சமூக வலைதளவாசிகளிடையே தற்போதைய டிரெண்டிங் கிளப் ஹவுஸ்தான். கிளப் ஹவுஸ் மிகப்பெரிய தலைவலி என ஒருபக்கம் விமர்சனம் வைக்கப்பட்டு வந்தாலும் சிலர் கிளப் ஹவுஸின் வரவை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் கொண்டாட்டங்களைப் பார்க்கும்போது கிளப் ஹவுஸ்ல சில நல்ல விஷயங்களும் இருக்குதுபோலனு நமக்கும் தோணும். அப்படி கிளப் ஹவுஸ் வழியாக நடக்கும் சில நல்ல விஷயங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கபோறோம்.
செலிபிரிட்டி கனெக்ட்
பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உள்ள ஸ்பேசை இந்த கிளப் ஹவுஸ் ரொம்பவே குறைச்சிருக்குனு சொல்லலாம். பெரும்பாலான சமூக ஊடகங்களில் நேரடியாக பிரபலங்களுடன் உரையாட முடியாத நிலை இருக்கும். அல்லது நாம் உரையாடுவது உண்மையான ஐ.டி தானா இல்லை ஃபேக் ஐ.டியா என்ற குழப்பம் இருக்கும். கிளப் ஹவுஸில் அந்த வகையான குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரியல் டைமில் ரசிகர்களுடன் உரையாடுவதால் கனெக்டிவிட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரீச் செய்ய முடியாத இடத்தில் பிரபலங்களிடமும் இந்த கிளப் ஹவுஸ் மூலம் எளிதாக உரையாட முடியும். அதேநேரம், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை அவர்களால் நிராகரிக்க முடியாமல் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்படும். சிங்கர்ஸ் பலரிடமும் நம்மால் நேரடியாக உரையாட முடியும் என்பதால் நமக்கு பிடித்த பாடல்களை அவர்களிடம் பாடச்சொல்லி கேட்டு ரசிக்கலாம். இதேபோல, குறிப்பிட்ட துறையில் சிறந்தவர்கள் பேசும்போது அதற்கு ஏற்றவாறு கேள்விகளை கேட்டு பதில்களைப் பெற முடியும்.
தனிமையை போக்கிக்கொள்ள முடியும்
இன்றைக்கு பெரும்பான்மையானவர்களின் தனிமையைப் போக்க கிளப் ஹவுஸ் மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. மியூசிக், ஸ்போர்ட்ஸ், மூவீஸ், ஆர்ட்ஸ், ப்ளேசஸ் போன்றவற்றின் கீழ் சுவாரஸ்யமான பல தலைப்புகளில் உரையாடல்கள் நடைபெறுவதால் கிளப்ஹவுஸில் தனிமையை அனுபவிக்கும் பலர் குவிந்து கிடக்கின்றனர். இன்ட்ரஸ்டிங்கான பல நபர்களுடன் உரையாடுவதால் லாக்டௌன் காரணங்களால் உருவான தனிமையான எண்ணத்தை அவர்கள் மறப்பதாகவும் நேரங்களை அதிகளவில் செலவழிக்க இது உதவியாக இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 24/7 மணி நேரமும் கிளப் ஹவுஸை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் தனிமை என்ற சொல்லுக்கு பெரும்பாலும் இடம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
அறிவையும் வளர்த்துக்கலாம்
உலக நிகழ்வுகள், மொழிகள், தொழில்நுட்பம், பொது அறிவு தொடர்பான உரையாடல்களும் கிளப் ஹவுஸில் நடைபெறுகின்றன. இதனால், நமது அறிவையும் விவாதிப்பதன் வழியாக பார்வையையும் வளர்த்துக்கொள்ள முடியும். உங்களது அன்றாட வேலைகளை செய்துகொண்டே இதில் நீங்கள் ஆடியோவை கேட்க முடியும் என்பது கூடுதலான சிறப்பு. நீங்கள் மற்றவர்கள் பேசுவதன் மூலம் நிறைய விஷயங்களை நிச்சயமாக இதில் கற்றுக்கொள்ள முடியும். கதைகளை கேட்க முடியும். கதையைப் பற்றிய விவாதங்களை கேட்டுக்கொள்ள முடியும். உரையாடல்கள் நடந்துகொண்டும் இருக்கின்றன.
பெய்ட் செமினார் டு ஃப்ரீ செமினார்
இன்னும் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் நடக்க ஆரம்பிக்கவில்லை என்றாலும் முக்கியமான விஷயமாக இதனைப் பார்க்கலாம். உலக அளவில் பல நாடுகளில் பிசினஸ் மேன்கள் பலர் நடத்தி வந்த பெய்ட் செமினார்களை நடத்துவதற்கான வாய்ப்பு கிளப்ஹவுஸில் உருவாகலாம். பெய்ட் செமினார்களில்கூட நம்மால் சுதந்திரமாக கேள்விகளை கேட்க முடியாது. ஆனால், கிளப் ஹவுஸில் எளிதாக நம்மால் கேள்விகளை கேட்க முடியும். அதுமட்டுமல்ல, தவறான கருத்துகளை பேசும்போது உடனடியாக அதன்மீது விவாதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிளப் ஹவுஸில் மிகவும் அதிகமாகவே உள்ளன. மற்ற சமூக வலைதளங்களைவிட இன்டராக்ஷன் உடனுக்குடன் இங்கு நடப்பது சிறப்பான ஒன்றாக கருத முடியும்.
கெட் டுகெதர்
வெவ்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களுடன் ஆன்லைன் கெட் டுகெதர் நடத்த விரும்பினால் கிளப் ஹவுஸ் சிறந்த தேர்வாக இருக்கும். நிறைய விஷயங்களை இதன்மூலம் பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக குறிப்பிட்ட சில நண்பர்களை மட்டும் சேர்த்துக்கொண்டு அரட்டையடிக்க முடியும்.
நீங்க இந்த கிளப் ஹவுஸ் மூலமா என்னலாம் பண்றீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
Also Read : கிஷோர் கே.சாமி, சாட்டை துரைமுருகன், டாக்ஸிக் மதன் – யூ டியூபர்கள் மீது நடவடிக்கை… பின்னணி!