இமாச்சப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பத்திரிக்கையாளர், வினோத் துவா. இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த நெருக்கடியை ஒன்றிய அரசு சரியாகக் கையாளாதது தொடர்பாகவும் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் தன்னுடைய விமர்சனத்தை கடந்த ஆண்டு தெரிவித்தார். இதனை அடிப்படையாகக்கொண்டு பா.ஜ.க-வைச் சேர்ந்த அஜய் ஷ்யாம் என்பவர் காவல்துறை அதிகாரிகளிடம் வினோத் துவாவின் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இமாச்சலப்பிரதேச காவல்துறையினர் பத்திரிக்கையாளர் வினோத் துவாவின் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் அவதூறு வழக்கினைப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் யூ.யூ.லலித் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அவர்மீதான வழக்கை 1962-ல் வெளிவந்த கேதர்நாத் சிங் வழக்கை சுட்டிக்காட்டி ரத்து செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் குறிப்பிட்டு பேசியது..
லலித் மற்றும் வினீத் ஆகிய நீதிபதிகளின் அமர்வு“காவல்துறையினர் பத்திரிக்கையாளர் துவா மீது பதிவு செய்துள்ள வழக்கினை நாங்கள் ரத்து செய்து உத்தரவிடுகிறோம். ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும் கேதர்நாத் சிங்கின் தீர்ப்பின் கீழ் பாதுகாப்பு கிடைக்கும். பத்திரிக்கையாளர்களின் விமர்சனங்களின் நோக்கம் பிரச்னைகளைக் கண்டு அதற்கு தேவையான தீர்வுகளைக் காணுவதே தவிர தேசத்துரோக உணர்ச்சியை தூண்டி விடுவதல்ல. அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் மீதான விமர்சனங்கள், பத்திரிக்கை சுதந்திரம் ஆகியவை மக்களுக்கான அரசாங்கத்தின் சரியான செயல்முறைகளுக்கு மிகவும் அவசியமானவை” என்று தெரிவித்துள்ளனர்.
கேதர்நாத் சிங் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?
1962-ம் ஆண்டு வெளியான கேதர்நாத் சிங் தீர்ப்பில் நீதிபதிகள், “தேசத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விமர்சனங்கள் மற்றும் வன்முறையை ஆதரிக்கும் விமர்சனங்கள் ஆகியவைதான் தேசதுரோக சட்டங்களின் கீழ் வரும். அரசுக்கு எதிரான விமர்சனங்கள் எதுவும் தேசதுரோக சட்டங்களின் கீழ் வராது” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை சுட்டிக்காட்டியே உச்சநீதிமன்றம் தற்போது வினோத் துவா மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. மூத்த பத்திரிக்கையாளர்கள் பிரபல அரசியல்வாதிகள் பலரும் இந்த வழக்கின் தீர்ப்பை வரவேற்று வருகின்றனர்.
நிராகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் வினோத் துவாவின் கோரிக்கை
வினோத் துவா தனது கோரிக்கையில், “பல்வேறு மாநிலங்களில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மீது கடந்த பத்து ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளை ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வினோத் துவா வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
பத்திரிக்கையாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை..
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக இந்திய பத்திரிக்கையாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றமானது பத்திரிக்கையாளர் வினோத் துவா மீதான வழக்கை மட்டும் ரத்து செய்யவில்லை. பத்திரிக்கையாளர்களை தேசத்துரோக வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியுள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் தேசத்துரோக சட்டத்தை நீக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அறிக்கை..
வினோத் துவா வழக்கின் தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, “மதவாதப் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சிந்தனையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தேசத்துரோக சட்டத்தை ஏவி, ஒடுக்க நினைக்கும் பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கின் மூலம் சவுக்கடி தந்திருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொய் வழக்குப் புனையப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அறிவுத் துறையினர் அனைவரையும் ஒன்றிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று கூறியுள்ளார்.
Also Read : விக்கிபீடியா பற்றிய சுவாரஸ்யமான 11 தகவல்கள்!