IOB

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனியார் வசம் செல்கிறதா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக இருப்பதாக அறிவித்தார். அப்போது அந்த இரண்டு வங்கிகள் எவை எனக் குறிப்பிடவில்லை. மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னர் தனியார்மயமாக உள்ள இரண்டு வங்கிகளின் பெயரும் வெளியிடப்படும் கூறப்பட்டிருந்தது. தனியார்மயமாக்குதல் நடவடிக்கையில் வங்கி ஊழியர்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய மாட்டார்கள் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் தனியார்மயமாக்கப்படலாம் என தகவகள் தெரிவிக்கின்றன.

Indian Overseas Bank
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் முன்னணி வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மு.சி.த.மு சிதம்பரம் செட்டியார் என்பவரால் 1937-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டில் இந்த வங்கியானது நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது தனியார் வசம் ஒப்படைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனியார்மயமாக்கலை அதிகம் ஊக்குவித்து வரும் நிலையில் , இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார்மயமாக்கப்படும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறிவனத்தை தேர்வு செய்யும் பொறுப்பு நிதி ஆயோக்கிடம் உள்ளது. தனியார்மயமாக்கல் தொடர்பான அறிக்கையை மத்திட அரசிடம் நிதி ஆயோக் அமைப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிற வங்கிகளை ஒப்பிடுகையில், ஐ.ஓ,பி வங்கியில், பிற கிளைகளுக்குப் பணம் செலுத்துதல், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் ஐஓபி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும், சேவைக் கட்டணம் இல்லாமல், பணம் எடுக்க இயலும். பிற வங்கிகளில், இதற்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் உள்ளிட்டவற்றை ஐ.ஓ.பி வழங்கி வருவதாகவும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள் ஐஓபி வங்கியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வைகோ

தொடர்ந்து அந்த அறிக்கையில், “மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரிகளிலும் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஐ.ஓ.பி. வங்கிக் கிளை செயல்பட்டு வருகின்றது. 2005ஆம் ஆண்டு, ஐ.ஓ.பி. வங்கியை, வடமாநில வங்கியுடன் இணைக்கத் திட்டமிட்டபோது, கருணாநிதி கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். எனவே, அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது. இதுவரை, ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட புதிதாகத் தோற்றுவிக்காத பாஜக அரசு, ஏற்கெனவே இருக்கின்ற பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க முயல்வது, பெருங்கேடு ஆகும்.

ஏற்கெனவே, ‘பேங்க் ஆஃப் தமிழ்நாடு’ என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்தார்கள். இப்போது, ஐஓபியைத் தனியாருக்கு விற்க முயல்கின்றார்கள். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற, 85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமைமிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற பொதுத்துறை நிறுவனத்தை, தனியாரிடம் கொடுப்பதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார். வைகோவின் அறிக்கையைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் ஐ.ஓ.பி வங்கி தனியார்மயமாக்கலுக்கு எதிராக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read : அண்ணாமலை முதல் புன்னகை தேசம் வரை… 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் மோட்டிவேஷன் படங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top