கதையா புதுசா இருக்கும், பாட்டெல்லாம் செம்ம ரெஃபரஷிங்கா இருக்கும், நாம இதுக்கு முன்னாடி பார்த்த ஹீரோவா இதுனு ஆச்சர்யப்படுத்தும், இந்த டைரக்டருக்கு இப்படிக்கூட எடுக்கத் தெரியுமானு மிரள வைக்கும்னு சர்வ லட்சணங்களும் பொருந்திய படம் தமிழ் சினிமால எப்பவாச்சும்தான் அமையும். அப்படி ஒரு படம் தான் 13 வருஷத்துக்கு முன்னால வெளியான ‘பையா’. பிடிச்சவங்களோட கார்ல ஒரு பயணம் போகுற வாய்ப்புங்குறது அதை அனுபவிச்சவங்களுக்குதான் தெரியும் அது எவ்வளவு கவிதையான தருணம்னு. நம்ம எல்லாருக்குமே இருக்குற அந்த ஏக்கத்தை திரையில பார்த்ததும் டக்குனு ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு.
பையா – ஆரம்பமான இடம்!
பீமா படம் ஷூட்டிங் போய்கிட்டிருந்த நேரம், வழக்கமா ஷூட் நடக்கிற இடைவெளியில கதை டிஸ்கஷன் நடத்துறது லிங்குசாமியோட வழக்கம். அதுல கிடைக்கிற சீன்களை ஒரு டேப்ல ரெகார்ட் பண்ணி வச்சுக்குவார். பீமா படம் ரிலீஸான பின்னால ஒரு கதை யோசிக்கிறப்போ, பீமா டைம்ல பேசுன ஒரு சீன் லிங்குசாமியோட நியாபகத்துக்கு வருது. அந்த சீன் என்னன்னா.. ‘நாம திருப்பதி போய்கிட்டிருக்கும்போது, ஒரு மணப்பெண் கார் பிரேக்டவுன் ஆகி நிற்குது. அப்போ அவங்க குடும்பம் நம்மகிட்ட “சார், திருப்பதி வரைக்கும் கொண்டுபோய் விட்டுடுறீங்களா?”னு கேட்குறப்போ, நாமும் கார்ல ஏத்திட்டு திருப்பதிக்கு லெப்ட்ல திரும்புறப்போ, அந்த கல்யாணப் பொண்ணு ரைட்ல திருப்புங்க, எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல’னு உதவி கேட்டா எப்படி இருக்கும். இதுதான் அந்த டேப்ல இருந்த சீன். அந்த சீனை வெச்சு டெவலப் பண்ண படம்தான் பையா. அந்த நாட் மட்டும் எடுத்துக்கிட்டு, பெங்களூர் டூ மும்பை கார் டிராவலை மையமா வச்சு லவ் ஆக்ஷன் ஜானர்ல பண்ணியிருந்தார், லிங்குசாமி. ஒரு சீனிலிருந்து ஒரு சினிமாவுக்கான கதையை வடிவமைக்கிறதுல லிங்குசாமி கில்லாடி.
இயக்குநர் லிங்குசாமி!
காதல் கொண்ட பெண் கூட தொலைவான பயணம் அப்படிங்குற காதல் கவிதை மாதிரி இருந்த ஒன்லைன்ல ஆக்ஷன் கியரைப் போட்டு தூக்கியிருந்தார், இயக்குநர் லிங்குசாமி. ஒரு நீண்ட பயணத்தில் என்னவெல்லாம் இடையூறுகளையும், சுவாரஸ்யங்களையும் படமாக்க முடியுமோ அதை கச்சிதமாக படமாக்கியிருந்தார். உதாரணமா, தமன்னாவுக்காக கார்த்தி தோசை ஆர்டர் பண்ற சீன், அதை தமன்னா சாப்பிடுறப்போ அதை ரசிக்கிற கார்த்தி கேரக்டர். லிப்ட் கேட்டு தமன்னாவை பிக்கப் செய்ய முயலும் சாப்ட்வேர் இஞ்சினியர், தமன்னா காரை முதன்முதலா ஸ்டார்ட் பண்றது, கார்த்தியின் நாக்குமூக்கா ரிங்டோன்னு பல இடங்கள்ல சுவாரஸ்யம் நிரம்பியிருந்ததேனு சொல்லலாம். இந்தப்படத்துக்காக எந்த காம்ப்ரமைஸூம் செய்யக் கூடாதுனு நினைச்ச லிங்குசாமி இதை அவர் பேனர்லயே தயாரிச்சார். ஏன் அப்படி பண்ணார் அப்படிங்குறதுக்கும் உதாரணமா ஒன்னு இருக்கு. பையாவுக்காக ஒரு க்ளைமேக்ஸை ஒன்றரைக் கோடி செட் போட்டு எடுத்து முடிச்சு, அதுல திருப்தி கிடைக்காம ராமோஜிராவ் ஸ்டுடியோல இன்னொரு க்ளைமேக்ஸை எடுத்தார். மற்ற தயாரிப்பாளர் படங்கள்னா அது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. லிங்குசாமிக்கு இருந்த ஒரே எண்ணம், இதை நல்லா எடுத்திருக்கலாம்னு யாரும் சொல்லிடக் கூடாதுனு ரொம்பவே மெனெக்கெட்டிருந்தார். ஃபைட் சீன்ல லிங்குசாமியோட சர்ப்ரைஸான டச் இதுலயும் இருந்தது. அதுலயும் கார்த்தி முதல்முதலா ஃபைட் பண்ற இடம் வெறித்தனமா இருந்தது. அந்த சீனுக்கு முன்னால வரைக்கும் கார்த்தி இப்படி பைட் பண்ணுவார்னு காட்டாம, திடீர் ஆக்ஷன் மோடுக்கு திரும்பி வெறித்தனமா பண்ணியிருந்தார், லிங்குசாமி. அதே நேரம் ப்ளாஷ்பேக் காட்சிகளில் மும்பையில் முன்னாடி கார்த்தி வில்லனை அடிச்சு ரத்தம் கக்க வச்ச சம்பவங்களை ரிவீல் ஆகுறப்போதான் காதலுடன் சேர்ந்து ஆக்ஷனுடன் கதை டாப் கியருக்கு மாறும். எங்கயுமே போரடிக்காம திரைக்கதையை நகர்த்திக் கொண்டுபோனார். சவாலான கார் காட்சிகளை கச்சிதமாக படமாக்க முடியும் என்று நிரூபித்தும் காட்டினார், லிங்குசாமி. காதல் படத்தை கார்லயே முடிக்கலாம்னு கோலிவுட்டுக்கு பாடம் எடுத்தார், லிங்குசாமி.
Also Read – வசீகரா, உனக்குள் நானே, ஒன்றா ரெண்டா ஆசைகள்… இதெல்லாம் பாம்பே ஜெயஸ்ரீ பாடுனதா?!
வசனங்கள் மற்றும் கேமரா!
இந்த படத்துல ரொம்ப கம்மியான வசனங்கள்தான். ஆனா ஒவ்வொண்ணும் நருக் சுருக்னு இருக்கும். ‘மும்பைல உனக்கு வேண்டியவங்க சில பேர் இருக்காங்கனு சொன்னேல.. எனக்கு வேண்டாதவங்க சில பேர் இருக்காங்க’ டயலாக் ஒரு சாம்பிள். ஒளிப்பதிவாளர் மதியின் உழைப்பும் படத்துக்கு பக்கபலமாக இருந்தது. கார் சேசிங் காட்சிகளையும், பரபரப்பை பற்ற வைக்கிற காட்சிகள்லேயும் ஒளிப்பதிவில் மிரட்டியிருந்தார். அதேபோல கனல் கண்ணன் ஸ்டண்ட் மூலமா படத்தை வேற ஒரு இடத்துக்கு அழைச்சுக்கிட்டு போயிருந்தார்.
கார்த்தி – தமன்னா!
இந்த படத்தில்தான் கார்த்தி-தமன்னா ஜோடி முதல்முதலாக சேர்ந்திருந்தது. அதுவரை அழுக்காக வந்த பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவனுக்குப் பின்னர் பையா படத்தில் மார்டனாக உருமாறியிருந்தார், கார்த்தி. அயனுக்கு அடுத்த வருடம் இந்த படம் வந்திருந்தாலும் ப்ரெஷ்ஷான தமன்னாவாக இருந்தார். இந்த ரோல்ல முதல்ல நடிக்க வேண்டியது நயன்தாராதான். அதுமுடியாமல் போனதால்தான் தமன்னா உள்ள வந்தாங்க. ஆனா, கார்த்தி-தமன்னா கூட்டணி ரொம்பவே ஃப்ரெஷ்ஷாவே இருந்தது. கார்த்தி காதல், ஆக்ஷன், ஏக்கம், துள்ளல்னு எல்லா இடங்கள்லேயும் ஸ்கோர் பண்ணியிருந்தார். தமன்னாவை பார்க்கிறதுக்கு இண்டர்வ்யூ மிஸ் பண்ற சீன், தமன்னாகிட்டயே மொக்கை வாங்குற இடம், கோபப்பட்டு பொங்கியெழுற இடம்னு எல்லா இடங்கள்லேயும் பிரிச்சுவிட்டிருந்தார். தமன்னா, பதட்டம், காதல், கலாய்னு எல்லா இடங்கள்லேயும் சிறப்பாவே பண்ணியிருந்தார். அதுவும் அடடா மழையில போட்ட ஆட்டத்துக்கே குடுத்த காசு வொர்த்னு சொல்லலாம். அப்படி ரசிகர்களை தன்னோட அழகால சொக்க வைச்சிருந்தார், தமன்னா.
பருத்திவீரன்லயும் ஆயிரத்தில் ஒருவன்லயும் அழுத்தமான பெர்பாமன்ஸ் கொடுத்திருந்த கார்த்திக்கு இது ரொம்ப சாதாரணமான கேரக்டரா இருக்கேனு யோசிச்சிட்டு இருக்கும்போது ஒரு சீன் வந்தது. க்ளைமேக்ஸ்க்கு முன்னாடி தமன்னாவை அவங்க வீட்டுல விட்டுட்டு சோகமா திரும்பி வரும்போது அவரோட ஃப்ரெண்டு கால் பண்ணி பேசுவாங்க. அந்த ஒரு சீன்லயே பருத்திவீரனோட இண்டன்சிட்டியை கொண்டு வந்திருப்பாரு. ‘பெங்களூர்ல இருந்து மும்பை வரைக்கும் வந்திருக்கேன். அதெல்லாம் தூரமாவே தெரியல. அவளை வீட்டுல விட்டுட்டு ஒரு தெருதான் வந்திருக்கேன். ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரி ஃபீல் ஆகுது’னு குரல் உடைஞ்சு சொல்ற அந்த இடத்துல ‘நடிகன்டா’னு சொல்லத்தோணும். அதுலயும் குறிப்பா கார்த்தியோட எக்ஸ்பிரசன்ல ‘ஏதோ ஒன்று என்னைத் தாக்க’ பாட்டு பல பேரோட ஃபேவரிட்டா இருக்கும்.
யுவன் சங்கர் ராஜா மற்றும் முத்துக்குமார்!
நா.முத்துக்குமார் பாடல்கள் எழுத இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா படத்தை செதுக்கியிருந்தார். இயக்குநர் லிங்குசாமி சீனைச் சொல்ல சொல்ல மொத்தமாக 6 பாடல்களையும் நா.முத்துக்குமார் உடனடியாக எழுதியிருக்கிறார். அதேபோல பருத்திவீரனுக்குப் பின்னால் பையாவில் கார்த்திக்காக மெனெக்கெட்டு இசையை கொடுத்தார், யுவன்சங்கர் ராஜா. இந்த பாடல்களை ஒவ்வொன்னா கம்போஸ் பண்ணி லிங்குசாமிக்கு அனுப்பினார் யுவன். முதல் பாடலை கேட்டப்போ, இந்த பாட்டுதான் யுவனோட கரியர் பெஸ்ட்டா இருக்க போவுதுனு சொல்ல, அடுத்த பாட்டு ரிசீவ் ஆகுது, அதைக்கேட்ட லிங்குசாமி, இதுதான் கரியர் பெஸ்ட்னு சொல்ல..இப்படியே இது 6 பாட்டுக்கும் தொடர்ந்துச்சு. முடிவுல படத்தைப் பார்த்த லிங்குசாமி யுவனோட இசையில மிரண்டுபோனார். குறிப்பா லவ் போர்ஷன்ல இருந்து படம் ஆக்ஷன் மோடுக்கு மாறும்போது பரபர பி.ஜி.எம்மால் தீயைப் பற்ற வைத்திருந்தார். இந்த படங்களோட பாடல்கள்தான் அன்னைக்கு சன் மியூசிக், எப்.எம்கள்ல அதிகமா ஒலிச்சது. ரொம்ப நாளுக்கு அப்புறமா லவ்வர்ஸ் பேக்கேஜ்ஜாகவும், முகம் சுளிக்காத, கவிதைத்துவமான பாடல்களாக இருந்தன. உருவத்தை முத்துக்குமாரும், உயிரை யுவன் கொடுத்ததுபோலவும் இருந்தது, பாடல்களின் தன்மை. இன்று கேட்டாலும் பாடல்கள் அவ்ளோ வைஃப் கொடுக்கும்.
சரியான திரைக்கதையும், நல்ல குழுவும் அமைந்தது படத்தின் மிகப்பெரிய பலம் என சொல்லலாம். இப்போ இந்த படத்துக்கான இரண்டாம் பாகம் மே மாதம் ஆரம்பிக்க இருக்கு. ஆர்யா ஹீரோவா நடிக்க இருக்கார். பையா 1 போலவே பையா 2 பாகமும் வர வாழ்த்துக்கள்.