மாஸ்டர் கார்டு

`மாஸ்டர் கார்டு’-க்கு செக்!… ரிசர்வ் வங்கி நடவடிக்கையின் பின்னணி என்ன?

வேலைகளை குறைக்க வைக்கும் தொழில்நுட்பங்களுடன் நம்முடைய வாழ்க்கை முறை எளிதாக பழகிக்கொள்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முந்தைய நாள்களில் எல்லாம் வங்கியில் கால் கடுக்க நின்று பணத்தை வித்ட்ரா செய்யவோ அல்லது டெபாசிட் செய்யவோ வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் அதற்கான வசதிகள் எளிமையாகிவிட்டன. குறைந்தபட்சம் ஏ.டி.எம் கார்டுகள் இருந்தாலே நம்முடைய வங்கி தொடர்பான பெரும்பாலான வேலைகள் முடிந்துவிடுகின்றன. இதுமட்டுமில்லாமல் ஷாப்பிங் போன்றவற்றுக்கும் ஏ.டி.எம் கார்டுகளையே பயன்படுத்தி வருகிறோம். வங்கிகளில் விசா, ரூபே மற்றும் மாஸ்டர் போன்ற நிறுவனங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கியானது தடைவிதித்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்களை தங்களது நெட்வொர்க்கில் இணைப்பதற்கு ஜூலை 22-ம் தேதி முதல் மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளை மாஸ்டர் கார்டு நிறுவனம் மீறியதற்காக இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கியானது சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புகளை உள்ளடக்கிய சர்வரானது இந்தியாவில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது. இதனை மாஸ்டர் கார்டு நிறுவனம் மீறியுள்ளது.

மாஸ்டர் கார்டு
மாஸ்டர் கார்டு

மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு அதிகமான அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் கொடுத்தும் சுற்றறிக்கை தொடர்பான நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுக்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி, யெஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆர்.பி.எல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் டை – அப் வைத்துள்ளனர். எனவே, இந்த வங்கிகள் எல்லாம் வரும் ஜூலை 22-ம் தேதி முதல் மாஸ்டர் கார்டு நெட்வொர்க்கின் கீழ் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ்  வங்கியின் இந்த வழிமுறைகளுக்கு இணங்க கார்டுகள் வழங்கும் வங்கிகள் மட்டும் வங்கிகள் அல்லாத நிறுவனங்களுக்கு மாஸ்டர் கார்டு நிறுவனமானது இதுகுறித்து தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மாஸ்டர் கார்டு
மாஸ்டர் கார்டு

ஆர்.பி.எல் வங்கியானது மாஸ்டர் கார்டு நெட்வொர்க்கில் மட்டுமே கிரெடிட் கார்டுகளை வழங்கி வருவதால் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டுள்ளது. அதில், “ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தொடர்பாக மாஸ்டர் கார்டு சொல்லப்போகும் தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் வழங்கப்பட்ட கார்டுகளில் முப்பது சதவிகிதத்துக்கும் மேலாக மாஸ்டர் கார்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, நீங்கள் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை. “ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு மாஸ்டர் கார்டின் தற்போதைய வாடிக்கையாளர்களை பாதிக்காது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை மக்கள் எப்போதும்போல பயன்படுத்தலாம்.

ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டின்னர்ஸ் கிளப் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் புதிய கார்டுகளை விநியோகிக்க மே 1-ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read : ஹோம் லோன் வட்டி விகிதங்கள் குறைவு… இப்போது வீடு வாங்குவது சிறந்ததா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top