கட்சித் தொண்டர்களிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோக்கள் அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொண்டர்களிடம் சசிகலா என்ன பேசினார்?..
அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்பார் என்று கருதப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆனார். மறுபுறம் முதலமைச்சர் பதவியைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தினார். இந்த சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரவே 2017ம் ஆண்டு பிப்ரவரி 15-ல் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். பின்னர், எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ் அணிகள் இணைந்தன. காட்சிகள் மாறி ஓ.பி.எஸ் துணை முதல்வரானார்.
தமிழகத்தின் தேர்தல் நெருங்கிய வேளையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப பெங்களூருவிலிருந்து காரில் தமிழகம் வந்த சசிகலாவுக்கு வழிநெடுக தொண்டர்கள் வரவேற்புக் கொடுத்தனர். இந்தசூழலில், கடந்த மார்ச் 3-ம் தேதி சசிகலாவிடமிருந்து வந்த அறிக்கை அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாகக் கூறியிருந்த சசிகலா, “நான் என்றுமே பதவிக்காகவோ பட்டத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தது, புரட்சித் தலைவியின் ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்’’ என்று கூறியிருந்தார். அதனால், அவர் அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஒதுங்கிவிட்டதாகப் பேச்சு எழுந்தது. அதையடுத்து நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியது.
சசிகலாவின் திடீர் உரையாடல்!
இந்தநிலையில், தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக உலா வருகின்றன. முதல் ஆடியோவில் தஞ்சாவூர் பேராவூரணி தொகுதியிலிருக்கும் செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க ஐ.டி விங் தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் வினோத்திடம் பேசினார். அந்த ஆடியோவில், “மீண்டும் நான் கட்சிக்கு வருவேன். கண்டிப்பா கட்சியை சரி பண்ணிடலாம். தைரியமா இருங்க. கொரோனா முடிந்ததும் நான் வந்துடுவேன். குடும்பத்தோட ஜாக்கிரதையாக இருங்க. நிச்சயம் வந்துடுவேன்’’ என்று பேசியிருக்கிறார்.
இரண்டாவது ஆடியோவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெள்ளந்தூர் ஒன்றிய அ.ம.மு.க செயலாளர் கோபால் என்பவருடன் அவர் பேசியிருக்கிறார். சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த ஆடியோவில் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி குறித்து கோபால் சசிகலாவிடம் வருத்தப்படுகிறார். அதற்கு, எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்குத் தாம் என்ன செய்ய முடியும் என்று சொல்லும் சசிகலா, விரைவில் வந்து எல்லோரையும் பார்ப்பேன் என்றும், எல்லாத்தையும் சரிபண்ணிவிடலாம் என்றும் சொல்கிறார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது கட்சி இருந்த நிலைக்குக் கொண்டுவருவேன். துணிச்சலோடு இருங்கள், விரைவில் வந்து நல்லது பண்ணுவேன் என்றும் அவர் பேசுவதாக அந்த ஆடியோவில் இருக்கிறது. இதனால், அ.தி.மு.க-வை மீட்பது என்ற தனது பழைய உத்தியை சசிகலா தூசிதட்டி மீண்டும் களமிறங்க இருக்கிறார் என்று அவரது தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க ரியாக்ஷன்
அதேநேரம், இது தொண்டர்களைக் குழப்பும் முயற்சி என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், “சசிகலா பேச்சுக்கு அ.தி.மு.க தொண்டர் ஒருவர் கூட செவிசாய்க்க மாட்டார். அ.தி.மு.க-வை திசைதிருப்பி தொண்டர்களைக் குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது. ஒரு தொண்டரும் சசிகலாவுடன் பேசவில்லை. அவர்தான் தொண்டர்களிடம் பேசிவருகிறார்’’ என்றும் கே.பி. முனுசாமி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.