விஜய், அஜித் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்குறாங்க… டியர் ஃபேன்ஸ் நீங்க?!

ரஷ்யா உக்ரைன் பார்டர் மாதிரியே எப்பப் பாத்தாலும் இண்ட்ர்நெட்டை பதட்டத்துலயே வச்சிருக்குற தல தளபதி (விஜய் அஜித்) ரசிகர்கள்ல யாரு ரொம்ப நல்லவங்க யாரு ரொம்ப ரொம்ப கெட்டவங்கன்னு பஞ்சாயத்துல இன்னைக்கி தீர்ப்பாகப் போகுது. முழுசா பார்த்துட்டு தீர்ப்பு பத்தி உங்க கருத்தை சொல்லுங்க.

விஜய் அஜித் ரசிகச் சண்டை

கீழடி, ஆதிச்சநல்லூர்ல தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி பண்ற மாதிரி இன்னும் ஒரு 100-200 வருஷம் கழிச்சி தமிழர்கள் எப்படி வாழ்ந்தாங்கன்னு யாராவது இன்ட்ர்நெட்ல அகழ்வாராய்ச்சி பண்ணாங்கன்னா, தலையில அடிச்சுக்குவாங்க. காரணம் தல தளபதி ரசிகர்களோட சண்டைதான் இண்டெர்நெட்டை நிரப்பி வச்சிருக்கும். 10-15 வருசத்துக்கு முந்தி தியேட்டர் சுவர்கள்ல அந்த ஹீரோவை இவங்க திட்டி எழுதுறதும், இந்த ஹீரோவை அவங்க திட்டி எழுதுறதுமா இருந்தது, இன்னைக்கி ஃபேஸ்புக் ட்விட்டர்னு அவங்கவங்க டிஜிட்டல் wallல போட்டு பொளக்குறாங்க.

சட்டம் ஒழுங்கை திமுக ஒழுங்கா ஹேண்டில் பண்ணல, அதிமுக அஞ்சா பிரிஞ்சு கிடக்கு, பாஜகவுல கசமுசான்னு ஒவ்வொரு கட்சியும் அப்பப்போ ஏதாவது ஒரு காரணத்துக்காக ட்ரெண்டிங்க்ல வருவாங்க. ஆனா, வருஷம் 365 நாளும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடக்கிறது இந்த ரெண்டு பேர் ரசிகர்களும் போடுற ஆன்லைன் சண்டையிலதான். விடுங்கப்பா, சிவாஜி எம்ஜிஆர், ரஜினி கமல் ரசிகர்கள் போடாத சண்டையையா இவங்க போட்டுற போறாங்கன்னு அசால்ட்டா விட்டுட்டு போய்ட முடியாது. ஏன்னா அன்னைக்கு அந்தந்த ஊர்ல சின்னச்சின்ன க்ருப்ல சண்டை போட்டுக்குவாங்க. இண்டெர்நெட் உபயத்தால இன்னைக்கி விஜய் அஜீத் ஃபேன்ஸ் போடுற சண்டை எல்லாம் நேஷனல் லெவல்ல ட்ரெண்டிங் ஆகி தமிழ்நாட்டு மானத்தை ஃப்ளைட் ஏத்துது.

Vijay, Ajith
Vijay, Ajith

ஒவ்வொரு தடவை இவர்களோட புதுப்படத்தின் ட்ரெய்லரோ டீசரோ பாடலோ ரிலீஸ் ஆகும்போது, ரசிகர்கள் ஆன்லைன்ல ஓவர்டைம் பாக்க வேண்டியிருக்குன்னா பாத்துக்கங்க. 24 மணி நேரத்தில் இத்தனை மில்லியன்களை கடந்து தங்கள் தலைவனின் படம் சாதனை படைத்ததுன்னு சொல்ல வைக்கிறதுக்கு இருதரப்பு ரசிகர்களும் தலைகீழா நின்னு தண்ணி குடிக்கிறதை எல்லாம் பாக்க பாவமா இருக்கு. லைக் டிஸ்லைக் இந்த ரெண்டு பட்டனும் படுற பாடு இருக்கே, அப்பப்பா. ட்ரெய்லர், டீசர் எதுவும் ரிலீசாகலேன்னா இருக்கவே இருக்கு பழைய படத்து content. அதைவச்சு மீம்ஸ் போடுறதுன்னு ஆன்லைன் எப்பவும் போர்க்களமவே இருக்கு.

Ajith, Vijay
Ajith, Vijay

துணிவு படத்துல அஜீத் ஸ்டைலிஷா சாய்ஞ்சு படுத்துருக்குற ஒரு ஸ்டில்லுக்கே ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டை அட்வான்ஸ் புக்கிங் பண்ணலாம்னு தல ரசிகர்கள் ஒருபக்கம் புல்லரிச்சு போய் இருக்க, அட வயசான காலத்துல ஈசிசேர்ல படுத்துருக்கிற பெரியவரை ஏன்ப்பா தொந்தரவு பண்றீங்கன்னு விஜய் ரசிகர்கள் below the belt அட்டாக் மோடுக்கு போய்டுறாங்க. நான் விஜய் ஃபேன்லாம் இல்ல ஆனா விஜய் மாதிரி டான்ஸ் ஆட இந்தியாவுலேயே ஹீரோ யாருமில்ல என சொல்லி வாயை மூடுவதற்குள், வால் தெரியுது ப்ரோன்னு சிம்ப்ளா சோலிய முடிச்சிருவாங்க தல ரசிகர்கள்.

முப்பதடி ஆழம்வரைக்கும் பாறையா இருக்குற நிலத்தை முப்பதே வினாடிகள்ல நோண்டி எடுக்கப்போற மாதிரி, அப்புறம் பேலன்ஸுக்காக பஸ் கம்பியை புடிச்சுகிட்டே ஆடுற மாதிரி டான்ஸ் ஆடுனாதான் விஜய்யை பாப்பாங்க ஆனா எங்க தலைவன் நடந்துவந்தாலே போதும் மாஸ்தான்னு அஜீத் ரசிகர்கள் TMT கம்பிகள் கணக்கா முறுக்கு காட்டுவது வழக்கம். ராகுல் காந்தியைவிட அதிகதூரம் நடந்த சாதனையை வேணும்னா உங்காளுக்குத் தரலாம், தொப்பையை குறைக்குறதுக்காக நடக்குற நடராஜாதானே உங்காளு என விஜய் தரப்பும் பதிலுக்கு இறங்கி அடிக்கும்.

தமிழ் சினிமாவுலயே அதிகம் சம்பளம், டான்ஸ் ஃபைட்டு, உடம்பு ஃபிட்டுன்னு விஜய் ஸ்கோர் பண்ணாலும், ஒரே ஒரு bike ride போட்டோவை போட்டு ஈக்வலா மாஸ் காட்டுற வித்தை அஜித்தால மட்டும்தான் முடியும். சரி, இவங்க ரெண்டு பேருக்கும்தான் சண்டை அப்டின்னு அசால்ட்டா விட்டுட முடியாது. இவங்க படத்தை இயக்குநர்களையும் சிலசமயம் குடும்ப உறுப்பினர்களையுமே விட்டுவைக்காத அளவுக்கு மோசமா நடந்த சம்பவங்களும் உண்டு.

என்னதான் இருதரப்பு ரசிகர்களும் முடிந்தளவுக்கு அவரவர் அபிமான ஹீரோவுக்கும் முட்டுக்கொடுத்தாலும், வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள்தான் நடிக்கிற மொமெண்ட்டை அவர்களும் கடந்துதான் வரவேண்டியிருக்கு. கதையே கேட்கமாட்டார், ஸ்கிப்ட்டைவிட இயக்குநரோட ஜாதகத்தை அதிகம் நம்புவார், அப்படி சிக்குற இயக்குநரை அஞ்சாறு வருசத்துக்கு குத்தகைக்கு எடுத்துக்குவார், புரமோஷனுக்கு வரமாட்டார், படம் ஜெயிக்குதோ தோக்குதோ கவலையே படமாட்டார், ரசிகர்கள்கிட்டேர்ந்து விலகியே இருப்பார், செல்ஃபி கூட எடுக்க விடமாட்டார், அட இவ்வளவு ஏன் ஒரு படத்தோட அப்டேட் வாங்க கிரிக்கெட் மேட்ச் நடக்குற கிரவுண்டுல எல்லாம் பேனர் பிடிக்க வேண்டியதாயிருக்குன்னு அஜீத்மேல் அவரோட ரசிகர்களுக்கு சில வருத்தங்கள் உண்டு. எங்கே சிறுத்தை சிவா மறுபடியும் தலகூட ஜாய்ண்ட் அடிச்சிருவாரோன்னு தூக்கம் வராம பொரண்டு படுத்ததை வெளிய சொல்லமுடியாம புழுங்கிக்கொண்டிருக்கும் தல ரசிகர்கள் ஏராளம்.

Ajith, Vijay
Ajith, Vijay

அதே அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தா, சொந்த அப்பாகூடவே பேச்சுவார்த்தை இல்லாம இருக்குறவர் அரசியல் அது இதுன்னு தேவை இல்லாம அகலகால் வைக்கிறார்ன்னு விஜய் ரசிகர்களுக்கும் சில சோகங்கள் நெஞ்சோடு இருக்கும்.

ரெண்டு பேரோட ரசிகர்களும் தங்களோட தலைவன்தான் பெரிய ஆளுன்னு நிரூபிக்க போடுற சண்டை, அதுக்கு ஒதுக்குற நேரத்தை எல்லாம் நேர்மறையா பயன்படுத்தி இருந்தா, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு எப்பவோ எட்டிப் பிடிச்சிருக்கும். தல தளபதி ரசிகரா ஒரு நாள் இருந்து பார்த்தாதான் தெரியும், எத்தனை போஸ்ட்கள், எத்தனை கமெண்ட்கள், எத்தனை முட்டுக்கொடுத்தல்கள், எத்தனை மீம்கள்னு. ஒரு போருக்கு தயாராக ரெண்டு தரப்புக்கும் சோசியல்மீடியாவுல ஒரு போஸ்ட் போதும்.

சரி, பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சி. விஜய் அஜித் ரெண்டு பேருமே தோராயமா 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குறாங்க. அப்படி இப்படின்னு ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபா ஆகுது. ஒரு நாளைக்குங்க. இந்த ரெண்டு பேருக்காக சண்டை போடுற எத்தனை பேரோட வருஷ சம்பளம் 10 லட்சத்தைத் தொடும்னு நினைக்கிறீங்க? தங்களோட அபிமான நடிகரோட ஒருநாள் சம்பாத்தியத்தை ஈடுகட்ட வருஷம் முழுக்க உழைச்சாலும் பக்கத்துல கூட வரமுடியாது.

Also Read – பாடகர், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் – தேவனின் சினிமா பயணம்!

ஆகா, அட்வைஸ் பண்ண போறாண்டா எஸ்கேப் ஆகிடுவோம்னு நினைக்காதீங்க. அட்வைஸ் எல்லாம் இல்ல, கள நிலவரம். அவ்வளவுதான். இந்த ரெண்டு பேருல யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க? ரெண்டு பேருமே கெட்டவங்க கிடையாது, பதிலா ரெண்டு பேருமே அப்பாவிங்கதான். இதே சண்டையை ரெண்டு அரசியல் கட்சிக்காரங்க போட்டாங்கன்னா அவங்களுக்கு ஆகுற சேதாரத்தைப் பொருத்து கட்சியில போஸ்டிங் கிடைக்கும். ஆனா சினிமா சண்டையில ஈடுபடுற ரசிகர்களுக்கு என்ன கிடைக்கும்? தன்னுடைய ரசனைதான் உசத்தின்னு தூக்கிப்பிடிக்கிறதுக்காக நேரத்தையும் எனர்ஜியையும் பத்து பைசா பிரயோசனம் இல்லாத ஆன்லைன் சண்டைக்காக பயன்படுத்துவங்களை அப்பாவிங்கன்னுதானே சொல்ல முடியும். இன்னொன்னும் சொல்லலாம், அப்புறம் இந்த வீடியோக்கு லைக் வராது. அதனால டீசண்ட்டா அப்பாவிங்கிறதோட முடிச்சுக்குவோம். எப்படியும் ரெண்டு படையும் சேர்ந்து இன்னிக்கி என்னை content ஆக்கப்போறீங்கன்னு தெரியும். அடிங்க, ஆனா, நான் சொல்றதுல இருக்க நியாயத்தை புரிஞ்சுகிட்டு அடிங்க. ஸ்டார்ட் மியூசிக்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top