இன்றைய அவசர உலகிலும், நெருக்கடியான சூழலிலும் அவரவர் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை முடிந்தவரை அவர்களே உற்பத்தி செய்து கொள்வது சிறந்தது. அதற்காக ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. மொட்டை மாடி இருந்தால் போதும். அந்த இடத்தில் தேவையான காய்கறிகள், கீரைகளை உற்பத்தி செய்து கொள்ளலாம். அதற்குத் தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கினாலே போதும். புதிதாகத் தோட்டம் அமைப்பவர்கள் மாடித்தோட்டம் போடுகிறேன் பேர்வழி என்று வீட்டைச் சேதப்படுத்தும் வேலையைச் செய்துவிடக் கூடாது. தோட்டம் போடும்போது, வீடு சேதமடையாமல் கவனமாகச் செய்ய வேண்டும்.
மாடித்தோட்டத்தில் செய்யக் கூடாத முக்கியமான 10 விஷயங்கள்
- கோடைகாலத்தில் மாடித்தோட்டம் அமைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாடித்தோட்டம் அமைக்க ஜூன், ஜூலை மாதங்கள்தான் ஏற்றது.

- மாடித்தோட்ட அமைக்கிறோம் என்ற ஆர்வத்தில் வெறும் மண்ணை மட்டும் தொட்டியில் நிரப்பி விதைகளை வைக்கக் கூடாது. மாடித்தோட்டத்துக்குத் தொட்டிகள்தான் அடிப்படை. அதனால் ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் அல்லது மண்புழு உரம் என இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைக்க வேண்டும். இந்தக் கலவை தயாரானதும் உடனே விதைக்காமல், 7-10 நாட்கள் காய வைத்தால் நுண்ணுயிரிகள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இதன் பின்னர் விதைப்பு செய்யலாம். செடிகளும் நல்ல பலனைக் கொடுக்கும்.
- பைகளை நேரடியாகத் தளத்தில் வைக்கக் கூடாது. பாலித்தீன் விரிப்போ அல்லது மரத்தாலான பலகை அமைத்தோ மீதோ வைக்கலாம். அதேபோலப் பைகளை நெருக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

- மாடித்தோட்டத்தில் தண்ணீர் ஊற்றும்போது, தொட்டி தழும்பும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இது மிகவும் தவறு. செடிகளுக்கு ஈரப்பதம் இருக்குமாறு அளவாகத் தண்ணீர் ஊற்றினாலே போதுமானது. அதிகமாகத் தண்ணீர் ஊற்றும்போது வேர் அழுகிவிடும். அதேபோலச் செடிகளுக்குக் காலை, மாலை என இரண்டு வேளைகளில் தண்ணீர் ஊற்றலாம். அதிக வெயில் உள்ள நண்பகல் வேளையில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இப்படிச் செய்தால் செடிகள் விரைவில் கருகிவிடும்.
- மாடித்தோட்டத்தைத் தினசரி பராமரிக்கும் பழக்கம் இல்லை என்றாலும், வாரம் ஒருமுறையாவது செடிகளைப் பராமரிக்க வேண்டும். செடிகளில் நோய்த்தாக்குதல் இருக்கிறதா, பூச்சிகள் தக்கியிருக்கிறதா என்பதையும் கவனித்து அதற்கான பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். பூச்சித்தாக்குதல் அதிகமாக இருந்தால் பாதித்த செடியின் பாகங்களை அப்புறப்படுத்திவிடுதல் நல்லது.

- செடிகளுக்குப் பராமரிப்பு என்ற பெயரில் வேப்ப எண்ணெய் மாதிரியான இடுபொருட்களை அதிகமாகத் தெளிக்கக் கூடாது. செடி கருகிப் போகவும் வாய்ப்பு உண்டு.
- அலங்காரச் செடிகளைத் தவிர்த்து அத்தியாவசியமான காய்கறி, கீரை, மூலிகை, மலர்ச் செடிகளை வளர்க்க வேண்டும். அலங்காரச் செடிகளுக்குக் கொடுக்கும் தண்ணீர் வீணாவதையும், சத்தான காய்கறிகள், கீரைகளைப் பெறலாம்.
- மாடித் தோட்டத்தில் (செடி முருங்கையைத் தவிர) வேறு மரங்களை வளர்க்க வேண்டாம். காற்றின் வேகத்தில் மரங்கள் சாயும் ஆபத்து உண்டு, கட்டிடத்துக்கும் நல்லதல்ல. அதே நேரம் குட்டை ரக அத்தி, மா மாதிரியான பழ மர வகைகளும் கிடைக்கின்றன. அவற்றையும் மாடித்தோட்டத்தில் வளர்க்கலாம்.
- மாடித்தோட்டத்தில் குறைவான வெப்பநிலையில் வளரும் செடிகளை நிழல் பாங்கான பகுதியிலும், வெயில் தேவைப்படும் செடிகளை வெயில்படும் இடங்களிலும் வைக்கலாம். சிலர் எல்லா செடிகளையும் வெயில் பாங்கான பகுதியிலேயே வளர்க்கின்றனர்.
- இயற்கையாகக் காய்கறிகளை விளைவிப்பதே மாடித்தோட்டத்தின் நோக்கம். அதனால் மாடித்தோட்டத்தில் ரசாயன உரங்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
Also Read – மழைக்காலத்தில் மாடித்தோட்ட பராமரிப்பு – இதெல்லாம் செய்யாதீங்க..!
0 Comments