பாகிஸ்தானைச் சேர்ந்த தொடக்க வீரர் அகமது முஸாதிக் யூரோப்பியன் கிரிக்கெட் லீக் போட்டியில் 28 பந்துகளில் சதமடித்து அசத்தியிருக்கிறார்.
கிரிக்கெட்டில் இதுபோன்ற ரெக்கார்டுகளைப் பற்றி பேசினாலே நமது நினைவுக்கு வருபவர்கள் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ், பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி, கிறிஸ் கெய்ல் உள்ளிடோர்தான். ஆனால், 28 பந்துகளில் சதமடித்து ஈ.சி.எஸ் லீக்கின் ஃபாஸ்டஸ்ட் செஞ்சுரியைப் பதிவு செய்திருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த அகமது முஸாதிக்.
ஐரோப்பிய கிரிக்கெட் கவுன்சில் நடட்தும் 10 ஓவர்கள் கொண்ட டி10 லீக்தான் யூரோப்பியன் கிரிக்கெட் லீக். எட்டு அணிகள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தத் தொடரின் லீக் போட்டியில் Kummerfelder Sportverein – THCC Hamburg அணிகள் இடையிலான போட்டியில்தான் அகமது முஸாதிக் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார். ஜெர்மனியின் கும்மர்ஃபெல்டர் ஸ்போர்ட்வெரின் அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய முஸாதிக், ஹம்பர்க் அணியின் அபினந்த் ஜா வீசிய முதல் ஓவரில் 26 ரன்கள் குவித்தார். ஸ்பின் மட்டுமல்லாது வேகப்பந்துவீச்சையும் பறக்கவிட்ட முஸாதிக், 13 பந்துகளில் அரைசதத்தைப் பதிவு செய்தார்.
பெஹ்ரம் அலி வீசிய ஐந்தாவது ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், இந்தப் போட்டியில் 33 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் Kummerfelder Sportverein அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. இரண்டு ரன்கள் அடித்திருந்தால் ஈ.சி.எஸ் வரலாற்றில் 200 ரன்கள் குவித்த முதல் அணி என்ற பெருமையை அந்த அணி பெற்றிருக்கும். ஈ.சி.எஸ் லீக் வரலாற்றில் இதுவே அதிவேக சதமாகும். இன்னிங்ஸின் கடைசி பந்தில் முஸாதிக் ஆட்டமிழந்தார். அவர் மொத்தமாக 7 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் விளாசினார். இதற்கு முன்பாக அதிவேக சதமடித்தவர் என்ற சாதனை இந்தியன் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த கோஹர் மனன் வசமிருந்தது. கிளெஜ் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான போட்டியில் அவர், 29 பந்துகளில் சதமடித்திருந்தார்.
Also Read – 45 வயதில் ஃபர்ஸ்ட்கிளாஸ் சதம் – டேரென் ஸ்டீவன்ஸ் சாதனை தெரியுமா?