பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பயிருக்கு உரங்களைக் கொடுக்கிறோம். ஆனால் அதே நிலத்தின் மண்ணைப் பற்றி யோசிப்பதில்லை. மண் ஆரோக்கியமும் பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம். அதனால் மண் வளத்தைப் பாதுகாப்பது விவசாயிகளின் கடமைகளில் ஒன்று. மண் வளத்தைப் பாதுகாத்தால் மகசூல் அள்ளலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் என்னென்ன பயிர்கள் விளைவித்தால் எவ்வளவு உரங்கள் உபயோகிக்கலாம் என்ற தகவல் கிடைத்துவிடும். கூடுதலாக ஒரு மண்ணுக்கு, குறிப்பிட்ட பயிர் வகைகளைப் பயிர் செய்யலாம் என்ற தகவலும் கிடைக்கும்.
மண் வளம் மாறுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
மண்ணில் களர்த்தன்மை (பி.எச்.8.5-க்கு மேல்), உவர்த்தன்மை ஆகியவை அதிகரித்தால், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது. மகசூல் பாதிக்கப்படும்.
மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்?
- மண்ணில் உள்ள களர், அமிலத் தன்மைகளை அறிந்து தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு – இவற்றின் அளவை அறிந்து இட்டு உரத்துக்கான செலவைக் குறைத்து அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்.
- மண்ணின் உவர்த்தன்மைகளை அறிந்து வடிகால் வசதியைப் பெருக்கலாம்.
- உப்பைத் தாங்கி வளரும் சூரியகாந்தி, பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்யலாம்.
- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறியலாம்.
- மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம்.
மண் மாதிரி எங்கே சேகரிப்பது?
மண்ணின் வளமும், தன்மையும், ஒரே வயலில் கூட இடத்துக்கு இடம் மாறுபடும். அதனால், ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக் கூடாது. ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 10 இடங்களில் மாதிரிகள் எடுக்க வேண்டும். அவற்றைப் பங்கீட்டு முறையில் கலந்து அரை கிலோ மண் மாதிரி எடுக்க வேண்டும்.
மண் மாதிரி எப்படி சேகரிப்பது?
ஆங்கில எழுத்தான V வடிவத்தில் குறிப்பிட்ட ஆழத்துக்கு வெட்ட வேண்டும். குழியின் இரு பக்கங்களிலும் மேலிருந்து கீழ்வரை சீராக அரை அங்குல கனத்தில் செதுக்க வேண்டும். வெட்டிய மண்ணை ஒரு சட்டியிலோ (அ) சாக்கிலோ போட வேண்டும். காய்ந்து வெடித்த வயலில் குழி வெட்டச் சிரமமாக இருந்தால் மண்கட்டி ஒன்றைப் பெயர்த்து மேலே வைத்து அதன் பக்கவாட்டில் மண்ணை குறிப்பிட்ட ஆழத்துக்குச் செதுக்கி எடுக்கவும். V வடிவ குழியின் ஆழம் பயிருக்குப் பயிர் மாறுபடும். நெல், கேழ்வரகு, கம்பு, வேர்க்கடலை ஆகியவற்றுக்கு மேலிருந்து 15 செ.மீ ஆழத்தில் மண் எடுக்க வேண்டும். பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளி ஆகியவற்றுக்கு மேலிருந்து 22.5 செ.மீ ஆழத்தில் மண் எடுக்க வேண்டும். தென்னை, மா மற்றும் பழத்தோட்ட பயிர்களுக்கு 30, 60, 90 செ.மீ என மூன்று அளவுகளிலும் மண் எடுக்க வேண்டும். நிலம் சாகுபடியில் இல்லாத சமயத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும்.
எங்கே மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது?
மண் மாதிரி எடுக்கும்போது எரு குவிந்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரநிழல் மற்றும் நீர் கசிவு உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும். மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல் மண்ணை நீக்காமல் கைகளால் அப்புறப்படுத்த வேண்டும்.
சேகரித்த மண்ணை எப்படிக் கொண்டு செல்வது?
வயலில் சேகரித்த மண் ஈரமாக இருக்கும்பட்சத்தில் நிழலில் உலர்த்த வேண்டும். சுத்தமான தரையிலோ, காகித விரிப்பிலோ மண்ணை சீராகப் பரப்பி நான்கு சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும். பின்னர் எதிர் மூலையில் இரு பாகங்களில் உள்ள மண்ணை நீக்கி விடவும். மீண்டும் மண்ணைப் பரப்பி முன்பு செய்தது போல் நான்கு சம பாகங்களாகப் பிரித்து வேறு எதிர் எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கிவிடவும். சுமார் அரை கிலோ மண்ணைத் துணிப்பையில் இட்டுக் கட்டி விபரங்களை இணக்கவும். அதை எடுத்து வேளாண்துறை மண் பரிசோதனை நிலையம், இப்கோவின் நடமாடும் மண் ஆய்வகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் அமைந்த ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றில் கொடுத்து மண் மாதிரிகளை ஆய்வு செய்து பயன் பெறலாம்.
மண் மாதிரிகளைப் பரிசோதிக்க மாவட்ட வாரியாகப் பரிசோதனை நிலையங்கள் இருக்கின்றன. அவற்றின் விபரங்களை https://bit.ly/3oQcVHW என்ற வேளாண் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Also Read – பனை விதையைத் தேர்வு செய்வது எப்படி… நடவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!