உலக அளவில் பெரும்பாலான வர்த்தகப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர்களில் நடப்பதால், அதற்கு இணையான மற்ற நாட்டின் கரன்சிகளின் மதிப்பு, அதன் பொருளாதார சக்தியை நிர்ணயிப்பதாக இருக்கிறது.
அமெரிக்க டாலர் – இந்திய ரூபாய்
1947-க்கு முன்பு ஒரு டாலருக்கு இணையாக ஒரு ரூபாய் என்றிருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, 1952-ல் ரூ.4.79 என்று நிர்ணயிக்கப்பட்டது. இதுவே, 1995-ல் ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.32 ஆக இருந்தது. 2000-த்துக்குப் பிறகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 2013-ல் ஒரு டாலர் என்பது இந்திய ரூபாயில் 68 ரூபாயாக இருந்த நிலையில், இது தற்போது ரூ.75-க்கு மேல் சென்றிருக்கிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?
அமெரிக்க டாலரின் தேவை மற்றும் வழங்கல் (Supply and Demand) அடிப்படையில் இந்திய ரூபாய்க்கு இணையான அதன் மதிப்பு கணக்கிடப்படும். இதற்கு முக்கியமான காரணம், உலகின் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பொதுவான பணமாக அமெரிக்க டாலர் ஏற்றுக்கொள்ளப்படுவதே. இந்திய ரூபாயின் மதிப்பைப் பொதுவாக அரசோ, எந்தவொரு தனியார் நிறுவனமோ நிர்ணயிப்பதில்லை. பின்னர் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?
Also Read:
அந்நிய செலவாணி
உலக அளவில் வர்த்தகப் பரிவர்த்தைனைகள் மேற்கொள்ளப்படுவதால், அமெரிக்க டாலர்களை ஒவ்வொரு நாடுமே கையிருப்பாக வைத்துக் கொள்ளும். இதை அந்நிய செலவாணி கையிருப்பு என்பார்கள். ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருக்கும் இந்த அந்நிய செலவாணி, இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் நேரங்களில், அதாவது டாலருக்கான தேவை அதிகமாக இருக்கும் நேரத்தில் வெளியிடப்படும்.

Demand – Supply தவிர இந்திய ரூபாயின் மதிப்பை நிர்ணயிப்பதில் 5 காரணிகள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன.. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.
பணவீக்கம்
பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்று நீங்கள் செய்திகளில் படித்திருக்கக் கூடும். பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவதற்காக நாம் கொடுக்கும் விலை, அவை அரிதாகிப் போனால் கூடும்தானே… அதேபோல், தேவைக்கு அதிகமாகப் பணத்தை அச்சிட்டு வெளியிட்டாலும் பணவீக்கம் ஏற்படும். இந்த இரண்டு காரணங்களால் பணவீக்கம் ஏற்படும். இதனால், பணத்தின் மதிப்பு குறைந்து, அதன் வாங்கும் சக்தியும் சர்வதேச சந்தையில் குறையும்.
ரெப்போ வட்டி விகிதம் (Reppo Rate)
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் பணத்துக்கான வட்டி விகிதம் ஆகும். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4% ஆக நிர்ணயித்திருக்கிறது. இந்த வட்டி அதிகரிக்க அதிகரிக்க, முதலீட்டாளர்கள் அரசு வெளியிடும் முதலீட்டுப் பத்திரங்களை வாங்க முனைவார்கள். இதனால், தேவை அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பும் உயரும். ஆனால், வங்கிகளுக்குக் கொடுக்கும் பணத்துக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அதிகமாக வைத்திருப்பதால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கான வட்டியை அதைவிட அதிகமாக நிர்ணயிப்பார்கள். இதனால், வாடிக்கையாளர்கள் கடன் பெறவே தயங்குவார்கள். புதிதாகத் தொழில் தொடங்கவோ, புதிய கார் அல்லது வீடு வாங்கவோ வங்கிகளில் கடன் பெற மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்படும். இந்தத் தொடர் சங்கிலி நிகழ்வுகளால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியே சுணங்கும் அபாயம் உண்டு.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் நிலை
ஒரு நாடு, பெரும்பான்மையான பணத்தை தேவையான பொருட்கள், சேவைகளை இறக்குமதி செய்யவே பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருவாய் அதைவிட மிகவும் குறைவாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசமே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நிலை என்று அழைக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், சேவைகளுக்கு வெளிநாட்டுப் பணத்தைக் கொடுக்க வேண்டி வரும். ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தால் அதை ஈடுகட்ட முடியாத நிலையில், அந்நிய செலவாணி கையிருப்பு கரையும். இதனால், அந்த நாட்டுடைய பணத்தின் மதிப்பு குறையத் தொடங்கும்.
தங்கத்தின் இறக்குமதி, ஏற்றுமதி
இதற்கு முந்தைய தலைப்பில் நாம் பேசியது போலவே, ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிப்பது பணத்தின் மதிப்புக்கு நல்லதல்ல. அதேநிலைதான், இங்கும். இந்தியாவில் 25,000 டன்னுக்கும் அதிகமான தங்கம் நகைகளாக வீடுகளில் இருக்கிறது என்கிறார்கள். ஒரு நாட்டில் தங்க சுரங்கம் பெரிதாக இல்லாத நிலையில், அதன் தேவைக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் என்பது பலவீனமாகதாகவே பார்க்கப்படும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தால், இந்திய ரூபாயின் மதிப்பு அதற்கு எதிர்மறையாகக் குறையத் தொடங்கிவிடும்.

நாட்டின் கடன்
ஒரு நாடு, அதன் பட்ஜெட்டில் பெரும்பாலான செலவுகளைக் கடன் வாங்கியே சமாளிக்கிறது என்று வைத்துக் கொண்டால், அந்த நாட்டின் பொருளாதார நிலை சரியாக இல்லை என்று பொருள். அப்படியான சூழலில் அந்த நாட்டின் பணத்துடைய மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். இதனால்தான், ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், நேர்மறையான எதிர்பார்ப்புகள் இருந்தால் பங்குச் சந்தைகள் ஜெட் வேகத்தில் எகிறும். அதேநேரம், எதிர்மறை எதிர்பார்ப்புகளால் பங்குச் சந்தை புள்ளிகள் அதல பாதாளத்துக்குச் சென்றதையும் பார்த்திருப்பீர்கள்.
Also Read – Personal Loan: பெர்சனல் லோன் எடுக்கப் போறீங்களா… இதையெல்லாம் செக் பண்ணிக்கோங்க பாஸ்!
0 Comments