விதைப்பந்து

விதைப்பந்து வீசும் முன் இதெல்லாம் கவனிங்க!

 விதைப்பந்துகளைத் தூவினால் மரங்கள் அதிக அளவில் வளரும் என்ற கருத்து சமீபகாலமாக அதிக அளவில் பரவி வருகிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழலியல் மீதான ஆர்வம் கொண்ட நபர்கள் குழுக்களாகப் பிரிந்து விதைப்பந்துகளை வீசி வருகிறார்கள். ஆனால் இந்த விதைப்பந்துகள் அனைத்துமே மரமாகுமா என்றால் கேள்விக்குறிதான். மரம் வளர்ப்பு ஆலோசகர்களும், வனத்துறை சார்ந்த அதிகாரிகளும் விதைப்பந்துகளை விதைக்கும் முறை குறித்துப் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

விதைப்பந்து தொழில்நுட்பம் எங்கிருந்து வந்தது?

விதைப்பந்து
விதைப்பந்து

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி மசனாபு ஃபுகோகா விதைப்பந்தை அறிமுகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. நெல், பார்லி ஆகியவற்றில் விதைப்பந்துகள் உருவாக்கி விதைப்பந்தை சோதனை செய்து பார்த்துள்ளார். விதைப்பந்துகள் பற்றித் தன்னுடைய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்துத்தான் இன்றைய விதப்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

 விதைப்பந்துகள் தயாரிப்பது எப்படி?

நல்ல வளமான மண் 5 பங்கு, மாட்டுச் சாணம் 3 பங்கு, சிறிதளவு சிறுதானிய விதைகளை நன்றாகக் கலந்து, தண்ணீர் ஊற்றிப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்க வேண்டும். உருண்டையின் நடுவில் சிறிய பள்ளம் எடுத்து, அதில் மர விதையை வைத்து மீண்டும் மண்ணை வைத்து உருண்டைகளாக்க வேண்டும். பின்னர் 2 மணி நேரம் வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார். இதைச் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.

விதைப்பந்து
விதைப்பந்து

எப்போது விதைப்பந்துகள் வீசலாம்?

அறிவியல் ரீதியாக, ஈரப்பதம் உள்ள மண்ணில் விதைகள் நன்றாக முளைக்கும். பொதுவாக மழை அதிகமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைகளை வீசினால் நல்ல பலன் கிடைக்கும். இது ஏதோ அரிய தொழில்நுட்பம் கிடையாது. காட்டில் உள்ள ஒரு மரத்திலிருந்து விதை விழுந்து தானாக முளைக்கும் தொழில்நுட்பம்தான். ஆனால் இப்படி விழும் விதைகளில் 10 சதவிகிதம் விதைகள் மட்டுமே முளைக்கும். விதைகளை நேரடியாகவும் வீசலாம். விதைப்பந்துகளாக்கியும் வீசலாம். ஆனால் எந்தப் பகுதியில் வீசுகிறோம் என்பதுதான் முக்கியம்.  

விதைப்பந்துகளை எங்கு வீசலாம்?

விதைப்பந்து
விதைப்பந்து

அதிகப் பரப்பளவில் உள்ள மலைகள் மற்றும் வனப்பகுதிகள்தான் விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்க்க ஏற்றவை. ஏற்கெனவே அந்தச் சூழலில் நன்கு வளர்ந்துள்ள மரங்களின் விதைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மழை பெய்யும்போது அந்த விதைப்பந்துகள் ஈரமாகி அதிலிருக்கும் விதை முளைத்து விடும். எங்கெல்லாம் மரக்கன்றுகள் வைத்துத் தினசரி பராமரிக்க முடியாதோ அங்கெல்லாம் விதைப் பந்துகளாக வீசி மரங்களை வளர்க்கலாம். வனப்பகுதிகளில் இந்த விதைப் பந்துகளை வீசுவதன் மூலம் வனப்பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கை அதிகமாகி அடர்ந்த காடுகளை உருவாக்க முடியும். வெளிநாடுகளில் கேப்சூல் வடிவில் விதைப்பந்துகளை உருவாக்கி அதை விமானம் மூலம் காடுகளில் தூவுகின்றனர். ஆனால் கிராமங்களில் தூவப்படும் விதைப்பந்துகளில் இருந்து முளைக்கும் செடிகளைக் கால்நடைகள் கடித்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே வனப் பகுதிகளில் இடம் பார்த்து விதைப்பந்துகளை தூவ வேண்டும்.

 என்னென்ன விதைகளை விதைக்கலாம்?

வேம்பு மாதிரியான மரங்களில் உள்ள விதைகளில் ஈரப்பதம் இருப்பதால் அந்த விதைகளை அப்படியே விதைப்பந்துகளாக்கலாம். வேம்பு வனப்பகுதிகளில் அதிகமாக முளைத்து வளரும்.  இதுதவிர, புங்கை, வேங்கை, மகிழம், இலவம், வாகை, கொய்யா, புளி போன்ற நாட்டு மர விதைகளை விதைப் பந்துகளாகத் தூவலாம். விதைப் பந்துகள் மற்றும் கன்றுகள் வளர்ப்பதற்கு நாட்டு மர விதைகளே சிறந்தது. அதனால் இந்த மாதிரியான மரங்களின் விதைகளைப் பயன்படுத்தி விதைப்பந்து தயாரிக்கலாம். அதேபோல முளைப்புத் திறனை அதிகரிக்க, கடினமான தோல் உடைய விதைகளை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து விதைப்பந்து தயாரிக்கலாம்.

விதைப்பந்து
விதைப்பந்து

விதைப்பந்துகளை தவிர்க்க வேண்டிய இடங்கள்

விதைப்பந்துகள் வீசும் இடங்களிலெல்லாம் முளைத்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பருவம், சூழல், விதைக்கும் இடம் ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே விதைப்பந்துகள் முளைக்கும்.  தரிசு, கட்டாந்தரை மாதிரியான இடங்களில் வீசப்படும் விதைப்பந்துகள் வளர்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆட்கள் புழக்கம் அதிகம் இல்லாத இடங்களில் மட்டும் விதைப்பந்துகளை வீசலாம். விளை நிலங்கள் இருக்குமிடத்தில் இப்பந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

Also Read – மண் பரிசோதனை ஏன் அவசியம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top