இந்தியாவின் டாப் 10 ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவனை, இந்த லாக்டவுனில் கிளப் ஹவுஸில் அடிக்கடி காணமுடிகிறது. அங்கு இளம் டெக்னீஷியன்களுடனும் ரசிகர்களுடனும் அவர் உரையாடியதில் இருந்து சில பாயிண்ட்ஸ்.
![](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/06/8iLOtAY0_400x400.jpg)
- மணிரத்னத்தின் ஆல்டைம் கிளாசிக்கான ‘தளபதி’ படத்தின் கதையைக் கேட்டதும் சந்தோஷ் சிவன் இந்தப் படத்துக்கு ஒரு புதுவித விஷூவலைக் கொடுக்கவேண்டும் என தீர்மானித்தாராம். அதற்கு அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது 1991-ஆம் ஆண்டு மலையாளத்தில் திலகன் நடிப்பில் வெளியான ‘பெருந்தச்சன்’ திரைப்படமாம். அந்தப் படத்தில் தான் செய்த அதே ஒளிப்பதிவின் பாதிப்பில்தான் ‘தளபதி’ படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தாராம் சந்தோஷ் சிவன்.
- “நிஜவாழ்க்கையில் நாம் காணும் எல்லா உயிர்களிலும் பொருட்களிலும் அதன் மீது இருளும் ஒளியும் கலந்தே இருக்கும். அதுதான் இயல்பு. அதுவே எனது படங்களிலும் இருக்கவேண்டும் என திட்டமிடுகிறேன்” என்பதே சந்தோஷ் சிவன் தனது லைட்டிங் சீக்ரெட் எனக் குறிப்பிட்டார்.
- அவருடன் பணியாற்றிய நடிகர்களில் ரானா டகுபதிக்கு நிறைய ஒளிப்பதிவு பற்றியும் லேட்டஸ்ட் கேமராக்கள் பற்றியும் தெரிந்திருப்பதைக் கண்டு வியந்துபோனாராம் சந்தோஷ் சிவன்.
- ஒரு இயக்குநருக்கு அடிப்படை நேர்மை மிக முக்கியம் என சொல்கிறார் சந்தோஷ் சிவன். அந்த விஷயத்தில் மணிரத்னம்தான் பெஸ்ட் என சொன்னவர், மணி ரத்னம் தான் எந்த விஷயத்திலிருந்து இன்ஸ்பயராகி இந்த கதையை, இந்தக் காட்சியை உருவாக்கினேன், இதை இந்த மாதிரி உருவாக்க விரும்புகிறேன் என ஆரம்பத்திலேயே தெரிவித்துவிடுவாராம். அதனாலேயே அவரது படங்களில் தன்னால் கூடுதலாக ஒளிப்பதிவில் மெருகேற்றமுடிகிறது என்றார்.
- கலைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதுபோலவே ‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’, ‘தர்பார்’ போன்ற கமர்சியல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதும் தனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருப்பதாக சொல்கிறார் சந்தோஷ் சிவன். கமர்சியல் படங்களுக்கு தான் பெறும் அதிக சம்பளம் மூலமாகத்தான் தன்னால் பல கலைப்படங்களை இயக்கமுடிவதாகத் தெரிவித்தார்.
- “திரைப்படக்கல்லூரியில் படித்து முடித்துவிட்டாலே நமக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக தோன்றும் அந்த மாயையில் விழுந்துவிட வேண்டாம்” என அட்வைஸ் செய்தார் சந்தோஷ் சிவன். தான் அப்படித்தான் தனது இன்ஸ்டியூட் கோர்ஸை முடித்ததும் மிதப்பில் இருந்ததாகவும் பின்னாளில் உதவி ஒளிப்பதிவாளராக வேலைப் பார்க்கத் தொடங்கியபோதுதான் தனக்கு எவ்வளவு விஷயம் தெரியவில்லை என்பதை உணர்ந்துகொண்டதாகவும் சொல்லியிருந்தார்.
- ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் பற்றிய கேள்விக்கு, இவர்கள் அனைவரிடமும் தான் வியக்கும் பொதுவான விஷயமாக அவர்களது பஞ்சுவாலிட்டியைக் குறிப்பிட்டார் சந்தோஷ் சிவன். இவர்கள் அனைவருமே படத்தின் டெக்னீசியன்கள் வரும் நேரத்திற்கு முன்னதாகவே ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார்களாம்.
- ஒரு ஒளிப்பதிவாளருக்கு பயண அனுபவம் மிக முக்கியம் என்றார் சந்தோஷ் சிவன். தனது இளம் வயதில் அவர் மேற்கொண்ட அருணாச்சல பிரதேச பயணமும் அமேசான் காட்டில் மேற்கொண்ட பயணமும்தான் தனது பார்வையையே மாற்றியதாக சொல்லியிருந்தார்.
- 1998-ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘டெரரிஸ்ட்’ படத்திற்கு அமெரிக்காவில் ஒரு பிரிவியூ நடந்திருக்கிறது. அதில் பங்கேற்ற பல வெளிநாட்டு கலைஞர்கள் அந்தப் படத்தின் டி.ஐ, கலர் கிரேடிங் போன்றவை எங்கு நடைபெற்றது என ஆர்வமாகக் கேட்டார்களாம். ஏதாவது வெளிநாட்டு பிரபல ஸ்டூடியோவாக இருக்கும் என நினைத்துக் கேட்டவர்களுக்கு சென்னையில் உள்ள ஒரு சாதாரண ஸ்டூடியோவில் நடந்தது என சொன்ன இவரது பதில் ஆச்சர்யத்தைத் தந்ததாம்.
- படத்தின் கதைதான் தன்னுடைய ஒளிப்பதிவு ஸ்டைலை தீர்மானிக்கிறது என்றார் சந்தோஷ் சிவன். ‘இருவர்’ படத்தின் டாக்குமெண்டரி ஸ்டைல் ஒளிப்பதிவும் ‘உயிரே’ படத்தின் ஸ்டன்னிங் விஷூவல்களும் அந்தந்த படத்தின் கதையும் கதைக்களமும்தான் தீர்மானித்தது என்றார். அந்தப் படத்தில் வரும் ‘சந்தோஷக் கண்ணீரே’ பாடலில் வரும் பல ஷாட்டுகள் பத்து, பதினைந்து கிலோ இருக்கும் கேமராவை தானே தனது தோள்பட்டையில் வைத்து ஓடி ஓடி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
- முன்பெல்லாம் வட இந்தியாவில்தான் சிறந்த ஒளிப்பதிவாளர்கள் இருந்ததாகவும் இன்று தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள்தான் இந்திய சினிமாவில் கோலோச்சி வருவதாகவும் பெருமையாக சொல்லியிருந்தார் சந்தோஷ் சிவன்.
- தமிழில் சூப்பர் ஹிட்டான ‘மாநகரம்’ படத்தை ஹிந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘மும்பைக்கர்’ என்னும் தலைப்பில் தான் இயக்கிவரும் படத்தின் ஷூட்டிங் லாக் டவுனால் தடைப்பட்டிருப்பதாகவும் விரைவில் படம் முடிவடைந்து வெளிவரும் எனவும் தெரிவித்திருந்தார் சந்தோஷ் சிவன்.
Also Read : கார்த்திக் சுப்புராஜின் இரண்டு முயற்சி… மீண்டும் துளிர்க்கும் தனுஷ் – அனிருத் நட்பு!