உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாஃபர் பகுதியில் அனில் குமார் என்பவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அதேநேரம், அவர் மொராதாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் காவலராகவும் பணியாற்றி வந்துள்ளார். அதெப்படி முடியும்? என்று உங்களுக்குக் குழப்பம் ஏற்படாம். அங்கேதான் ஒரு ட்விஸ்ட். அனில் குமாரின் பெயரில் அவருக்கு பதிலாக அவரின் உறவினரான சுனில் குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரவலாகக் கவனத்தைப் பெற்றதோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மொராதாபாத் பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு புதியதாக சத்யேந்திர சிங் என்ற இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை அழைத்து அவர்களுடன் பேசி வந்துள்ளார். அதன்படி, அனில் குமார் என்பவரையும் அழைத்து பேசியுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார். அப்போதுதான், இந்த காவல் நிலையத்தில் ஆள் மாறாட்டம் செய்துள்ள சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலருக்கு தேவையான பயிற்சியையும் ஃபேக் ஐடியையும் சுனில் குமாருக்கு அனில் குமார் கொடுத்துள்ளார்.
2011-ம் ஆண்டு அனில் குமார் காவலர் தேர்வில் பயிற்சி பெற்றுள்ளார். இதனையடுத்து, 2016-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கும் தேர்வாகியுள்ளார். ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றதும் தனது காவலர் பணிக்கு தனது உறவினரான சுனில் குமாரை அனுப்பியுள்ளார். ஒரே ஆள் இரண்டு பணியில் இருந்து சம்பளங்களைப் பெற்று வந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பேசும்போது, “காவலர் பயிற்சியை தனது உறவினரிடம் இருந்து சுனில் குமார் கற்றுள்ளார். இதனால், அதிகாரிகளுக்கு எந்தவித சந்தேகமும் எழவில்லை. 2016-ம் ஆண்டில் பணியில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். தனக்கு கிடைத்த ரூபாய் 35,000 சம்பளத்தில் உறவினராக அனில் குமாருக்கு ரூபாய் 8,000 அளித்து வந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
அனில் மற்றும் சுனில் இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு முதல் நண்பர்களாக இருந்து வருகின்றனர். அனில் தன்னுடைய துப்பாக்கியைக்கூட சுனில் குமாரிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆள் மாறாட்டங்களை ஒப்புக்கொண்ட சுனில் குமார் மற்றும் அனில் குமார் ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேபோல வேறு யாராவது ஆள்மாறாட்டம் செய்துள்ளனரா என்றும் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேச காவல்துறையில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது அம்மாநில காவல்துறை அதிகாரிகள் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read : முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைகள் குழு… 5 நிபுணர்கள் யாரெல்லாம்?