல், சென்டிமென்ட் என அனைத்தையும் வெளிக்கொண்டுவந்தார் பிரசாந்த்.
1998-ல் ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான ‘ஜீன்ஸ்’ பிரசாந்துக்கு இன்னொரு திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்தப் படத்தில் விஸ்வநாதன், ராமமூர்த்தி என ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகப் படம் முழுக்க ஒரே காஸ்ட்யூமிலும் கெட்டப்பிலும் தோன்றினாலும் தன் நடிப்பின் மூலம் இரண்டுக்கும் நுண்ணிய வித்தியாசங்களைக் காட்டியிருப்பார். இந்தியா முழுவதும் புகழ்பெற்ற மணிரத்னம் மற்றும் ஷங்கர் இருவரது இயக்கத்திலும் நடித்த சில நடிகர்களில் பிரசாந்த்தும ஒருவர். ’ஜீன்ஸ்’ படத்தின் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையும் அவருக்குக் கிட்டியது. அதே ஆண்டு வெளியான ‘கண்ணெதிரே தோன்றினாள்’, அடுத்த ஆண்டு வெளியான ‘ஜோடி’, ‘மஜ்னு’ படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இப்படியாக 1990களில் முன்னணி இளம் கதாநாயகனாகத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தனி முத்திரை பதித்தார் பிரசாந்த்.
’வசந்த இயக்கிய ‘அப்பு’ மாறுபட்ட கதையம்சத்தால் ஈர்த்தது. 2000-ல் சரண் இயக்கத்தில் வெளியான ‘பார்த்தேன் ரசித்தேன்’ மிகப் பெரிய வெற்றி பெற்றது. பேருந்துகளில் வளரும் காதலுக்கு புது வடிவம் கொடுத்த அந்தப் படத்தை இன்று போட்டாலும் பார்க்க முடியும். ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘சாக்லேட்’ அவருக்கு இன்னொரு வெற்றிப் படமானது. இயக்குநர் ஹரியின் அறிமுகப் படமான’ தமிழ்’ மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுக்க வைத்தது. அந்தப் படம் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. 2003-ல் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘வின்னர்’ படத்தின் பிரசாந்துக்கு இன்னொரு ஆல் சென்டர் வெற்றியாக அமைந்தது. இந்தப் படத்தில் நாயகி கிரணுடனான கெமிஸ்ட்ரியைவிட வடிவேலுவுடனான நகைச்சுவை கெமிஸ்ட்ரி வெகு சிறப்பாக அமைந்திருந்தது. ‘ஆயுதம்’, ‘லண்டன்’ ஆகிய படங்களிலும் பிரசாந்த்-வடிவேலு கூட்டணி நகைச்சுவை விருந்து படைத்தது. அதற்குப் பின்னால் வந்த படங்கள் பெரிதாக கைகொடுக்காததால் முன்னணி நடிகர்கள் ரேஸிலிருந்து கொஞ்ச காலம் ஒதுங்கியிருக்கிறார்.
பிரசாந்த் – முதல் லேடி கெட்டப்!
ஒரு நடிகர் பெரும் பகுதி படத்தில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார் என்றால் உடனடியாக அனைவருக்கும் நினைவுக்கு வருவது கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’. கமல்ஹாசன் தமிழில் பல புதுமைகளைப் புகுத்தியவர் என்றாலும் ‘அவ்வை சண்முகி’யில் அவர் செய்தது புதிதில்லை. அதற்கு ஒரு ஆண்டு முன்பாகவே வெளியான ‘ஆணழகன்’ படத்தில் பிரசாந்த் அதைச் செய்துவிட்டார். ‘அவ்வை சண்முகி’யில் கமல்ஹாசன் மகளுக்காகவும் பிரிந்து சென்ற மனைவியுடன் சேர்வதற்காகவும் வயதான பெண்ணாக வேடமிட்டார் என்றால் ‘ஆணழகன்’ படத்தின் பிரசாந்த் தன் காதலில் வெற்றிபெறுவதற்காக இளம் பெண்ணாகத் தோன்றுவார்.
ரியல் ஆணழகன்!
’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த்தான். அரவிந்த்சுவாமி, அப்பாஸ், அஜித் என்று அந்தக் காலகட்டத்தில் அழகான ‘சாக்லேட் பாய்’ ஆண் நடிகர்களுக்குப் பஞ்சமில்லை. இருந்தாலும் பிரசாந்திடம் ஒரு வசீகரம் இருந்தது. மீசை தாடியோட இருந்தாலும் அழகு, முழுக்க மழித்த க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருந்தார். பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்ஷன் படம், கதையம்சமுள்ள படங்கள் என பல வகையான படங்களில் நடித்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி அமர்ந்தார். பிரசாந்தின் படங்களில் கமிட்டாகும் நாயகிகள் உண்மையிலேயே காதலர்கள் போல ஒரு கெமிஸ்ட்ரி வொர்க் ஆகிவிடும். அதற்குக் காரணம் பிரசாந்தின் அந்த வசீகரம்தான். காதல் பாதையில் பயணித்தாலும் நடனம், ஆக்ஷன் என கமர்சியல் சினிமாவுக்கு ஏற்ற வகையிலும் தன்னை தயார்படுத்திக் கொள்பவர் நடிகர் பிரசாந்த். பிரசாந்தின் நடனத்திலும் அலட்டல் இருக்காது. இயல்பான நடனம், எவ்வளவு கடினமான ஸ்டெப்களாக இருந்தாலும் அவரால் அதைச் செய்ய முடியும்.
Also Read – சும்மா அதிரும்… தமிழ் சினிமாவில் பின்னிப் பெடலெடுத்த டபுள் ஹீரோ படங்கள்!
நடிகராக உச்சத்தில் இருக்கும்போது லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ‘பிரசாந்த் ஸ்டார் நைட்’ என்ற பெயரில் நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். இதன் மூலம் அவருக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் ரசிகர்கள் ஆனார்கள். இன்றளவும் அவர்கள் பிரசாந்த் மீது பெரும் மதிப்பு கொண்டவர்களாக விளங்குகிறார்கள். இன்றளவும் பிரசாந்துக்கென்று ஒரு ரசிகர்கள் படை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதுவே பின்னாளில் கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க கலை நிகிழ்ச்சிக்காக முன்னோடியாகவும் இருந்தது.
பிரசாந்தின் சாதனைகள்!
ஆர்.கே செல்வமணி – ஷங்கர்- மணிரத்னம்-பாலுமகேந்திரா-வசந்த்-ஹரி-சுந்தர்.சி என பல முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்த ஒரே ஹீரோ இவர் மட்டுமே. நீண்ட நாட்கள் காதல் நாயகனாகவும், பெண்களின் பேராதரவு பெற்றவரும் இவர் மட்டுமே. முதல் முதலாக ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்த தமிழ்நடிகர், ஸ்டார் நைட் ஷோ நடத்தியது, முதல் நீளமான பெண் வேடம், இரண்டாவது படமே தேசிய விருது என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்தான் டாப் ஸ்டார், பிரசாந்த்.
அலட்டிக்கொள்ளாத ஆட்டிட்யூட்!
இவர் சினிமாவைத் தாண்டி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியைப் பார்த்தாலே தெரியும். எந்த பந்தாவும் அவர் முகங்களில் இருக்காது. டவுன் டூ எர்த் பெர்சன். அதேபோல உயரத்தில் இருந்தபோது தலைக்கனம் இருந்ததில்லை, டவுனானபோது வருத்தப்பட்டதும் இல்லை. ஆனால், அளவுக்கதிகமாக ட்ரோல்கள் செய்யப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர். இவரளவுக்கு வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கியிருப்பார்கள். ஆனால் சினிமாவில் சாதிக்க இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2019-ல். Vinaya Vidheya Rama தெலுங்கு படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார் . ஒரு காலத்துல எப்படி இருந்த மனுசன்யா என ‘உச்’ கொட்டினர் சினிமா ரசிகர்கள். தமிழ் சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் சாதாரணமானவை. தன் முயற்சியையும் உழைப்பையும் இன்னும் கைவிடவில்லை. அடுத்ததாக அந்தாதூன் வெளியாக இருக்கிறது. அது ரெக்கார்ட் பிரேக்காக இருக்கும் என நம்பலாம்.