`சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!’ என ட்ரெய்லர் வழியாகவும் சரி `நான்தான்டா மாஸ்ஸூ’ என பாடல் வழியாகவும் சரி ஜகமே தந்திரம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தப் படமானது நெட்ஃபிளிக்ஸில் வரும் ஜூன் 18-ம் தேதி வெளியாக உள்ளது. ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ, மலையாளத்தில் பிரபல நடிகர்களான ஜோஜூ ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ் இந்த திரைப்படத்தின் வழியாக தமிழில் அறிமுகமாகவுள்ளார். இந்த நிலையில், ஜோஜூ ஜார்ஜ் இந்தப் படத்தில் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜகமே தந்திரம் படத்தில் நடித்தது தொடர்பாக ஜோஜூ ராஜ், “நான் கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய ரசிகன். பீட்சா திரைப்படத்தைப் பார்த்த பிறகு கார்த்திக் சுப்புராஜை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. பின்னர், மலையாள திரையுலகுக்கு வந்து எனது பணிகளை தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன். ஜகமே தந்திரம் திரைப்படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷன் மற்றும் டிமல் டென்னிஸ் வழியாக கார்த்திக் சுப்புராஜை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜகமே தந்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அதில் நடிக்க ஆடிஷன் நடத்தினார். ஒரு காட்சியை விவரித்து அதில் என்னை நடிக்கக் கூறினார். நான் எனக்கு தெரிந்த தமிழில் வசனங்களை உச்சரித்து நடித்தேன். அவர் என்னைப் பார்த்து சிரித்தார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவுடன் நடித்த அனுபவம் பற்றி பேசிய அவர், “படத்தில் எனது எதிர் கதாபாத்திரத்தில் நடிப்பது ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் நேரில் பார்த்த முதல் ஹாலிவுட் நடிகர் அவர்தான். வாழ்க்கை தரும் எக்ஸைட்மென்ட்களுக்காக நான் வாழ்கிறேன். நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உடன் நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு” என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜோஜூ ஜார்ஜ் கேங்க்ஸ்டர் சிவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Also Read : ரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…!? சரியானு பாருங்க!