எலெக்ட்ரிக் வாகனங்களின் ஜீவநாடியான பேட்டரிகள் எதனால் செய்யப்பட்டவை.. அவை வெடிப்பது ஏன்?
எலெக்ட்ரிக் வாகனங்கள்
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உலக அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை ஆரோக்கியமான எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தை இந்தியாவிலும் பெரிய அளவுக்கு வளர்ந்து வருகிறது. சமீப நாட்களாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகள் வெடித்து, தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிகம் நடப்பதைக் கேள்விப்படுகிறோம். இந்த விபத்துகள் ஏன் நடக்கின்றன.. எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் ஏன் தீப்பற்றி எரிகின்றன… அதற்கான காரணங்கள் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.

பேட்டரிகள்
எலெக்ட்ரிக் வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயான் (Li-Ion) வகை பேட்டரிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை, சரியான முறையில் தயாரிக்கப்படாமலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அல்லது பேட்டரியை இயக்கும் சாஃப்ட்வேர்கள் சரியாகச் செயல்படாமல் இருந்தாலோ அவை எளிதில் தீப்பற்றும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள். லெட்-ஆசிட் பேட்டரிகள் குறைந்த அளவு மின்சாரத்தையே சேமித்து வைக்கும். இதனால், இந்த வகை பேட்டரிகளின் பயன்பாடு மிகவும் குறைவே.

ஏன் தீப்பிடிக்கிறது?
எல்லா வகை பேட்டரிகளிலும் கேத்தோடு – ஆனோடு மற்றும் Separator எனப்படும் இரண்டையும் பிரிக்கும் பகுதி என இவை மூன்றும் பொதுவாகவே இருக்கும். இதில், பேட்டரிகள் தீப்பிடித்து விபத்து ஏற்பட முக்கியமான காரணம் Separator-களாகவே இருக்கும். பேட்டரியின் நேர்மறை மற்றும் எதிர்மறை முனைகளைப் பிரித்து வைக்கும் அதேநேரத்தில் இரண்டு முனைகள் இடையேயான அயனிகளின் இயக்கத்தையும் நடத்துவது Separator-களின் அடிப்படைப் பணி. அதேநேரம், பேட்டரிகள் நடக்கும் வேதியியல் மாற்றம் அல்லது வேறு புறக்காரணிகளால் Separator-களில் தீப்பிடிக்கலாம்.

பொதுவாக சார்ஜிங்கின்போது பேட்டரிகள் லேசாக விரிவடையும். அதில் இருக்கும் மின்சாரம் முழுவதுமாகப் பயன்படுத்தப்படும்போது, அவை லேசாக சுருங்கும். இதனால் ஏற்படும் அழுத்தம் Separator-கள் சரியாகச் செயல்படுவதைத் தடுக்கலாம். இவை செயலிழக்கும்போது ஆனோடு – கேத்தோடு இடையே தொடர்பு ஏற்பட்டு, உடனடியாக விபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. அதேபோல், பேட்டரியை ஓவர் சார்ஜ் செய்யும்போது சூடாகிறது. இந்த வெப்பத்தால் பாதிக்கப்பட்டும் Separator-கள் செயலிழக்கலாம். மெல்லிய இழையாலான Separator-களால் எந்தவொரு புற அழுத்தத்தையும் தாங்க முடியாது. அவற்றின்மீது அப்படியான அழுத்தம் விழும்போதும் தீ விபத்துகள் ஏற்படலாம்.
Also Read: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா… செக் பண்ண வேண்டிய 7 விஷயங்கள்!
0 Comments