நவ்னீத் பிள்ளை

முள் இல்லா அன்னாசி விவசாயம் – அசத்தும் மலேசியத் தமிழர்!

“3 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் செய்யும் எண்ணம் வந்தது. விவசாயம் செய்ய நினைப்பவர்களுக்கு அரசுப் பயிற்சி அளித்து வந்ததால், அங்குச் சென்று தேவையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். மலேசியாவில் ஆண்டு முழுக்க மழையும் வெயிலும் இருக்கும். அந்தச் சூழலுக்கு அன்னாசிப் பழம் நல்ல மகசூல் கொடுக்கும் என்று தெரிந்து கொண்டேன். சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பழப்பள்ளத்தாக்கில் அரசு நிலத்தில் குத்தகைக்கு 25 ஏக்கரில் அன்னாசி சாகுபடி செய்தேன்” என்று விவசாயத்துக்கு வந்த கதையை விவரிக்கிறார், மலேசியத் தமிழரான நவ்னீத் பிள்ளை.

முள் இல்லா அன்னாசி

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கிறது, நவ்னீத் பிள்ளையின் பண்ணை. அங்கே 25 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள அன்னாசி அனைத்தும் முள் இல்லாத ரகங்களைச் சேர்ந்தது. இவரது பூர்வீகம் காரைக்கால். ஐந்து தலைமுறைக்கு முன்னர் மலேசியாவிற்குக் குடிபெயர்ந்திருக்கிறது, இவரது குடும்பம். ஆரம்பத்தில் புத்தக வெளியீட்டாளராக, தொழிலதிபராக இருந்த நவ்னீத் பிள்ளை இப்போது முழுநேர விவசாயி.

அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழம்

இவர் பயிரிட்டிருக்கும் அன்னாசி எம்.டி 2 எனப்படும் மில்லி டில்லார்டு ரகத்தைச் சேர்ந்தது. இதில் நாக்கை அரிக்கும் காரல் தன்மை இருக்காது. இப்பழம் நல்ல இனிப்புச் சுவையுடையது. மேற்பகுதியில் முட்களும் இருக்காது என்பது கூடுதல் தகவல். மலைப்பாங்கான ஏற்ற இறக்கமாக அமைந்துள்ளது, அந்த நிலப்பரப்பு. மல்ஷிங்க் ஷீட் முறையில் ஷீட் அமைத்துக் களை வராமலும், வறட்சியைத் தாங்கும் வகையிலும் 10 ஏக்கரில் 50 ஆயிரம் அன்னாசி நடவு செய்திருக்கிறார். மலேசியன் பைன்ஆப்பிள் இன்டஸ்ட்ரி போர்டு பயிற்சி, வழிகாட்டுதலுடன் 50 ஆயிரம் கன்றுகளையும் இலவசமாக வழங்கியிருக்கிறது. விவசாயத் துறை சார்பில் மண் பரிசோதனையும் இலவசமாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இங்குதான் வேறு விதமாக யோசிக்கத் துவங்கியிருக்கிறார், நவ்னீத். கன்று வைத்து 14 மாதங்கள் கழித்துத் தான் பலன் கிடைக்கும். அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும். என்.பி. ஏசியா பிரைவேட் லிமிட்டெட் எனும் பெயரில் நிறுவனம் தொடங்கி, மற்ற விவசாயிகளின் தோட்டத்தில் விளையும் அன்னாசிப் பழங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். அதற்கு அதிகமான நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அந்த நேரம் இவரது தோட்டப் பழங்களும் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இதனால் விற்பனைக்கு எங்கேயும் போகவில்லை. அளவுக்கு அதிகமாக விளைந்ததால் வெறும் பழங்களை மட்டும் விற்காமல் அதை ஜூஸ் ஆக மதிப்புக் கூட்ட ஆரம்பித்திருக்கிறார். அதில் சர்க்கரை, ரசாயனம் என எதுவும் கலப்பதில்லை என்பதால் விற்பனையும் நன்றாக இருந்திருக்கிறது. பழமாக விற்பனை செய்ததைவிட ஜூஸ் விற்பனையில் இருமடங்கு லாபம் கிடைத்திருக்கிறது.

அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழம்

தொழிலதிபர் மூளை என்பதால் அடுத்ததாக அன்னாசியின் நடுத்தண்டு பகுதியிலிருந்து அழகுக்கிரீம் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். விவசாயியாக வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில் மாநில விவசாயம் மற்றும் உணவு தொழில்துறை சார்பில் சிறந்த நான்கு விவசாயிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வைத்த தேங்காயும் காய்ப்புக்கு வரவே அதிலிருந்து தேங்காய்ப்பால் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

நிலத்தில் ஐ.ஓ.டி எனப்படும் நவீனத் தொழில்நுட்ப சென்சார் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தை 6 பகுதிகளாகப் பிரித்து வீட்டில் இருந்து கண்காணித்துக் கொள்கிறார், நவ்னீத். இந்த இந்த தொழில்நுட்பம் மூலம் எந்த பகுதியில் தண்ணீர், நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை உள்ளதெனக் கண்காணித்து அதற்கேற்ப தண்ணீர்ப் பாதையை மாற்றவும் முடியும். இதனால் ஒவ்வொரு செடியாகச் சென்று பார்க்க வேண்டிய நேரமும் அலைச்சலும் குறைகிறது. தற்போது பழத்தோட்டம், தொழிற்சாலை, ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அரசிடம் 100 ஏக்கர் குத்தகை நிலம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நவ்னீத் பிள்ளை
நவ்னீத் பிள்ளை

விவசாயப் பணிகளை எளிமையாக்கினால் விவசாயிகள் ஆர்வமாக வேலை செய்வர் என்பது இவரது தாரக மந்திரம். தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது கடினமான வேலை என்பதால் அதற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் விவசாய வேலை செய்பவர்கள் களைப்பாக உணர்வதில்லை. இதுவும் விவசாய வெற்றிக்கு முக்கிய காரணம்.

Also Read – மண் பரிசோதனை ஏன் அவசியம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top