நீங்க நிறுத்திட்டு போன இடத்துல இருந்து உங்க கார் திடீரென மாயமா மறைஞ்சிடுச்சுனா உங்களால அதை ஏத்துக்க முடியுமா? ஆமாங்க.. அப்படி ஒரு சம்பவம்தான் மும்பைல நடந்திருக்கு. மும்பையில் காட்கோபர் பகுதியில் ராம் நிவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் பங்கஜ் மேத்தா என்பவருக்கு சொந்தமான கார் நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டு இருந்தது. கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் திடீரென பள்ளம் ஒன்று உருவானது. அந்தப் பள்ளத்தில் விழுந்த கார் அதிலிருந்த நீரில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியது. கார் நீரில் மூழ்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
ராம் நிவாஸ் கட்டடம் அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவத்தை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சாலையில்தான் பள்ளம் ஏற்பட்டுவிட்டது என நினைத்து அப்பகுதிக்கு போக்குவரத்து காவலர்கள் விரைந்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்ற பின்னர்தான் காவலர்களுக்கு கட்டடத்தில் உருவான பள்ளத்தில் கார் முழ்கிய விஷயம் தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர்.
கார் பார்க்கிங் அமைந்துள்ள பகுதியில் கிணறு ஒன்று கான்கிரீட்டால் மூடப்பட்டுள்ளது. அதன்மீதுதான் இந்தக் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கான்கிரீட் தளம் பலவீனமடைந்து உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதன்மீது நின்றுகொண்டிருந்த காரும் பள்ளத்தில் மூழ்கியுள்ளது. காரில் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. குடியிருப்பாளர்கள் அந்தக் கிணறு சுமார் 50 அடி ஆழத்தில் இருப்பதாகவும் ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவித்துள்ளனர். பார்க்கிங் வசதிக்காக அந்த கிணற்றின் மீது கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி, தீயணைப்பு படை வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோருடன் இணைந்து காரினை மீட்கும் பணியை மேற்கொண்டது. கிணற்றில் இருந்து முதலில் தண்ணீரை வெளியேற்றிய பின்னர் கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டுள்ளது. கார் கிணற்றுக்குள் மூழ்கி சுமார் பன்னிரெண்டு மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்கஜ் மேத்தா இதுதொடர்பாக பேசும்போது, “குழந்தைகள், கார் பள்ளத்துக்குள் செல்கிறது என கூச்சலிடத் தொடங்கினர். நான் உடனடியாக கீழே சென்று பார்த்தேன். காரின் பாதி பகுதி கிணற்றுக்குள் மூழ்கி இருந்தது. உடனே நான் புகைப்படங்களை எடுத்தேன். நான் எதையாவது செய்வதற்கு முன்பே எனது கண்களுக்கு முன்னால் கார் தண்ணீரில் மூழ்கியது” என்று தெரிவித்துள்ளார். என்னென்ன விஷயங்கள் நடக்குது பாருங்க!
Also Read : எக்ஸ்ட்ராக்ஷன் முதல் ஜகமே தந்திரம் வரை… டிரெய்லர் ரீமேக்கில் கலக்கும் இகோரோடு பாய்ஸ்!