சென்னை மற்றும் புனேவில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெற அமெரிக்க ஐடி நிறுவனமான காக்னிசண்ட் இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்த புகாரில் அமெரிக்க நீதித்துறையின் முக்கிய சாட்சியான ஸ்ரீமணிகண்டன் ராமமூர்த்தியை இந்திய அதிகாரிகளும் விசாரிக்க இருக்கிறார்கள்.
காக்னிசண்ட் வழக்கு
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காக்னிசண்ட் நிறுவனம் சென்னை மற்றும் புனேவில் புதிய அலுவலகங்களுக்கான கட்டடங்களைக் கட்டத் திட்டமிட்டது. சென்னை சோழிங்கநல்லூரில் KITS என்கிற பெயரில் புதிய அலுவலகத்தைக் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகே காக்னிசண்ட் நிறுவனம் அரசு தரப்பில் அனுமதி கோரியது. இதற்காக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. காக்னிசண்ட் நிறுவனத்தின் அப்போதைய துணைத் தலைவர் ஸ்ரீமணிகண்டன் ராமமூர்த்தி மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் ஆகியோர் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க 2014-ம் ஆண்டு வாக்கில் பணம் ஒதுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோல், புனேவில் அமைக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற மகாராஷ்டிர மாநில அதிகாரிகளுக்கும் 6,00,000 அமெரிக்க டாலர்கள் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. சிடிஎஸ் நிறுவனத்தின் இந்த முறைகேடுகள், கடந்த 2016-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தன. அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் சிடிஎஸ், இந்த முறைகேடுகளை ஆணையத்திடம் தெரிவித்ததோடு, 3 ஆண்டுகளுக்குப் பின் இந்த விவகாரத்தில் முறைகேடுகளை ஒப்புக்கொள்ளவோ மறுக்கவோ செய்யாமல் அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்தின் விசாரணையை முடித்துக் கொள்ள 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தவும் சிடிஎஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. அமெரிக்க நீதித்துறை இந்த விவகாரத்தில் சிடிஎஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், கூடுதலாக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அந்த நிறுவனம் செலுத்த முன்வந்தது.
இதுகுறித்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே காக்னிசண்ட் நிறுவன முன்னாள் ஊழியர்களான அந்த மூத்த அதிகாரிகள் மீது வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது மற்றும் கணக்குகளை உரிய முறையில் பராமரிக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமெரிக்க நீதித்துறை வழக்குப் பதிந்தது. அதேநேரம், ராமமூர்த்தி மீது பொதுவெளியில் எந்தவொரு குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பரில் தொடங்க இருக்கும் நிலையில், விசாரணையின்போது தாக்கல் செய்ய இருக்கும் ஆவணங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், கடந்த 2014-ம் ஆண்டில் அந்த மூத்த அதிகாரிகளுடன் வீடியோ காலில் பேசியது குறித்து ராமமூர்த்தி சாட்சியம் சொல்லத் தயாராக இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. புனே மற்றும் சென்னையில் காக்னிசண்ட் கட்டடங்களைக் கட்ட ஒப்பந்தம் எடுத்திருந்த எல் அண்ட் டி நிறுவனம் மூலம் லஞ்சப் பணம் அரசு அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், முதலில் புனே அதிகாரிகளுக்கும் பின்னர் சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கும் எல் அண்ட் டி மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. பின்னர், வேலை நடைபெற்றதாக போலியான கணக்குக் காட்டி எல் அண்ட் டி நிறுவனத்துக்கு இந்தத் தொகையை காக்னிசண்ட் நிறுவனம் சார்பில் வழங்கியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்ரீமணிகண்டன் ராமமூர்த்தி
அமெரிக்க நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியாக ஸ்ரீமணிகண்டன் ராமமூர்த்தி மாறி சாட்சியம் அளிக்கத் தயாராகியிருக்கிறார். சாட்சியம் அளிக்கும் நிலையில், ஒருவேளை அவர் மீது அமெரிக்க நீதித்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்க நீதிமன்ற விசாரணையில் அவர் கொடுக்கும் வாக்குமூலம் இந்திய நீதிமன்ற விசாரணையில் அவருக்கு எதிராகத் திரும்பவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எல் அண்ட் டி நிறுவனத்தின் மேல்முறையீட்டால் வழக்கு விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் தற்காலிமாக நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால், ராமமூர்த்தி என்ன மாதிரியான வாக்குமூலத்தை புனே லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இதேநிலைதான், சென்னையிலும். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.