உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ரூ.25 கோடி மதிப்பிலான தங்கம், பணத்தைக் கொள்ளையடித்த கும்பலை தமிழகத்தைச் சேர்ந்த துணை ஆணையர் சு.ராஜேஷ் தலைமையிலான போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
தலைநகர் டெல்லியை ஒட்டி அமைந்திருக்கும் புறநகர்ப் பகுதி நொய்டா. டெல்லியில் இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இந்த நகர்ப்பகுதி உத்தரப்பிரதேச மாநில எல்லைக்குள் இருக்கிறது. ஐ.டி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் இந்தப் பகுதியில் குற்ற சம்பவங்களும் ரொம்பவே அதிகம். இதனால், இங்கு பணியாற்றும் போலீஸாருக்குப் பணிச்சுமையும் அதிகம். தலைநகர் லக்னோவுக்கு அடுத்தபடியாக நொய்டாவில் மட்டும் 15 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியமர்த்தியிருக்கிறது உ.பி அரசு. அவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள். கோவில்பட்டியைச் சேர்ந்த சு.ராஜேஷ் மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த ஜி.இளமாறன் ஐபிஎஸ் ஆகியோர் அங்கு காவல்துறை இணை ஆணையர்களாகப் பணியில் இருக்கிறார்கள்.
ராஜேஷ் ஐபிஎஸ்
நொய்டாவின் கௌதம புத் நகர் செக்டர் 1 பகுதியின் டிசிபியான ராஜேஷ், தனது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்காகப் பெயர் பெற்றவர். நொய்டாவில் முதல்முறையாகப் போக்குவரத்துக் காவல் பணியில் பெண்களை ஈடுபடுத்தியது இவரை உ.பி மட்டுமல்லாது தேசிய அளவில் பிரபலமாக்கியது. உ.பி போக்குவரத்துக் காவல் பிரிவில் பணியாற்றும் 406 பேரில் 6 பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அப்பகுதியில் குற்ற சம்பவங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் ராஜேஷ் எடுத்து வருகிறார்.
சுராஜ்பூர் கொள்ளை
கௌதம புத் நகரின் செக்டார் 39-ல் உள்ள சுராஜ்பூர் பகுதி பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அந்தப் பகுதியில் இருக்கும் சொகுசு பிளாட் ஒன்றில் இருந்து 25 கோடி ரூபாய் மதிப்பிலான 40 தங்கக் கட்டிகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் கடந்த 2020 செப்டம்பரில் கொள்ளை போயிருக்கின்றன. வீட்டின் உரிமையாளரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிஸ்லே பாண்டே இதுகுறித்து புகார் கொடுக்காததால், கொள்ளை பற்றிய தகவல் வெளியே தெரியவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட பணம் கறுப்புப் பணம் என்பதால், உரிமையாளர் தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். கிராமப் பகுதியான சுராஜ்பூரில் கொள்ளை கும்பல் ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கிறது. விலை உயர்ந்த கார்கள், நட்சத்திர விடுதிகளில் கும்மாளம் என இருந்த அந்த கும்பலின் திடீர் சொகுசு வாழ்க்கை கிராமத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் டி.சி.பி சு.ராஜேஷ் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. இதுகுறித்த விசாரணையில் நேரடியாகக் களமிறங்கிய அவர், தனிப்படை அமைத்திருக்கிறார். விசாரணை தொடர்ந்த நிலையில், சந்தேகத்துக்கிடமான இருவரைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அதன்பின்னர்தான் சுராஜ்பூர் ஃபிளாட்டில் கொள்ளையடித்ததைப் பற்றிய தகவல் தெரியவந்திருக்கிறது. அடுத்தடுத்த விசாரணையில், வீட்டின் உரிமையாளரும் அவரது தந்தையும் இந்தியாவில் இல்லை என்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்தப் பகுதியில் அவரது உறவினர்கள் பலர் வசித்து வந்தும் கொள்ளை தொடர்பாக யாரும் தாமாக முன்வந்து புகார் கொடுக்கவில்லை.
இதுகுறித்து பேசிய நொய்டா டி.சி.பி சு.ராஜேஷ், “கொள்ளையர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் இரண்டு கும்பல்கள் ஈடுபட்டதும், அந்த சம்பவத்துக்குப் பிறகு ஆளுக்குத் தலா 4 தங்கக் கட்டிகளும் ரூ.65 லட்சம் வீதமும் பங்கு பிரிக்கப்பட்டதைக் கண்டுபிடித்தோம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 4 பேரைக் கைது செய்திருக்கிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தலைமறைவாகியிருக்கிறார்கள். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.57 லட்சம் பணம், 6.55 கோடி ரூபாய் மதிப்பிலான 13.09 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.10 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விசாரணை அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றுக்கும் தகவல் கொடுத்திருக்கிறோம்’’ என்றார். கொள்ளை சம்பவத்தைத் திறமையாகத் துப்புதுலக்கி சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி சு.ராஜேஷ் உள்ளிட்ட நொய்டா போலீஸாருக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசு வழங்கி பாராட்டினார்.
Also Read – ஆன்டிகுவா – டொமினிகா, கடத்தல், மிஸ்ட்ரி வுமன்… மெகுல் சோக்ஸி விஷயத்தில் என்ன நடந்தது?